தமிழாக்கம்: ராமலக்ஷ்மி
நான் இறக்கவிருந்த இரவில்
வியர்த்துக் கொண்டிருந்தேன் என் படுக்கையில்.
கேட்க முடிந்தது என்னால்
வெட்டுக்கிளியின் கீச்சொலியையும்
வெளியில் பூனையின் சண்டையையும்.
உணர முடிந்தது என்னால்
மெத்தையின் வழியே என் ஆன்மா
நழுவி விழுவதை.
தரையில் அது மோதிடும் முன் துள்ளி எழுந்தேன்
நடக்கக் கூட இயலாமல் பலகீனமாய் இருந்தேன்
ஆனாலும் சுற்றி வந்து
எல்லா விளக்குகளையும் எரிய விட்டேன்
திரும்பிச் சென்று மீண்டும் ஆன்மாவை
படுக்கையில் விழ வைத்தேன்
எல்லா விளக்குகளும் ஒளிர
விழித்துக் கிடந்தேன்.
ஏழு வயதில் எனக்கொரு மகள் இருக்கிறாள்
நிச்சயமாகத் தெரியும்
என் இறப்பை ஒருபோதும் அவள் விரும்ப மாட்டாள்
இல்லையெனில் என் இறப்பு
எனக்கொரு பொருட்டே இல்லை
ஆனால் அந்த இரவு முழுவதிலும்
எவரும் எனக்குத் தொலைபேசவில்லை
எவரும் மதுபானத்துடன் வரவில்லை
என் தோழியும் தொலைபேசவில்லை
என்னால் கேட்க முடிந்ததெல்லாம்
வெட்டுக்கிளியின் ஒலியை மட்டுமே.
புழுக்கம் அதிகமாய் இருந்தது
அதைச் சமாளிக்க
எழுவதும் படுப்பதுமாக இருந்தேன்,
சூரியனின் முதல் கதிரொளி
செடிகளின் ஊடாக
ஜன்னலின் வழியாக நுழையும் வரையில்.
அதன் பிறகு மீண்டும் படுக்கைக்குச் சென்றேன்
இந்தமுறை ஆன்மா
ஒருவாறாக என்னுள்ளே தங்கிவிட
தூங்கிப் போனேன்.
இப்போது தட்டத் தொடங்கினார்கள் மக்கள்
கதவுகளையும் ஜன்னல்களையும்.
தொலைபேசி ஒலித்தது
தொலைபேசி மீண்டும் மீண்டும் ஒலித்தது
பிரமாதமான கடிதங்கள் தபாலில் வந்தன
வெறுப்பைச் சுமந்தும் அன்பைச் சுமந்தும்.
எல்லாம் பழையபடியேதான் இருக்கின்றன.
*
மூலம்: “The Night I Was Going To Die”
By Charles Bukowski
**
Comments