Skip to main content

வேர் பிறழ்ந்த மனதின் பலிபீடம்


ரேவா

பெரும் மனப்பிறழ்வுக்கு பிறகு
பாவனையில் எந்தவொரு பதட்டமும் இல்லையென்ற
தொனியின் பலத்தோடு வலம் வருகிற
எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்
நீங்கள் அறிந்திராதபடி

அடிமாட்டைப் போல் அலைக்கழிக்கும் பிரியங்களுக்கு
கசாப்புக் கடைகளின் ரத்தவாடை
பழகி விட்ட படியாலே
புன்னகையோடு 
தலைவெட்டப்படும் கணத்திற்கு காத்திருக்கும்
எவருக்குள்ளும் எவரும் இருக்கலாம்
அவருக்கே தெரியாதபடி

மொத்தமாய் அடைக்கப்படும் இடத்திலெல்லாம்
ரகசியமெனும் ஈனஸ்வரம்
கேட்கச் சகியாதவாரு அனற்றிக் கொண்டிருக்க

பலியாவது தெரிந்த நொடி
துண்டாகிப் போன சமாதானத்தில்
சத்தியத்தின் நா தொங்க
நம்பிக்கை விழிபிதுங்கி இறுதிமூச்சில்
புத்தன் பிறக்கிறான் போதிமர வேரை அழித்தபடி

***

Comments