Skip to main content

உள்ளே


வராதே!", அந்தக் குரல் கம்பீரமாக ஒலித்தது.

"என்னது?!?", சட்டென்று ஒலித்த அந்தக் குரலால், சற்று உறுதி குலைந்த குரலில் கணிதன் கேட்டான்.

"உள்ளே வராதே என்றேன்."

.'தமிழா?' கணிதன் மனதுக்குள் மீண்டும் குழப்பம்.

"இங்கு மொழி ஒரு தடையல்ல".

'அட! நான் மனதிற்குள்தானே நினைத்தேன். டெலிபதியா? அது சரிதான். இவருக்கு இந்த வித்தை கூட தெரியாவிட்டால் எப்படி! கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும். கண்டபடி நினைக்க கூடாது!'

கணிதனின் மனதுக்குள் சிந்தனை ஓடிக் கொண்டிருந்தது.

"இது டெலிபதியல்ல! உன் மனதிற்குள் உள்ளவை அனைத்தும் எனக்குத் தெரியும். ஆனால் நான் நினைப்பது, நான் நினைத்தால் மட்டுமே உனக்கு கேட்கும். கேட்கிறது என்பது கூட உனது மாயைதான். அவற்றை நீ உணர்கிறாய். அவ்வளவுதான்!"

கணிதன் மனதைக் கட்டுப்படுத்த கொஞ்சம் கஷ்டப்பட்டான்.

'மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். மனதைக் கட்டுப்படுத்த வேண்டும். கண்டபடி ஓடாதே.

சரி! நீங்கள் யார்?

அப்பாடா! சரியான கேள்வியை கேட்டு விட்டேன்.'

"உன் மனம் கட்டுப்படவில்லை. ரொம்பக் கஷ்டப் படுகிறாய். நான் யாரென்று கேட்டாய். நீ எதைத் தேடி வந்தாயோ அதுதான் நான்."

கணிதனின் உடலில் உடனே அட்ரினலின் வேகம் அதிகரித்தது. வியர்வை பொங்கியது. ஆனந்தத்தில் உடல் நடுங்கியது.

'நிஜம்தானே? ஆனால் எதுவும் கண்ணுக்கு தெரியவில்லையே? ஒரு வேளை...' கணிதனின் நினைவோட்டத்தை, அந்தக் குரல் தடுத்து நிறுத்தியது.

"வீணாக ஏன் மனதை அலட்டிக் கொள்கிறாய்? நான் உருவமில்லாதவன். அருவமானவன்."

'அருவமானவன்! அப்படியென்றால் ஆணா?'

"எனக்கு பால் கிடையாது. ஆனால் உனது மொழிக்கு ஏதாவதொரு பால் தேவைப்படுவதால், அப்படி மொழிபெயர்க்கப்பட்டு நீ புரிந்து கொண்டாய். உனது ஆணாதிக்கச் சிந்தனை அதை ஆண் பாலாக மாற்றி விட்டது."

'சரி! சரி! நான் உள்ளே வரக்கூடாது என்றீர்களே? நான் என்ன அவ்வளவு பாவம் செய்தவனா? பிறந்ததிலிருந்து உங்களை சந்திப்பது ஒன்றையே குறிக்கோளாக கொண்டு வளர்ந்தவன். பல கஷ்டங்களை கடந்து இன்று உங்கள் முன் நிற்கிறேன். பல கோடி ஒளி வருஷங்கள் பிரயாணித்து இங்கு வந்திருக்கிறேன். என்னை இப்படி வாசலிலேயே தடுத்து நிறுத்துவது முறையா?'

"நீ இப்பொழுது இந்த வாசலைத் தாண்டி வரக்கூடாது. வர முடியாது!"

'அதுதான் ஏன்?'

"ஏனென்றால் உன்னிடம் சில பொருட்கள் இருக்கின்றன. ஒரு வாகனம் இருக்கிறது. அவற்றோடு நீ உள்ளே நுழைய முடியாது."

'வாகனம்தான் பிரச்சனையா? இதை விட்டுவிடலாம்.

'கணிதன் தன் வாகனத்திலிருந்து வெளியே குதித்தான்.

'இப்பொழுதாவது உள்ளே போக முடியுமா?'

"இப்பொழுதும் நீ உள்ளே வர முடியாது. உன்னிடம் மேலும் சில பொருட்கள் இருக்கின்றன."

கணிதன் தனது சுவாசக் குழாய், சிலிண்டர் முதலியவைகளை கழற்றி எறிந்தான்.

'உடைகள்?'

"அவையும் பொருள்தானே"

மறு எண்ணம் எண்ணாமல் கவச உடைகளையும், தலைக் கவசத்தையும் கழற்றினான். பின் தனது உள்ளாடைகளையும் களைந்தெறிந்தான்.

கவச உடைகளை கழற்றிய பின்னும் அவனுக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை. தடையில்லாமல் சுவாசித்தான். ஒரு நல்ல வாசம் வேறு வீசிக் கொண்டிருந்தது.

'இப்பொழுது என்னிடம் ஒன்றுமில்லை. உள்ளே வரலாமா?'

"இன்னமும் ஒன்று உன்னிடம் இருக்கிறது. அதோடு இங்கு யாரும் உள்ளே வர முடியாது."

'ஆனால், என்னிடம் எதுவுமேயில்லை'

"நன்றாக எண்ணிப்பார்! எல்லாவற்றையும் விட்டு விட்டாயா? உனது என்று சொல்லிக் கொள்வதற்கு ஒன்றுமேயில்லையா?"

'என்ன இருக்கிறது? உங்களுக்கேத் தெரிய. ஓ! புரிந்து விட்டது! புரிந்து விட்டது கடவுளே! புரிந்து விட்டது!!

'கணிதனின் உடலில் திடீரென்று ஏற்பட்ட அந்த ஒரு நொடி அதீதீதீதீத பரவசத்தால், மார்பில் அதிகமாய் ரத்தம் பாய, எதோ ஒன்று வெடிக்க, சில நலிந்து போன நரம்புகள் அறுந்து தெறிக்க, உயிர் பிரிந்தது.கணிதனின் உடல் அவன் தூக்கியெறிந்த பொருட்களுக்கிடையில், முடிவில்லாத அந்த பள்ளத்தில் விழுந்து கொண்டிருந்தது.

ஒரு நிமிடம் கழித்து, தவளையை கார்ட்டூனாய் வரைந்தது போன்ற ஒரு உருவம் அந்த வாசலிலிருந்து எட்டிப் பார்த்தது.

'இவன் இங்கே கடவுளைத் தேடித்தான் வந்தான். நல்லவன்தான். ஆனாலும், இவனை நமது கிரகத்துக்குள் வர அனுமத்திருந்தால், இவனால் நமது கிரகத்துக்கு பல தீமைகள் விளைந்திருக்கும். நம்மிடம் டெலிபதி, மொழிக்கடத்தல் என்று பல விஞ்ஞான வசதிகளிருந்தாலும், இந்த ஜந்துக்களின் பலத்தை எதிர்த்து நிற்பது மிகக் கடினம். இந்த வெளியுலக ஜந்துக்களுக்கு நம்மைப் பற்றி தெரியாமலிருக்கும் வரைதான் நமக்கு பாதுகாப்பு.', என்று அந்த தவளைக் கார்ட்டூன் தனது மொழியில் நினைத்துக் கொண்டது யாருக்கும் கேட்கவில்லை.

Comments

Popular posts from this blog