Skip to main content

எதையாவது சொல்லட்டுமா........37

உங்களுக்கு எதாவது சந்தேகம் வந்துள்ளதா கடவுளைப் பற்றி. பலர் கோயிலுக்குப் போவார்கள். சாமியைக் கும்பிடுவார்கள். அவ்வளவுதான். சாமியைப் பெரிய சக்தியாக நினைத்து கோயில் கோயிலாகச் செல்பவர்களும் உண்டு. கடவுள் இருக்கிறாரா இல்லையா என்ற ஆராய்ச்சியெல்லாம் இப்போதெல்லாம் யாரும் பண்ணுவது இல்லை. ஏனென்றால் அது தேவையில்லாத ஒன்று.

அன்று சனிக்கிழமை. சீர்காழியிலிருந்து மயிலாடுதுறைக்கு நான் டூ வீலரில் வந்து கொண்டிருந்தேன். என் பின்னால் கிளை மேலாளரும் வந்து கொண்டிருந்தார். அவருக்குக் கோயில் போவது, கடவுளை எதற்காவது வேண்டிக்கொள்வது என்பதெல்லாம் சுத்தமாகப் பிடிக்காது. நம்பவும் நம்ப மாட்டார். ஆனால் இது ஒரு பிரச்சினையே இல்லை. ஆனால் அவர் ஒரு கேள்வி கேட்கிறார். 'இப்போதெல்லாம் கடவுள் நம்பிக்கை மக்களிடம் அதிகமாகிவிட்டது போலிருக்கிறதே' என்று.

எனக்கு இதைப் பற்றியெல்லாம் அதிகமாக யோசித்து விட்டுவிட்டேன். இப்போதெல்லாம் அதிகமாக யோசிப்பது இல்லை. ஆனாலும் அவர் கேட்டார் என்பதற்கு பதில் சொல்லத் தோன்றியது. 'ஆமாம். கடவுள் நம்பிக்கை அதிகமாகி விட்டது,' என்றேன். பின் காரணமும் சொன்னேன். 'பல மக்கள் அளவிடமுடியாத துன்பங்களை சுமந்து கொண்டிருக்கிறார்கள். அதைச் சரிசெய்யும் வழி தெரியவில்லை. குறைகளைக் கேட்க கடவுள் ஒருவன்தான் இருக்கிறான். அதனால் கடவுளை நாடுகிறார்கள்,' என்றேன்.

கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் PAIN ஐ சுமப்பது என்பது சாதாரண விஷயமில்லை. ஒரு சிறுவயது உடையவர் என் பக்கத்தில் உட்கார்ந்திருந்தவர். சென்னையிலிரூந்து அவர் கிராமத்திற்குச் சென்று கொண்டிருந்தார். ''15வயதிலிருந்து இந்தத் துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கிறேன். தீராத வலி. கைகால் முட்டிக்கு முட்டி. தாங்க முடியாத வலி. தற்கொலை செய்துகொள்ள தோன்றும். மகமாயிதான் என்னைக் காப்பாற்றி இருக்கிறாள்...'' என்றான். அவன் சொன்னதை கிளை மேலாளரிடம் சொன்னேன். அவர் சிரித்தார். ''தானாகவே அந்த வலி போய்விடும்...மகமாயி என்று அவன் சொல்கிறான்....இப்படித்தான் எல்லோரும்...?'' என்றார்.

''உங்களுக்கு துன்பமே வந்ததில்லையா? அப்படி வந்தால் என்ன செய்வீர்கள்?'' என்று கேட்டேன். ''நடப்பது நடக்கட்டும்,'' என்று இருப்பேன் என்று சொன்னார். அவரிடம் வாதாட முடியாது என்று தோன்றியது. நானும் பெரிய கடவுள் நம்பிக்கை உடையவன் என்றெல்லாம் சொல்ல முடியாது. நம் தமிழ் நாடு முழுவதும் எத்தனையோ கோயில்கள் இருப்பது குறித்து ஆச்சரியம் அடைந்திருக்கிறேன். இந்தக் கோயில்களுக்கெல்லாம் மக்கள் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். இந்து, முகமதையர், கிருத்துவர் என்று எல்லோரும் கடவுளை வணங்காமல் இல்லை.

பெரும்பாலான மக்களுக்கு துன்பம் வரும்போது அதை எதிர்கொள்ள திராணி இல்லை. நான் சென்னையைவிட்டு இங்கே வந்துவிட்டேன். திரும்பவும் சென்னைக்கே போக வேண்டுமென்று நான் கடவுளிடம்தான் வேண்டிக்கொள்ள முடியும். Top Executiveஐப் பார்த்து கெஞ்சிக்கொண்டிருக்க முடியாது. ஆனாலும் கடந்த 5 ஆண்டுகளாக நான் ஒன்றை செய்யவில்லை. என் மூதாதையார் வாழ்ந்த பூமியைப் போய்ப் பார்க்காமலிருந்தது. பள்ளிக்கூட வயதில் நான் போயிருக்கிறேன். பிறகு சில நிகழ்ச்சிகளின் போது அங்கு போயிருக்கிறேன். இப்போது அந்தக் கிராமம் மட்டும்தான் இருக்கிறது. அங்கு போய் தங்க என் மூதாதையார் வீடு, நிலம் என்றெல்லாம் எதுவுமில்லை. ஆனாலும் சென்னையை விட்டு வந்த எனக்கு இவ்வளவு கிட்ட அந்த இடம் இருந்தும், போய்ப் பார்க்க தங்க ஒன்றுமில்லை. அங்குள்ள வீரன் கோயிலைத் தவிர.

அந்தக் கோயிலை ஏன் போய்ப் பார்க்கக் கூடாது என்று தோன்றியது. அதனால் வாரம் ஒருமுறை போய்க் கொண்டிருக்கிறேன். இங்கெல்லாம் நிலம் இருந்தது. இங்கெல்லாம் வீடு இருந்தது என்று சொல்லிக்கொண்டே போவேன். வீரனைப் பார்த்துவிட்டு வந்து விடுவேன். இதெல்லாம் கடவுள் நம்பிக்கையா இல்லையா என்பது தெரியாது. அங்குள்ள சிவன் கோயிலுக்குப் போனேன். அதை பராமரிக்கவே யாரும் இல்லை. அதைப் பார்த்துக்கொள்பவர் கோயிலுக்குப் போய் பூஜை செய்து. புத்தம் புதிய மாலையை இட்டு மந்திரம் சொல்கிறார். அந்தக் கோயிலில் எங்கள் குடும்பம் அவரைத் தவிர யாருமில்லை. சிவனை அவ்வளவு நெருக்கமாகப் பார்க்க முடிகிறது. கோயில் ஒரு பக்கத்தில் அந்தக் கோயிலைப் பற்றிய தல வரலாறு எழுதப் பட்டிருக்கிறது. சிவனும் விஷ்ணுவும் சொக்கட்டான் விளையாடும்போது, பார்வதி நடுவராக இருக்கிறாள். விஷ்ணு ஜெயித்து விடுகிறார். அதைச் சொன்ன பார்வதிக்கும் விஷ்ணுவிற்கும் சாபம் கொடுக்கிறார் சிவன். அந்த சாப விமோசனம் பெற அகில்காடு என்கிற அந்த இடத்தில் பார்வதி சிவனை தன் ஆபாரணங்களை எல்லாம் கழற்றி பூஜை செய்கிறாள். சாப விமோசனம் பெறுகிறாள். அகில்காடு அசிக்காடு என்று மாறி விடுகிறது. கோயில் அமைதியாக இருக்கிறது. வெளியே வருகிறேன். கடவுள் நம்பிக்கை உண்டா இல்லையா? கடவுள் என்பதே நம்முடைய மனசாட்சி என்று தோன்றுகிறது. நம் மனசாட்சியைப் பார்க்கத்தான் கடவுளை தொழுகிறோம். Taste of temples என்ற ஒன்று இருக்கிறது. கோயில் அமைந்த இடம். அதைச் சுற்றிய புராணக் கதை என்றெல்லாம் இருக்கிறது. ஒவ்வொரு கோயிலாகச் சென்று கோயிலையும் சாமியும் பார்த்துவிட்டு வரலாம். நம் மனசாட்சியையும் தேடுவோம்.
(இன்னும் வரும்)

Comments

ஆன்மிகத்தின் உச்சம் தன்னுணர்தலையே கடவுளை உணரும் மார்க்கமாகச் சொல்கிறது... எந்த வேண்டுதலுமற்ற கடவுளைத் தொழலானது நல்ல அமைதியையும் நல்ல துணையையும் அளிக்கிறது...
நம் மனசாட்சியையும் தேடுவோம்.
yes. we search and seek.