ராமலக்ஷ்மி
இப்போது நாம் பன்னிரெண்டு வரை எண்ணுவோம்
எண்ணுகையில் அனைவரும் அசையாமல் நிற்போம்
ஒரு முறையேனும் இப்பூமியில்
எந்த மொழியிலும் பேசாதிருப்போம்
ஒருநொடியேனும் நம் கைகளை
அதிகம் அசைக்காமல் நிற்போம்
அவசரங்களின்றி, இயந்திரங்களின்றி
அதிசயமாய் நாம் அனைவரும் இணைந்திருப்பது
விநோதமாய்த் தோன்றலாம்.
திமிங்கலங்களுக்குத் தீங்கிழைக்க மாட்டார்கள்
குளிர்ந்த கடலில் மீனவர்கள்.
காயம்
பட்டத் தம் உள்ளங்கைகளைக் கவனிப்பார்கள்
உப்பைச் சேகரிக்கும் மனிதர்கள்.
பசுமைக்கு எதிராக
காற்றுக்கும் நெருப்புக்கும் எதிராக
போர்கள் தொடுத்து
எவரும் எஞ்சியிராத களத்தில்
வெற்றியைக் கொண்டாடுவதை விடுத்து
தூய ஆடைகள் அணிந்து
சகோதரர்களுடன் இணைந்து
நிழலில் நடக்கலாம், எதுவும் செய்யாமல்.
நான் சொல்ல விழைவதை
வாழாவிருத்தலோடு குழப்பிக் கொள்ளக் கூடாது
வாழ்க்கை, அதைப் புரிந்து கொள்வதில் இருக்கிறது
வாழும் போதே மரணிப்பதை நான் விரும்பவில்லை.
வாழ்க்கையைக் கொண்டு செல்ல
இத்தனை சுயநலமாய் சிந்திக்காமல்
ஒருமுறையேனும் இருக்கலாம், எதுவும் செய்யாமல்.
அத்தகு பேரமைதி
நம்மை நாமே புரிந்து கொள்ளாத வருத்தத்தை,
மரணத்தை நினைத்து
நம்மை நாமே பயமுறுத்திக் கொள்வதை
தடுத்திட வாய்ப்பிருக்கிறது.
பூமி நமக்குக் கற்பிக்கக் கூடும்
எல்லாமே மரித்து
விட்டதாய்த் தோன்றுகையில்
துளிர்த்தலும் உயிர்த்தலுமான வாழ்வை.
இப்போது நான் பன்னிரெண்டு வரை எண்ணுகிறேன்
அனைவரும் அமைதி காத்திடுங்கள், நான் போகிறேன்.
*
மூலம் (ஸ்பானிஷ் மொழியில்): "Keeping Quiet"
by Pablo Neruda (1904 – 1973)
Comments