Skip to main content

என் நண்பர் ஆத்மாநாம்


பகுதி 2

தற்குமுன் 1983 அக்டோபர் மாதத்தில் தூக்க மாத்திரைகளை அதிகமாக சாப்பிட்டு ஒரு தற்கொலைக்கு முயன்றார். அதில் காப்பாற்றப்பட்டு விட்ட அவர் பத்துநாட்களுக்குப் பின் தியாகராய நகரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்கு வந்திருந்தார். இடையில் ஒரு வருஷம் நான் என் சகோதரியின் வீட்டில் தங்கியிருந்தேன். காலை டிபன் சாப்பிட நான்தான் ஆத்மாநாமை வரச் சொல்லியிருந்தேன். அப்போது ஊரில் இருந்து என் அம்மாவும் வந்திருந்தார். "ஆத்மாநாமை சாப்பிட வரச்சொல்லு," என்று என் அம்மாவும் என்னிடம் கூறி இருந்தார். பொதுவாக நெருங்கிய நண்பர்களின் வீடுகளில் சாப்பிடுவதற்கு ஆத்மாநாம் ஆசைப்படுவார் - அன்று காலை என் சகோதரியின் வீட்டில் காலை டிபன் - ரவா தோசை. தோசையை என் அம்மாதான் வார்த்தார். பொன் நிறத்தில் முறுகலாக பரிமாறப்பட்ட ரவாதோசைகளைப் பார்த்து குழந்தையின் குதூகலத்தோடு வியந்து வியந்து பாராட்டி சாப்பிட்டார் ஆத்மாநாம். சாப்பிட்டப்பின் நானும் அவரும் மாமரத்தின் கீழ் உட்கார்ந்து கொண்டோம். அப்போதுதான் ஆத்மாநாம் பத்து நாட்களுக்குமுன் தான் தற்கொலை முயற்சி செய்துகொண்டதைப் பற்றி தணிந்த குரலில் கூறினார். நான் அதிர்ந்து போனேன். எதனால் தான் தற்கொலை முயற்சியை மேற்கொள்ள நேர்ந்தது என்பதற்கான காரணங்களையும், சூழ்நிலைகளையும் விபரமாக எழுதியிருப்பதாகக்கூறி ஆத்மாநாம் மடிக்கப்பட்ட ஒரு கடிதத்தை என்னிடம் தந்தார். "தனியாக அப்புறம் படியுங்கள்," என்றார் - அன்று நான் அவரிடம் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பேசிக்கொண்டிருந்தேன். தற்கொலை முயற்சி மட்டும் மீண்டும் ஒருமுறை எந்தச் சூழ்நிலையிலும் அவர் மேற்கொண்டு விடலாகாதுயென்று அவரிடம் உருக்கத்துடன் சொன்னேன். தற்கொலை, வன்முறை, விபத்து போன்றவற்றால் மரணத்திற்குள்ளாகிற ஆன்மா சில கொடிய தளங்களில் அல்லல்பட்டு அலைந்தாக நேரிடும். அவை தாங்க முடியாத குரூரமானவை. எந்த முயற்சியும் இல்லாமல் பிரபஞ்சவெளியின் பற்பல புலப்படாதஉள்தளங்களை காணுகிற பார்வைக் குவிப்பின் புள்ளி 1982 ஆம் வருடத்தில் இருந்து என்னுள் திறந்து காலமற்ற அநேக காட்சிகளை எனக்குக் காட்டிக்கொண்டிருந்தது. நான் சொன்னவற்றையெல்லாம் ஆத்மாநாம் மௌனமாகக் கேட்டுக்கொண்டிருந்தார். ஆயினும் அவருடைய வாழ்க்கை தற்கொலையில்தான். ஆத்மாநாம் இறந்து சில மாதங்களுக்குப் பின் கவிஞர் பிரம்மராஜன் ஆத்மாநாமை நினைவு கூர்ந்தும், ஓர் அஞ்சலியாகவும் சிறிய நூல் ஒன்றை வெளியிட்டார். ஆத்மாநாம் பற்றி குறிப்பும் ஒன்றும் அதில் எழுதியிருந்தார். ஆத்மாநாம் வாழ்க்கை மீது எந்தப் புகாரும் இன்றி தற்கொலை செய்துகொண்டார் என பிரம்மராஜன் கருத்துச் சொல்லி இருந்தார் - அது பிழையான கருத்து. ஆத்மாநாமின் தற்கொலைதான் வாழ்க்கையைப் பற்றிய அவரின் கடுமையான புகார். கடைசிப் புகார்..புகார்களுக்கு உரிய கடின வாழ்க்கையை தொடர முடியாமல் போனதில்தான் தற்கொலை என்ற முடிவை அவர் மேற்கொள்ள வேண்டியதாகி விட்டது. அதுதான் அவலம். அப்படியொரு அவலத்திற்கு உட்படுத்திக் கொள்வதற்கான கொடிய வீழ்ச்சிகளையோ, தாங்கிக்கொள்ள முடியாத பேரிழப்புகளையோ ஆத்மாநாம் சந்தித்ததில்லை. சிறு சிறு சரிவுகள் ஏற்பட்டன. சின்னச் சின்ன ஏமாற்றங்கள் வந்தன. அதையே ஆத்மாநாமால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அத்தனை மிருதுத் தன்மை கொண்டது அவரின் மனம். சுக்கல் சுக்கலாக உடைந்து போனது அதனால்தான்.

1979 ஆம் வருடம் இறுதி மாதங்களில் மனச்சிதைவின் முதல் தாக்குதல் அவரில் ஏற்பட்டது. அவருக்கு ஏற்பட்ட மனச்சிதைவின் அடிப்படைக் காரணங்களாக மனோதத்துவ டாக்டர்கள் தெரிவித்தவை வெறும் தர்க்க ரீதியானவை. ஆத்மாநாமின் குடும்பத்தினர் தெரிவித்த அபிப்பிராயங்கள் மேலோட்டமான ஊகங்கள்தான். ஆத்மாநாமின் மனமையத்தை அவர்கள் கண்டுணர்ந்ததே இல்லை. ஆத்மாநாமின் ஆளுமையின் முக்கியமான தளங்களை அவர்கள் சிறு இழைகூட அறிந்திருக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்ட ஒரு சம்பவத்தை உதாரணமாகச் சொல்லலாம். ஆத்மாநாமின் மரணத்திற்குப் பிறகு தமிழ் பத்திரிகைகள் சிலவற்றில் சில இலக்கிய நண்பர்கள் அவரைப் பற்றி அவர்களுக்குத் தெரிந்தவற்றைச் சொல்லி கட்டுரைகள் எழுதியிருந்தார்கள். அவற்றையெல்லாம் வாசித்த ஆத்மாநாமின் சகோதரர், "அவன் (ஆத்மாநாம்) இப்படியெல்லாம் இருந்திருப்பான் என்று எங்களுக்குத் தெரியவே தெரியாது," என்று சொல்லி இருந்தார். சத்தியமான வார்த்தை இது. மிக அந்தரங்கத்தில் ஆத்மாநாம் யார் என்ற உண்மை அவர்களுக்குத் தெரியாது. எதனால் அவருக்கு அத்தனை கடுமையான மனச்சிதைவு ஏற்பட்டது; எந்தக் காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார் என்ற இரண்டு கேள்விகளுக்கான பதில்கள் - இன்றுவரை நான் மட்டுமே அறிந்தவை. இதில் எனக்கு இரண்டாவது அபிப்பிராயம் கிடையாது. என்னிடம் மட்டுமே ஆத்மாநாம் அவரின் மிக மிக அந்தரங்க வாழ்வின் சில சம்பவங்களை வெளியிட்டுப் பகிர்ந்துகொண்டார். அவருடைய அன்றாட வாழ்க்கை அந்த விகிதங்களில்தான் கழிந்தது. ஆத்மாநாம் எங்கே வேண்டுமானாலும் யாரை வேண்டுமானாலும் பார்க்கவும் பேசவும் போவார். காலையில் இருந்தே சென்றுகொண்டு சந்தித்துக்கொண்டு இருப்பார். ஆனால் ஒரு தினத்தில் அவர் கடைசியாக வந்து சந்திக்கும் நபர் - நான்தான். அப்புறம் நானும் அவரும் சேர்ந்து எங்கேயாவது கிளம்பிப் போனாலும் போவோம். போகாவிட்டாலும் இல்லை. என்னைச் சந்தித்தபின் யாரையும் பார்ப்பதற்குச் செல்வதில்லை. நானும் அவருமாக பேசிக்கொண்டிருப்போம். எங்கள் பேச்சில் பெரிய இலக்கிய விசாரம் ஏதும் இருக்காது.

ஒருநாள் அவரின் அன்புக்குரியவள் முதல் முறையாக பிரியத்துடன் அவருடைய கையில் கிள்ளி வைத்துவிட்டாள். அவள் கிள்ளிய அரைமணி நேரத்தில் ஆத்மாநாம் என் அறையை நோக்கிப் புறப்பட்டு விட்டார். எதற்காக அவள் கிள்ளி வைத்தாள் என்பதை என்னிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளத்தான் அந்த அவசர வருகை ...! - எங்களுடைய நட்பின் மையம் இதுதான். சில நேரங்களில் நான் படுத்துத் தூங்கிக்கொண்டிருப்பேன். அவர் சிகரெட் புகைத்தபடி மௌனமாக கால்களை நீட்டியவாறு உட்கார்ந்திருப்பார். என் தூக்கம் அவரை தனிமைப் படுத்தாது. சில நேரங்களில் அன்புடன் கோபித்துக் கொள்வார். "ராட்சஸ், வெளியே உலகம் ஜெட் மாதிரி இயங்கி போயிண்டு இருக்கு.. நீங்க இப்படி தூங்கிண்டு இருக்கீங்களே.." என்பார்.

ஒருநாள் இரவு பத்து மணியாகி விட்டது. மழை லேசாக தூறிக் கொண்டிருந்தது. அது 1979ஆம் வருஷத்தின் June மாத இறுதி. நான் விளக்குகளை அணைத்துவிட்டுப் படுத்துவிட்டேன். தூக்கம் புலன்களில் கவிந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் வந்து கதவைத் தட்டினார். சில வினாடிகளுக்குப் பிறகு நான் எழுந்து விளக்கைப் போட்டு அறைக் கதவைத் திறந்தேன். "வாங்க, பைலட் தியேட்டர்ல நல்ல இங்கிலிஷ் படம் ஒண்ணு காட்டறான்.. நாலைஞ்சு நாள்ள முடியப் போகுது..கௌம்புங்க போலாம்.." -ஆத்மாநாம் அவசரமாக சொன்னார். "மணி இவ்வளவு ஆயிடுச்சே.." என்றேன். "மழை வேற தூறிண்டு இருக்கு.." நான் சிறிது தயக்கத்துடன் சொன்னேன். "மெயின் பிக்ச்சர் ஆரம்பிச்சிருக்காது..மழை பெரிசா ஒண்ணும் இல்லை. பைலட் தியேட்டர் இதோதானே இருக்கு..அஞ்சு நிமிஷத்ல போயிடலாம்.." ஐந்தாவது நிமிடம் அறைக் கதவை பூட்டி நாங்கள் கிளம்பி விட்டோம். மழை நொசநொசவென்று தூறிக்கொண்டிருந்தது. நான் பின்னால் உட்கார்ந்துகொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளை கிளப்பினார். தெருக்கள் மழையால் ஒரு மாதிரி சொத சொதவென்று இருந்தன. ஆத்மாநாம் கொஞ்சம் வேகமாக மோட்டார் சைக்கிளை செலுத்தினார். ராயப்பேட்டை மணிக்கூண்டுக்கு இடதுபுறம் மோட்டார் சைக்கிள் வேகமாக திரும்பியது. எதிரில் லாரி ஒன்று மிக வேகமாக வந்து கொண்டிருந்தது. ஆத்மாநாம் சட்டென மோட்டார் சைக்கிளை இடது பக்க சாலை ஓரமாக திருப்பினார். மோட்டார் சைக்கிள் மழை நீரின் சொதசொதப்பில் பளீரென சுழன்று ஓரத்தில் சேதப்பட்டு உருண்டு கிடந்த கனமான சிமிண்ட் குப்பைத்தொட்டியில் மோதி சாய்ந்தது. ஆத்மாநாம் சட்டென தாவி விலகி கீழே விழாமல் நின்றுகொண்டார். கிட்டத்தட்ட குப்பைத்தொட்டிக்குள்ளேயே நான் புகுந்து விழுந்து விட்டிருந்தேன். என் இடது தோளின் மேல் மோட்டார் சைக்கிளின் ஹேண்டில்பார் பலமாக தாக்கி என் தோள் மேலேயே விழுந்து விட்டிருந்தது. குப்பைத் தொட்டியின் துருத்தியபடி இருந்த நீண்ட இரும்புக் கம்பி என் இடது கையின் மேல் பகுதியை கீறி சதையை பிய்த்து ரத்தக் காயமாக்கி விட்டது. Oh, God, Oh, God, என்று ஆத்மாநாம் செய்வதறியாமல் கத்தினார். நான் கைகளை ஊன்றி எழுந்துகொள்ள முயன்றேன். முடியவில்லை. இடதுகை என் கட்டுப்பாட்டில் இல்லை..வெறும் தொங்கலாக ஊசலாடியது.

"இடது கையை ஊண முடியலை.." என்றேன். நான் எழுந்துகொள்ள ஆத்மாநாம் உதவ வேண்டியிருந்தது. "என் சட்டையின் இடதுகையின் மேல் பகுதி ரத்தமாக இருந்தது. "இடது கைக்கு ஏதோ ஆயிடுச்சி," என்றேன். "வாங்க - ராயப்பேட்டா ஆஸ்பிட்டல் பக்கத்லதான் - அங்கே போயிருவோம்," என்றார் ஆத்மாநாம். அவர் மோட்டார் சைக்கிளை தள்ளியபடியே வர நான் அவருடன் மெல்ல நடந்தேன். மழைத்தூறல் நிற்காமல் இருந்தது. ராயப்பேட்டை மருத்துவமனைக்குள் நுழைந்தபோது தூரத்தில் பைலட் தியேட்டரின் விளக்குத் தெரிந்தது. ஜனசந்தடி இல்லாத மருத்துவ மனைக்குள் இருந்து 45 நிமிடங்களுக்குப் பிறகு நானும் ஆத்மாநாமும் வெளியில் வந்தோம். தேவையான சிகிச்சைகள் எனக்குத் தரப்பட்டிருந்தன. என் இடது பக்க தோள்பட்டை எலும்பு அதன் இடத்தில் இருந்து பெயர்ந்து கீழ்நோக்கி இறங்கிப் போயிருந்தது. அதன் மத்திய பகுதியில் மெல்லிய கீறலும் ஏற்பட்டிருந்தது. அதற்கான கட்டுகளை மிக நேர்த்தியாக போட்டிருந்தார்கள். இருபது நாட்களுக்குப் பிறகுதான் கட்டுகளை அவிழ்க்க வேண்டும். அதுவரை இடது கையை உபயோகிக்க முடியாது. கையை அசைக்கக்கூட முடியாதபடி கட்டு இருந்தது. மருத்துவமனையில் என்னைச் சோதித்த டாக்டர் ஒரு பெண். என் பெயரையும் வயதையும் கேட்டார். சொன்னேன். குறித்துக் கொண்ட டாக்டர் என்னுடைய மாத வருமானம் என்னவென்று கேட்டார். இந்தக் கேள்வி நான் எதிரேபாராதது. எனக்கு ஏது வருமானம்? பணம் சம்பாரிப்பதற்காக எந்த வேலையிலும் ஈடுபட்டிராத நான் என் மாத வருமானமாக என்ன சொல்ல முடியும்? அதனால் சில வினாடிகள் பதில் சொல்லாமல் வெறுமே முழித்தேன். பின் என் மாத வருமானம் 750 ரூபாய் என்று சொல்லி வைத்தேன். அதையும் குறித்துக்கொண்ட டாக்டர் எக்ஸ்ரே மற்றும் சிகிச்சைகளுக்காக 25 ரூபாய் கட்டணம் கட்ட வேண்டும் என்றார். இப்போது ஆத்மாநாம் குறுக்கிட்டார். "அரசாங்க மருத்துவ மனையில் எல்லாம் ப்ரீதானே?" என்று டாக்டரைப் பார்த்துக் கேட்டார். "மாத வருமானம் 750 ரூபாய் என்று இவர் சொன்னார். அதனால் சிறிது பீஸ் சார்ஜ் பண்ணி இருக்கிறோம்..ஆஸ்பிட்டலின் நடைமுறைதான் இது.." என்றார் டாக்டர். டாக்டரின் வார்த்தை ஆத்மாநாமுக்கு ஏற்புடையதாக இல்லை. "இவருக்கு வருமானமே கிடையாது. சும்மா 750யென்று சொன்னார்," என்றார். "நானா இவரை 750யென்று சொல்லச் சொன்னேன்?" - டாக்டர் "வருமானம் 250யென்று சொல்லியிருந்தால் என்ன செய்திருப்பீர்கள்?" ஆத்மாநாம் கேட்டார். "இந்தக் கேள்விக்கு என்னால் பதில் தர முடியாது. கட்டணத்தை நீங்கள் செலுத்தினால் சிகிச்சைகள் தருவார்கள்.." டாக்டர் இப்படிச் சொன்னபிறகும் ஆத்மாநாம் இரண்டொரு கேள்விகளை அவருக்கு உரித்தான மென்மையான தொனியில் கேட்டார். அவரின் கேள்விகளுக்கு டாக்டர் பதில் சொல்லவில்லை.டாக்டரின் மௌனம் ஆத்மாநாமின் முகத்தைச் சுருங்க வைத்தது. கட்டணத்தை அவரே கட்டினார். சிகிச்சைகள் முடிந்து இருவரும் வெளியில் வந்தோம். ஆத்மாநாமின் மனம் சமாதானமடையமலேயே இருந்தது. நான் மட்டும் ஒரு ஆட்டோவில் ஏறிக்கொள்ள ஆத்மாநாம் மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்தார். மழை தூறிக்கொண்டிருந்தது. சில நிமிடங்களில் என் அறையை அடைந்தோம். அறைக் கதவை ஆத்மாநாம் திறந்தார். ஆயாசத்துடன் கட்டிலில் அமர்ந்தேன். இடது தோள் பகுதி பூராவும் வலி கடுமையாக இருந்தது. ஆத்மாநாம் திரும்பத் திரும்ப மன்னிப்புக் கேட்டுக்கொண்டிருந்தார். குற்ற உணர்ச்சியில் புலம்பியவாறே இருந்தார். இரவு எத்தனை மணி ஆனாலும் வீட்டுக்கு வந்து விடுவதாக 12 1/2 மணியளவில் அம்பத்தூருக்குக் கிளம்பி விட்டார்...மறுநாள் காலை 10 மணிக்கு மறுபடியும் என்னைப் பார்க்க கிளம்பி வந்துவிட்டார். புதிய உடைகளில் வந்திருந்தாலும் அவரின் முகத்தில் வருத்தமும் பதட்டமும் அப்படியே இருந்தன. நடந்த விபத்தைப் பற்றி வீட்டில் சொன்னதும் ஆத்மாநாமின் அம்மா அவரை மிகவும் கோவித்துக்கொண்டிருக்கிறார். படுத்து தூங்கிட்டு இருந்த மனுசனை அழைச்சிட்டுப் போய் இருக்கிறார். ஆஞ்சநேயரை துதி செய்கிற ஸ்லோகங்கள் அடங்கிய சின்ன புத்தகம் ஒன்றை என்னிடம் கொடுத்து அதை வாசிக்கும்படி ஆத்மாநாமின் அம்மா எனக்கு யோசனை கூறி அனுப்பி இருந்தார். நான் இந்த விபத்தின் வலியால் பல நாட்கள் கஷ்டப்பட்டது உண்மை. அதுவும் தனிமையான லாட்ஜ் வாழ்க்கையில் அந்த சிரமங்கள் பகிர்ந்து கொள்ள முடியாதவை. இத்தனைக்கும் அப்போது பெரம்பூரில் என் சகோதரி இருந்தாள். அவருடைய வீட்டில் போய் இரண்டு நாட்கள் மட்டுமே என்னால் தங்கியிருக்க முடிந்தது. அந்த நிலையிலும் மெரீனா கடற்கரையின் அலைகளின் ஓரத்தில் போய் சில நிமிடங்களாவது நிற்காமல் இருப்பது பெரும் தனிமை உணர்வைத் தந்ததால் திருவல்லிக்கேணி அறைக்குத் திரும்பிவிட்டேன். இந்த விபத்து வேறு எந்த விதத்திலும் என் மனதில் பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கவில்லை.

ஆனால் ஆத்மாநாமின் விஷயம் அது இல்லை. அநியாயமாக என்னை காயப்படுத்தி விட்டதாக அவருடைய மனம் அவரை குற்றம் சாட்டிக்கொண்டே இருந்தது. அதற்காக அவர் அவரையே கடிந்து கொண்டார். கோபித்துக்கொண்டார். இது அவரின் மிருதுவான மனநிலையிலன் மாற்றிக்கொள்ள முடியாமலே இருந்த இயல்பு. எல்லா விஷயத்திலும் அவருடைய மனநிலையின் இய்ககம் இந்த மிருதுத்தன்மையையே மையமாகக் கொண்டிருந்ததால் சிறிய ஏமாற்றமே பெரும் இழப்புக்குள்ளாகிவிட்ட அளவற்ற துயரங்களை அவரிடம் ஏற்படுத்தியது. சின்னச் சின்ன சரிவுகளே கொடிய அதலபாதாளத்தில் விழுந்துவிட்ட நடுக்கத்தை உண்டு பண்ணியது.

1979 ஆம் வருஷத்தின் இறுதி மாதங்களில் ஆத்மாநாம் கடும் மனச்சிதைவுக்கு ஆளாகி சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட வேண்டியதாயிற்று.

சமாதானப் படுத்திக்கொள்ளவே முடியாத துர்பாக்கியமான சம்பவங்கள் அவை. முதலில் வேறொரு மனநல மருத்துவ நிபுணரிடம் ஆத்மாநாமை அவரின் குடும்பத்தினர் அழைத்துப் போனார்கள். ஆத்மாநாமுக்கு அந்த நிபுணரிடம் செல்ல விருப்பம் இல்லை. டாக்டர் சாரதா மேனனிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ளவே விரும்பினார். அந்த வருடங்களில் சாரதா மேனன் இந்தியாவின் குறிப்பிட்டுச் சொல்கிற மனநல மருத்துவ நிபுணர்களில் முக்கியமானவர். அந்தச் செய்தி ஆத்மாநாமின் அறிவில் ஆழமாய்ப் பதிந்திருந்தது. அவரின் விருப்பப்படி சாரதா மேனனிடமே ஆத்மாநாமின் குடும்பத்தினர் அவருக்கான சிகிச்சையை மேற்கொண்டார்கள். அவரைப்போல் கடுமையான மனச்சிதைவுக்கு உள்ளான வேறொரு எந்த மனிதனாவது தனக்கு சிகிச்சை தருவதற்கான மனநல மருத்துவ நிபுணரை குறிப்பிட்டு தேர்ந்தெடுத்திருப்பாரா? சந்தேகம்தான்.

ஆத்மாநாமுக்கு மனச்சிதைவின் முதல் தாக்குதல் நேரிட்டபோது நான் விருதுநகரில் இருந்தேன். வேறொரு விதத்தில் எனக்கு அது ஒரு விபரீதம் குறுக்கிட்டிருந்த நேரம். விருதுநகரில் என் சித்தியின் 23 வயது மகன் மிக மோசமான மனச்சிதைவுக்கு உள்ளாகி யாராலும் எதிர் நோக்க முடியாத வன்முறைகளில் உக்ரம் பெற்றிருந்தாôன்.

விருதுநகரில் என் பெற்றோர்களையும் தங்கைகளையும் தவிர நட்பும் உறவும் நான் கொண்டிருந்தது அந்த சித்தியின் மகனிடம் மட்டும்தான். வேறு எந்த உறவினர்களிடமோ; என் சமூகத்தினருடனோ எனக்கு எவ்வித தொடர்பும் கிடையாது. அந்த மனிதர்களிடம் இருந்து என்னுடைய 24 வயதிலேயே அந்நியப்பட்டு நான் விலகி வந்து விட்டேன். இன்றைய வருடத்தை கணக்கிட்டால் எனக்குள் இந்த விலகல் ஏற்பட்டு நாற்பது வருடங்களாகி விட்டன. என் குடும்பத்தினரை தவிர்த்து எனக்கு அந்த ஊரில் இருந்த ஒற்றை மனிதன் என் சித்தியின் சுசீந்திரன் என்ற மனிதன்தான். பூட்டப்பட்டிருந்த பெரிய கனத்த காட்ரேஜ் பீரோவை சாவியைக் காணாமல் கடப்பாரையை எடுத்து வந்து உடைத்து ஆவேசத்துடன் திறக்கும் பயங்கர வன்முறைக்குக் கொதித்துப் போகிற அளவுக்கு மனச்சிதைவு அவனைத் தாக்கியது. அப்போது அவன் என்ஜீனியரிங் படிப்பில் கடைசி வருடம் படித்துக்கொண்டிருந்தான். அடிப்படையில் ஆத்மாநாம் போலவே அவனும் மென்மையானவன். நேர்மையானவன். மிகவும் சாந்தமானவன். பெரிய வித்தியாசம் என் சித்தி மகனின் உடல் எடை. கரிய நிறத்தில் 120 கிலோ இருப்பான். ஏற்பட்டிருந்த மனச்சிதைவில் மதம் பிடித்த ஒரு யானையைப்போலவே நிலை கொள்ளாத கொந்தளிப்பில் அவனின் உடம்பும் மனதும் திமிறி ஆடின. அவனில் நான் பார்த்த அந்தச் சிதறல் என்னைக் கதி கலங்க வைத்துவிட்டது. அவனின் உக்ரத்தை எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. யாராலுமே அந்தத் தருணத்தை கையாளும் வழி தெரியவில்லை. அவனைக் கட்டுப்படுத்துதல், சிகிச்சைகள் தருதல், சிகிச்சையின் எதிர்விளைவுகளில் அவனை கண்காணித்தல்...போன்ற எல்லாமே யுத்தகளத்தில் என்னை நிறுத்தினாற்போல இருந்தது. கிட்டத்தட்ட நாற்பது நாள் யுத்தத்தில் துவண்டு நிலை குலைந்து போயிருந்தது என் மனம்.

அந்த அடங்க மாட்டாத களைப்புடன் சென்னை திரும்பினேன். சென்னையில் ஆத்மாநாம் மனச்சிதைவுக்கு ஆளாகி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்ற செய்தி காத்திருந்தது. என் மனம் ஒரு மாதிரியாக பீதியடைந்து விட்டது. ஆத்மாநாமுக்கு நேர்ந்த மனச்சிதைவு மனோதத்துவ ரீதியில் எனக்கு இரக்கம் இல்லாத சவாலாக இருந்தது. விபத்து நடந்த ஸ்தலத்தைப் பார்த்தாலே அதிரும் என் மனத்தன்மை ஆத்மாநாமைப் போய் பார்க்கப் பயந்தது. தயங்கியது. ஆயினும் நான் போய்த்தான் ஆக வேண்டும். பார்த்துத்தான் ஆக வேண்டும். நான் தனியாகத்தான் கிளம்பினேன். புரசைவாக்கத்தில் இறங்கி அந்த தனியார் மருத்துவமனையை கேட்டு விசாரித்தபடி மிகமிக மெதுவாக நடந்தேன். மருத்துவமனையின் முதல் மாடியில் ஆத்மாநாம் இருந்தார். குறுகலான படிக்கட்டுகளில் ஏறி முதல் மாடியை அடைந்தேன் - நேராக நீண்ட வராந்தா இருந்தது. அதில் வரிசையாக அறைகள். கடைசி அறையின் வெளியில் வராந்தா கம்பி வலைகளால் மறைக்கப்பட்டிருந்தது. அதேபோல் முதல் அறை ஆரம்பிக்கும் இடத்திலும் கம்பி வலையின் அகலமான மறைப்பு இருந்தது. அதன் மையத்தில் சிறிய கதவு சாத்தப்பட்டு பூட்டு தொங்கியது. அதன் அருகில் ஒரு காவலாளி அமர்ந்திருந்தார்.இரண்டாவது அறையின் முன் வராந்தாவில் ஆத்மாநாம் ஒரு ஈஸிசேரில் சாய்ந்தபடி உட்கார்ந்திருந்தார். வராந்தாவின் எதிர்புறம்பார்க்கும்படியாக வானவெளி தெரிந்தது. ஆனால் ஏறி குதித்து விடாதபடி அங்கும் கம்பி வலைகள் பொருத்தப்பட்டிருந்தன. நான் தூரத்தில் நின்றவாறு சில வினாடிகள் ஆத்மாநாமைப் பார்த்தபடி இருந்தேன். என் மனம் உள்ளுக்குள் கேவி தத்தளித்தது. காவலாளியிடம் ஆத்மாநாமின் பெயரைச் சொன்னேன். உடனே அவர் எழுந்து நின்று பூட்டைத் திறக்க தயாரானார். அந்தச் சின்ன சப்தத்தில் திரும்பிய ஆத்மாநாம் ஈஸிசேரில் இருந்து பளீரென எழுந்து நின்றார்.

அவர் நின்ற இடத்தில் இருந்து வலைக்கதவு பன்னிரெண்டு அடி தூரத்தில் இருந்ததாகச் சொல்லலாம். ஆத்மாநாம் கதவை நோக்கி பாய்ந்தோடி வந்தார். ஒருக்களித்து நின்று அவரின் வலது காலை நான்கு அடி உயரத்ததுக்கும் மேலாகி உயர்த்தி வலைக்கதவை உத்வேகத்துடன் எட்டி உதைத்தார். அவர் உதைத்த வேகத்தில் அகலமான அந்தப் பெரிய வலைப் பகுதியே ஆடி அதிர்ந்தது. ஆத்மாநாம் காவலாளியிடம் கத்தினார். "சீக்கிரமா கதவைத் திறய்யா..நான் அன்னிக்கே உன்கிட்டே சொல்லியிருக்கேனே...விருதுநகர்ல இருந்து என் ப்ரண்ட் வருவார். கதவைத் திறந்து வைன்னு...இவர்தான் அது. திற கதவை..."என்னைப் பார்த்துவிட்ட பரவசத்தில் கைகளாலும் கம்பிவலையை பிடித்துக் குலுக்கினார். அவருடைய உணர்வு மேலீடுகளைப் பார்த்து காவலாளி கதவைத் திறக்க யோசித்தார். "திறய்யா..சீக்கிரம் திற.." ஆத்மாநாம் காவலாளியை அவசரப் படுத்தினார்.. அமைதியான நிதானமான சிறிது சங்கோஜமான ஆத்மாநாமின் சிதைந்துப் போயிருந்த தோற்றத்தை ஏற்கனவே விருதுநகரில் கதிகலங்கி விட்டிருந்த என் மனம் தாங்கிக்கொள்ளும் சக்தியை இழந்திருந்ததால் கட்டுப்படுத்த முடியாத அழுகை வெடித்துவிட்டது. கம்பி வலைக்கு அப்பால் இருந்து அதே பரவசத்துடன் சப்தமான குரலில் எனக்கு ஆறுதல் சொன்னார். "அழாதீங்க..எனக்கு ஒண்ணும் ஆகலை. சீக்கிரமா சரியாயிடும்."

அந்த முதல் சந்திப்புக்குப் பிறது மீண்டும் ஒரே ஒரு முறை மட்டுமே நான் அவரைப் பார்க்க மருத்துவமனைக்குப் போனேன். ஒரே நேரத்தில் எனக்கு மிகவும் வேண்டிய இரண்டு மேன்மையானவர்களுக்கு ஏற்பட்ட மனச்சிதைவு என் உடம்பையும் மனதையும் சக்கையாக்கி விட்டது. ஒரு நிமிட தூக்கத்திற்குக்கூட என் உடம்பு உட்படவில்லை. உச்சந்தலையில் ஒரு கொதிப்பு. வலி. எனக்கும் மனச்சிதைவு ஏற்பட்டு விடுமோ என்ற பீதி நினைப்பில் ஒரு ஜவ்வுபோல ஒட்டிக்கொண்டது. சிறு சிறு உடல்நலக்குறைவு வரும்போது சிகிச்சைப் பெற்றுக்கொள்கிற டாக்டரிடம் தாமதிக்காமல் போனேன். விஷயத்தைச் சொன்னேன். எல்லாவற்றையும் கேட்டுக்கொண்ட டாக்டர் சொன்னார்: "உங்கள் நண்பரை ஆஸ்பிட்டலில் போய்ப் பார்க்கவே பார்க்காதீர்கள்.. உங்களுடைய மனம் தாங்கவில்லை அதை. மனநோயளிகளை சந்திப்பதும் பராமரிப்பதும் எல்லோருக்கும் சாத்தியமாகிற விஷயம் கிடையாது. உங்கள் நண்பரை டாக்டர்கள் கவனித்துக்கொள்வார்கள். குடும்பத்தினர் பராமரித்துக்கொள்வார்கள். அதற்கும் மேல் உங்கள் நண்பரை கடவுள் பாதுகாக்க நாம் பிரார்த்தனை செய்வோம். நீங்கள் போகாதீர்கள். அது தப்போ குற்றமோ இல்லை. நான் உங்களுக்கு ஒரு வாரத்திற்கான தூக்க மாத்திரைகளும் சில எலிவேட்டர் மாத்திரைகளும் எழுதித் தருகிறேன். வாங்கிச் சாப்பிடுங்கள்... அதற்கும் மேல் ஏதாவது பிரச்னை இருந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன். பயப்படாதீர்கள். உங்களுக்கு எதுவும் ஆகாது. கடந்த எட்டு வருஷமாக உங்களை நான் பார்த்து வருகிறேன்..எனக்கு உங்களைத் தெரியும்.."

என் மனம் டாக்டரின் பேச்சில் சற்று அமைதியாயிற்று. அவர் எழுதித் தந்த மாத்திரைகளை வாங்கிக்கொண்டு ஒரு பாதுகாப்பு உணர்வுக்காக பெரம்பூரில் இருந்த என் சகோதரியின் வீட்டுக்குப் போய்விட்டேன். ஒரு வாரம் நான் அங்கேயே இருந்தேன். எனக்கு எதுவும் நேரவில்லை. தூக்க மாத்திரையின் விளைவாக ஒவ்வொரு நாளும் பன்னிரெண்டு மணி நேரம் தூங்கிக்கொண்டிருந்தேன். என் சகோதரியின் கணவரின் துணையும் பரிவும் மனப் பதட்டத்தையும் தனித்து சமனப்படுத்தி விட்டது. தூக்கத்திற்காக நான் மாத்திரைகள் சாப்பிட்டது அதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையும்.

சற்று கலைந்து போயிருந்த என் வலிமை மீண்டும் அதன் தன்மைக்கு நிமிர்ந்து கொண்டது. நான் திருவல்லிக்கேணி திரும்பி விட்டேன். ஆனால் நான் தொடர்ந்து மருத்துவ மனையில் சிகிச்சைப் பெற்றுக்கொண்டிருந்த ஆத்மாநாமைப் போய் பார்க்கவில்லை. சிகிச்சை முடிந்து அவர் வீடு திரும்பியதும் நண்பர்களுடன் சென்று பார்த்தேன். ஆத்மாநாம் எப்போதும்போல அவருடைய மென்மையான சிரிப்புடன் தெரிந்தார். ஆனால் 1979-ல் இறுதியில் அவரின் தோன்றிய மனச்சிதைவின் முதல் தாக்குதல் மீண்டும் மீண்டும் ஆத்மாநாம் வாழ்க்கையில் கொடிய நிழலாய் நச்சு அரவமாய் படமெடுத்தபடி தொடர்ந்துகொண்டே இருந்தது.

அந்த விஷத் தீண்டலில் இருந்துமனநல மருத்துவத்தால் அவரை மீட்டெடுக்க முடியவில்லை. ஆத்மாநாம் வாழ்க்கை கிணற்று நீரில் மூழ்கியதில் முடிவு பெற்றது.

என் சித்தியின் மகனின் வாழ்க்கை இதற்கு நேர் எதிராக முடிந்தது. உடம்பில் மண் எண்ணையை ஊற்றி நெருப்பிட்டுக்கொண்ட அதி உக்ர வெம்மையின் கருகி அவனின் உயிர் பிரிந்தது. இவர்கள் இருவரும் இறந்து இருபது வருடங்களுக்கு மேலாகி விட்டன. வாழ்க்கையில் மறக்கவே முடியாத சில ஜீவன்களில் இவர்களும் என் ஞாபகப் படிவுகளில் பெயர்த்துப் போடவே முடியாதவாறு உறைந்து கிடக்கிறார்கள். மேலும் மேலும் கூட இழப்புகள் வந்தன. அதேபோல் புதிய புதிய உறவுகளும் கைகோர்த்தன. வாழ்க்கை மட்டும் யாருக்காகவும் எதற்காகவும் தேக்கமுறாமல் ஆரம்பமும் முடிவும் இல்லாத பிரவாகமாய் புரண்டோடிக் கொண்டிருக்கிறது.

என்னுடைய மிக நீண்ட அறை வாழ்க்கையின் போதும் நண்பர்கள் வந்து வந்து பேசிக்கொண்டிருப்பார்கள். இப்போது என் வீட்டிற்கு வந்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். என் எல்லா நண்பர்களும் என் மனைவிக்கும் நண்பர்கள். பேச்சுக்கள் இடைவெளி இல்லாமல் தொடர்கின்றன. பேச்சில் இலக்கிய ரசனையின் பகிர்தலும் உண்டு. ஆழ்ந்த ஆன்மீகத் தேடல்களின் தத்துவ விசாரங்களும் உண்டு. என் வீட்டுப் புத்தக வரிசையில் ஆதிசங்கரரும் உண்டு. ஸ்ரீ அரவிந்தரும் உண்டு. சியாமளா தண்டகமும் உண்டு. திருமுருகாற்றுப்படையும், வால்மீகியும் உண்டு. காளிதாசனும் உண்டு. ரமணரும் இருக்கிறார். உடையவர் ராமானுஜரும் இருக்கிறார். 18 ஆயிரம் சுலோகங்கள் கொண்ட பாகவதத்தை கடந்த மாதங்களில் இரண்டு முறை வாசித்தாயிற்று. ஜராசந்தனின் பிறப்பில் அடங்கியிருக்கும் ரகசியப் பிண்டம் மறைவாய் உணர்த்தும் சூட்சுமம் சிலிர்க்க வைக்கிறது -

இவை அத்தனையையும் அள்ளிச் சுமந்தபடி வாழ்க்கை எந்தக் கனமும் இன்றி சுயேச்சையாகவே நகர்ந்துகொண்டிருக்கிறது. இலக்கியத்திற்கும் ஆன்மீகத்திற்கும் அப்பாற்பட்டு வீட்டில் ஒலிநாடாக்களின் இசைகளும் கேட்கப்படுகின்றன. கர்நாடக இசையும் ஹிந்துஸ்தானி இசையும் தணிந்த ஸ்தாயியில் கசிந்துகொண்டிருக்கின்றன. கேட்கின்ற சில சில இசைகள் ஆத்மாநாமை ஞாபகப்படுத்தும். எனக்கும் அவருக்கும் இடையில் இருந்த உறவில் இசை ரசனை மிக அழுத்தமான தளமாக இருந்ததை மறக்கவே முடியாது. நானும் நானும் ஆத்மாநாமும் இலக்கிய கூட்டங்களுக்குச் சென்றது மிகமிகக் குறைச்சல். இசை நிகழ்ச்சிக்களுக்குப் போனதுதான் அதிகம். நிஜத்தில் அவை எண்ண முடியாதவை. எம்.டி ராமநாதன், பாலமுரளி கிருஷ்ணா, மஹாராஜபுரம் சந்தானம், பட்டம்மாள், எம் எஸ் சாருமதி ராமச்சந்திரன், சேலம் ஜெயலஷ்மி, மணி கிருஷ்ணசாமி, எம்.எல்வி - போன்ற அந்தக் காலகட்ட மேதைகள் அனைவரின் சங்கீதங்களையும் கேட்பதற்கு நானும் ஆத்மாநாமும் சலிக்காமல் போயிருக்கிறோம்.

அந்த மாதிரி போகின்றபோது சில நேரங்களில் சம்பந்தப்பட்ட சங்கீத வித்வான்களை சந்தித்து ஒருசில நிமிடங்கள் அவர் பேசிக்கொண்டிருப்பார். இப்படி ஒருசில நிமிட சந்திப்புகளிலேயே எம்.டி ராமநாதனுடன் ஆத்மாநாமுக்கு நட்பு ஏற்பட்டிருந்தது. அவ்வப்போது ராமநாதனின் வீட்டுக்குப் போய் அவருடன் பேசிக்கொண்டிருப்பார். இரண்டு முறை ஆத்மாநாமுடன் எம்.டி ராமநாதனின் வீட்டுக்குப் போயிருக்கிறேன். ஆத்மாநாமைப் பார்த்ததும், "வாடா மது," யென்று ராமநாதன் அவருக்கே உரித்தான தொனியில் அழைப்பார். அவருடைய அழைப்பில் ஆத்மாநாமிடம் அவர் கொண்டிருந்த வாஞ்சையின் அந்நியோன்யத்தை உணர முடியும். 1976-ஆம் வருடம் பிப்ரவரி மாதம். ஹிந்துஸ்தானி சங்கீத வித்வான் பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. சென்னை சங்கீத ரசிகர்களின் மத்தியில் அப்போது பர்வீன் சுல்தானா மிகவும் பிரபலமாக இருந்தார். எனக்கும் பர்வீன் சுல்தானாவின் இசைமேல் பெரும் மோகமே இருந்தது. ஒருவித போதையை தந்திருக்கிறது. அவரின் ஆலாபனைகள். இரவில் அறை விளக்கை அணைத்துவிட்டு ப்ளேயரில் பர்வீன் சுல்தானாவின் இசைத்தட்டை ஒலிக்கவிட்டு இருளில் கிடந்த கணங்கள் ஒலியின் அரூப யாத்திரைப் பிரவாகமாய் என்னை ஏந்திச் சென்றிருக்கிறது. 1976 ஆம் வருட பிப்ரவரி மாத பர்வீன் சுல்தானாவின் இசை நிகழ்ச்சிக்கு ஆத்மாநாமும் நானும் செல்வதற்குத் தீர்மானித்திருந்தோம். நிகழ்ச்சி மாலை ஆறு மணிக்கு ஆரம்பம். அம்பத்தூரில் இருந்து என் அறைக்கு ஆத்மாநாம் நான்கு மணிக்கு வந்து விட்டார். உத்தேசித்திருந்தபடி ஐந்து மணிக்கு கிளம்பத் தயாரானோம் . அப்போது ஒரு வாரத்திற்கு முன்பு நான் வாங்கியிருந்த பர்வீன் சுல்தானாவின் பெரிய எல் பி இசைத்தட்டு ஒரு அழகுப்பொருள் போல என்னுடைய மர ஷெல்பில் முதன்மைப் படுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதில் பர்வீன் சுல்தானா இளமையின் வசீகரங்களோடு அழகிய நட்சத்திரமாக காட்சி அளித்துக்கொண்டிருந்தார். நிகழ்ச்சிக்குக் கிளம்பிய நிமிடம் ஆத்மாநாம் சட்டென அந்தப் புதிய இசைத்தட்டையும் எடுத்து அவருடைய பெரிய ஜோல்னா பையில் வைத்துக்கொண்டார். "இது எதுக்கு?" - நான் ஆச்சர்யத்துடன் கேட்டேன். "இருக்கட்டும்..முடிஞ்சா இதுல பர்வீன் சுல்தானாவோட ஆட்டோக்ராஃப் வாங்குவோம்," என்றார் ஆத்மாநாம். எனக்கு இந்த மாதிரி விஷயங்களில் ஆர்வம் கிடையாது. அதனால், "ஆட்டோகிராஃப்பெல்லாம் வேண்டாம் மது. கூட்டத்ல எதுக்குப்போய் அவளைப் பாத்துக்கிட்டு..சங்கீதத்தை கேட்டுவிட்டு வந்திட்டே இருப்போம்.." "ச்சூ...சோம்பேறி...பேசாம நீங்க வாங்க..நான் அவகிட்ட ஆட்டோகிராஃப் வாங்கறேன்.." ஆத்மாநாமின் முடிவை என்னால் மாற்றமுடியவில்லை. இம்மாதிரியான செயல்கள் அவருக்கு வாடிக்கைதான். நிகழ்ச்சிக்கு இருவரும் கிளம்பிச் சென்றோம்..எப்போதும்போல பர்வீன் சுல்தானாவின் நாதவெள்ளம் அதற்கே உரித்தான தாளகதிகளில் சுழித்துக்கொண்டிருந்தது. இருபது நிமிட இடைவேளை அறிவிக்கப்பட்டது. ஆத்மாநாம் அவருடைய ஜோல்னா பையுடன் எழுந்து கொண்டார். "வாங்க அவளைப் பாத்திட்டு வந்திரலாம்," என்றார். எனக்கு வழி கிடையாது. எழுந்து அவருடன் போனேன். உள் அரங்கத்திற்குள் செல்கிற வழியை நோக்கி ஆத்மாநாம் நடந்தார். மேடைக்குச் செல்கிற வழியின் கதவின் அருகில் ஒருவர் நின்று கொண்டிருந்தார். ஆத்மாநாம் இசைத்தட்டை அவரிடம் எடுத்துக்காட்டி விஷயத்தை சொன்னார். அந்த மனிதர் உள்ளே போய் இரண்டொரு நிமிடங்கள் கழித்துத் திரும்பி வந்தார். எங்களை உள்ளே போகச் சொன்னார். உள்ளே சிறிது தூரம் நடந்து மற்றொரு பெரிய அறைக்குள் நுழைந்தோம். பர்வீன் சுல்தானா நின்றவாறு யாருடனோ சிரித்துப் பேசிக்கொண்டிருந்தார். எனக்கு அது மகத்தான தரிசனம்! ஒருநாள் கூட நான் கற்பனை செய்து பார்த்ததில்லை. இத்தனை அருகில் அந்த மனுஷியைப் பார்ப்பேனென்று. சங்கீத உபாசனை அந்த மனுஷியின் தோற்றத்தில் பிரகாசமான ஒளியைப் பாய்த்திருந்தது. மனுஷியின் பார்வை எங்களை வரவேற்றது. ஆத்மாநாம் அவளுக்கு நமஸ்தே சொன்னார். நான் சொல்லவில்லை. மெய்மறந்த தரிசனத்தின் ஒடுங்கிப்போன மௌனத்தில் நான். ஆத்மாநாம் ஜோல்னா பையில் இருந்து இசைத்தட்டை எடுத்தார். பர்வீன் சுல்தானாவிடம் ஆங்கிலத்தில் சொன்னார் : "இந்த இசைத்தட்டு இவருடையது. இதில் நீங்கள் உங்களுடைய கையெழுத்திட்டுத் தரவேண்டும்..." உடனே பர்வீன் சுல்தானா புன்னகையுடன் எதிர்பாராத கேள்வியை ஆத்மாநாமிடம் கேட்டார்: "இசைத்தட்டு இவருடையது என்கிறீர்கள்..ஆனால் ஆட்டோக்ராஃப் நீங்கள் கேட்கிறீர்களே..." கேள்வியைக் கேட்டபிறகு பர்வீன் சுல்தானாவின் கண்கள் என்னை நோக்கின. ஆத்மாநாம் ஒரு மாதிரியாக திணறிப் போனார். அந்தக் கேள்வி ஏதோ ஒரு தடங்கல் போலாகி விட்டது அவருக்கு. பர்வீன் சுல்தானா - அந்தச் சில விநாடிகள்தான் -கம்பீரமாகக் காத்திருந்தார் - பதிலுக்காக. வழி தவறிவிட்ட தொனியில் ஆத்மாநாம் பதில் சொன்னார் : "உங்களுடைய கையெழுத்தும் அவருக்கும்தான் தேவை. அவர் சார்பாக நான் கேட்கிறேன். அவ்வளவுதான்.." "அப்படியானால் சரி. கொடுங்கள்.."

பர்வீன் சுல்தானா இசைத் தட்டை வாங்கிக்கொண்டார். அவரின் அருகில் நின்றவர் உடனே பேனா கொடுத்தார். இசைத் தட்டின் பின்புறத்தில் "வித் லவ்" என எழுதி கையெழுத்திட்டார் பர்வீன். மீண்டும் வாய்க்கவே முடியாத அற்புத கணம் அது. மொத்த சூழலுமே மேற்கு அடிவான சூரியனாக தகதகத்தது. என்னுடைய மொத்த உணர்வுகளும் அந்த மனுஷிக்கு நன்றி சொல்லிக்கொண்டிருந்தது. மனுஷி கையெழுத்திட்டு மட்டும் தரவில்லை. 'P’ என்ற எழுத்தின் மத்திய வெளியில் இரண்டு கண் மூக்கு வாய் வரைந்தார். வாயின் அமைப்பில் அந்த முகம் -அழுவது போலிருந்தது! Sஎன்ற எழுத்தில் இருக்கும் வெளியில் அதேபோல கண்கள் வாய் மூக்கு வரைந்தார். வாயின் அமைப்பு அந்த முகம் மலரச் சிரிப்பது போலிருந்தது. மறுபடியும் புன்னகைத்த மனுஷியிடம் இருந்து எதிர்பாராத கேள்வி என்னை நோக்கி, "இசைத்தட்டு உங்களுடையதுதானே?" "ஆம்," என்றேன். "அப்படியானால் இதை உங்களிடமே தருகிறேன்.." சங்கீத உபாஸகியிடம் இருந்து இதற்கு மேலான ஒரு பரிசு ஏதாவது இருக்கிறதாயென்ன? என் இரண்டு கைகளாலும் இசைத்தட்டைப் பெற்றுக்கொண்ட போது ஆத்மாநாமின் முகம் வாடிச் சுருங்கிப் போய்விட்டது. அன்றைய மீதி நிகழ்ச்சியில் அவரின் மனம் லயிக்கவில்லை. சுருங்கிப்போன அவரின் முகம் சுருங்கியது சுருங்கியதுதான். "என்ன அவளுக்கு மேனர்ஸ தெரியலை..ரெக்கார்டை என்கிட்டதானே வாங்கினா..திருப்பி என்கிட்டதானே தரணும்!"

திரும்பத் திரும்ப சொல்லிக்கொண்டேஇருந்தார். பர்வீன் சுல்தானாவின் கையெழுத்தைப் பார்த்துக்கொண்டே இருந்தார். P என்ற எழுத்திலும் S என்ற எழுத்திலும் வரையப்பட்ட முகங்களை கவனித்தார். பின் சொன்னார் : "P லெட்டர்ல சிரிக்கிற முகம் உங்களுடையதுபோல! S லெட்டர்ல இருக்கிற முகம் என்னோடது போல! " நான் சட்டென ஆத்மாநாமின் கையைத் தொட்டேன்.."இதுக்குத்தான் ஆட்டோக்ராஃப்பெல்லாம் வேண்டாம்னு சொன்னேன்.." என்றேன். "இட்ஸ் ஆல்ரைட் ராம்மோஹன்..லைஃப்ல என்னோட பொசிஸன் இதான். உங்களோட பொசிஸன் இதான்..இன் ஏ வே எனக்கு உங்கமேல பொறாமையாத்தான் இருக்கு..அனா என்ன பண்ண முடியும்..ஐம் ஹெல்ப்லெஸ்..." அந்தச் சம்பவத்தின் தாக்கத்திலிருந்து சில நாட்களுக்கு ஆத்மாநாம் மீளாமலேயே இருந்தார். ஆத்மாநாமின் மாற்றமுடியாத ஆளுமை இது. பர்வீன் சுல்தானா கையெழுத்துப் போட்டுத் தந்த இசைத் தட்டு இன்றும் வீட்டு கண்ணாடி அலமாரியில் பார்வையில் படும்படி பாதுகாக்கப்பட்டு வருகிறது. என்னைப்பொறுத்தவரை அந்த இசைத் தட்டு நண்பன் ஆத்மாநாமின் சோகம் தோய்ந்த ஞாபகச் சின்னம் மாத்திரம் இல்லை..அது வேறொரு இம்சையான தருணத்தின் பிரத்யேக வரைபடமும்தான். இன்னும் ஒலி நாடாக்களின் சுழற்சியில் பர்வீன் சுல்தானாவின் ஆலாபனைகள் வீட்டில் ஒலித்துக்கொண்டிருக்கின்றன நானும் கேட்டுக்கொண்டிருக்கிறேன். நண்பன் ஆத்மாநாம் இல்லை.

(ஆத்மாநாம் பற்றி ஸ்டெல்லா புரூஸ் எழுதிய கட்டுரையின் இரண்டாவது பகுதி)

Comments

ஆத்மாநாமின் தற்கொலைதான் வாழ்க்கையைப் பற்றிய அவரின் கடுமையான புகார். கடைசிப் புகார்..//
அதிர்வேற்ப‌டுத்தும் வ‌ரிக‌ள்.

க‌ட்டுரையின் ப‌ல‌ ச‌ம்ப‌வ‌ங்க‌ள் விய‌ப்பையும் வ‌ருத்த‌த்தையும் ஒருசேர‌த் த‌ருகிற‌து. ப‌ர்வீன் சுல்தானாவின் பாதுகாக்க‌ப்ப‌ட்ட‌ இசைத்த‌ட்டு போல் பாதுகாக்க‌ப்ப‌ட‌ வேண்டிய‌ நினைவுச் சின்ன‌மாய் க‌ட்டுரை. ந‌ட்பின் உன்ன‌த‌ம் துல்லிய‌மான‌ அதிர்வுக‌ளுட‌ன் ந‌ம‌க்குள்.