Skip to main content

விருட்சம் இலக்கியச் சந்திப்பு









 அழகியசிங்கர் 



இலக்கிய உலகம் அமைதியாக இயங்கிக் கொண்டிருப்பது பிடிக்கவில்லை.  என்ன செய்யலாமென்று யோசித்தபோது இலக்கியக் கூட்டம் நடத்தலாமென்று தோன்றியது.  செப்டம்பர் மாதம் 2012 ஆம் ஆண்டு ஒரு கூட்டம் நடந்தது.  நடந்த இடம் பாரதியார் இல்லம்.  அசோகமித்திரனின் 82 வயது கூட்டம்.  பலர் கலந்து கொண்டு சிறப்பாக கூட்டம் நடந்தது.  அதன்பின் கவிதைகள் வாசிக்கிற கூட்டமொன்றை ஏற்பாடு செய்யலாமென்று நினைத்தேன்.  ஆனால் என்னால் முடியவில்லை.  முன்னதாகவே இப்படி கூட்டம் நடத்தப் போகிறேனென்று சொன்னால், கூட்டம் நடக்காமல் போய் விடுகிறது.  

முயற்சியை கை விட்டுவிட்டேன்.  ஆட்வான்ஸôக கொடுத்த 300ரூபாய் பணம் போய்விட்டது.  இனிமேல் இதெல்லாம் வேண்டாமென்று சும்மாதான் இருந்தேன்.  அப்போதாவது பணியில் இருந்தேன்.  நேரம் கிடைக்காது.  பிப்ரவரி மாதத்திலிருந்து பதவியிலிருந்து மூப்பு அடைந்தேன்.  சரி, இனிமேல் இலக்கிய உலகத்தை சும்மா விடக்கூடாது என்று தோன்றியது.  

என் நண்பர் ஒருவர், ஆடிட்டர் கோவிந்தராஜன், இதுமாதிரி கூட்டம் நடத்துவதில் ஆர்வம் உள்ளவர்.  என்னிடம் மாட்டிக்கொண்டார்.  அல்லது நான் அவரிடம் மாட்டிக் கொண்டேனா என்பது தெரியவில்லை.  கூட்டம் நடத்த இடம் கிடைத்து விட்டது.  தி. நகர்.  எல்லோரும் எளிதில் வந்து விடலாம்.ஒரு சனிக்கிழமை அதாவது 26.05.2014 அன்று.  யாரை முதலில் பேச சொல்வது?  எனக்கு திரும்பவும் அசோகமித்திரனைக் கூப்பிட்டு ஆரம்பிக்கலாமென்று தோன்றியது.  அவருக்கு போனில் செய்தியைச் சொன்னேன்.  அவர் சம்மதித்தார்.  தமிழில் புதிய இலக்கியப் போக்குகள் என்ற தலைப்பில் பேச ஒப்புக்கொண்டார்.  

24.05.2014 அன்று திரும்பவும் அசோகமித்திரனைக் கூப்பிட்டு கூட்டம் பற்றி சொன்னேன்.  அவர் உண்மையிலே மறந்து விட்டார்.  எனக்கு பெரிய சங்கடமாகப் போய்விட்டது.  அவர் வராவிட்டால் என்ன செய்வது என்று தோன்றியது.  அப்போது எப்படி கூட்டத்தை சமாளிப்பது என்று யோசித்தேன்.  நல்லகாலம்.  அசோகமித்திரன் கூட்டத்திற்கு வந்து விட்டார்.  அன்று ஒரு கல்யாணத்திற்குப் போக வேண்டிய அவசியம் அவருக்கு வந்துவிட்டது.  நானும் ஆடிட்டர் கோவிந்தராஜனும் காரில் போய் அவரை அழைத்து வந்தோம்.  வருவதற்குள் போதும் போதுமென்று ஆகிவிட்டது.  அவ்வளவு கூட்டம்.  வழக்கம்போல் கூட்டம் நடத்துமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  கூட்டத்திற்கு 20 பேர்கள் வந்திருந்தார்கள்.  பெரிய அளவில் விளம்பரம் கொடுக்க முடியவில்லை.  தினமணி மட்டும் தினசரி நிகழ்ச்சியில் அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  

அசோகமித்திரன் பேச ஆரம்பித்தபோதுதான் ஒன்று தெரிந்தது.  அவரால் சத்தமாகப் பேச முடியவில்லை என்று.  மேலும் அவர் வயதை நாங்கள் யோசிக்கவில்லை.  இந்தத் தள்ளாத வயதில் அவர் பேச ஒப்புக்கொண்டது பெரிய விஷயமாக எனக்குத் தோன்றியது.  அவர் பேசிய எல்லாவற்றையும் சோனி ஆடியோ வாய்ஸ் ரிக்கார்டு மூலம் பதிவு செய்தேன்.  கிட்டத்தட்ட 45 நிமிடங்கள் அசோகமித்திரன் பேசினார்.  

பொதுவாக அவர் தமிழ்நாவல்களைப் பற்றி பேசினார்.  இன்றைய நாவல்கள் சில புராண, சரித்திரம் அடிப்படையில் பக்கம் பக்கமாக தலைகாணி வடிவத்தில் எழுதப்படுகிறது என்று குறிப்பிட்டார்.  அதில் புதுமையில்லை என்றும் மறைமுகமாகவும் தாக்கினார்.  

'இந்த இடத்தில் இலக்கியக் கூட்டம் என்றால் 20பேர்கள்தான் இருக்கிறார்கள்.  அதே ஒரு அனந்தராம தீட்சிதர் மாதிரி ஒரு பௌராணிகர் பிரசங்கம் நடத்துவதாக இருந்தால் 2000 பேர்கள் வந்திருப்பார்கள்,' என்றார்.  அவர் இன்னொன்றையும் குறிப்பிட்டார்.  ஆண்கள் வீட்டைவிட்டுப் போவது.  இப்படி ஓடிப்போவதற்கு முக்கியமான காரணம்.  கடன் வாங்கியிருப்பதுதான்.  அந்தக் கடனைஅடைக்க முடியாமல் ஓடிப் போய்விடுவார்கள், என்றார். பெரும்பாலும் வட இந்தியாவில் எழுதும் நாவல்களில் ஓடிப்போவது அதிகமாக இருக்கும்என்று குறிப்பிட்டார். ஆடிட்டர் கோவிந்தராஜன் பெண்கள் வீட்டைவிட்டுப் போவதைப் பற்றி  குறிப்பிட்டார்.  தாகூர் கதை ஒன்றில் ஒரு பெண் வீட்டைவிட்டு ஓடிப் போவதைப் பற்றி குறிப்பிட்டார்.  

கூட்டம் நடந்து முடிந்தவுடன் அசோகமித்திரனை தொந்தரவு செய்து விட்டோமோ என்று தோன்றியது.  கூட்டத்தில் பதிவானதை இந்த கணினியில் பதிவு செய்திருக்கிறேன்.  எப்படி மற்றவர்களுக்கு அனுப்புவது என்பதுதான் தெரியவில்லை.  ஆடிட்டர் கோவிந்தராஜன் கூட்டத்தை புகைபடங்கள் எடுத்து பதிவு செய்துள்ளார்.  

Comments

You can share it on https://soundcloud.com/