Skip to main content

துங்கபத்திரை


எனக்கு நினைவு மங்கிக்கொண்டு வருகிறது என்று சொன்னால் சட்டென்று நம்ப மறுக்கிறார்கள். நுண்ணிய தகவல்கள் நினைவுக்கு வராது. ஆனால் அனுபவம் நிலைத்திருக்கிறது.

பாவண்ணனின் ஆரம்பக் கதை 'கணையாழி' யில் வெளியானது. இரு எழுத்துக்களில் தலைப்பு என்ற ஞாபகம். 'இந்த இளைஞன் எவ்வளவு நன்றாக எழுதியிருக்கிறான்! தொடர்ந்து எழுதிப் புகழ் பெற வேண்டும்!' என்று நினைத்துக் கொண்டேன். வெகு நேர்த்தியான கையெழுத்து. நல்ல கதையொன்று தபாலில் வந்தால் அது எழுதப்பட்ட விதத்திலிருந்து அந்தக் கையெழுத்துக்குரியவர் எப்படி இருப்பார் என்று சில நிமிடங்கள் யோசிப்பேன். நான் அன்று நினைத்தது பொய்த்துப் போகவில்லை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு ஐந்து அமெரிக்க எழுத்தாளர்களுடன் கலந்து ஒரு படைப்புக்களம் புது டில்லியில் நடந்தது. அதற்குப் பாவண்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். தமிழ்ப் பிரிவு நடந்தது போல எந்த மொழிப் பிரிவும் நடக்கவில்லை. அவற்றில் இருந்த மூத்த எழுத்தாளார்கள் அவர்களைப் பற்றியே பேசிக்கொண்டு மூன்று நாளையும் முடித்தார்கள் என்று கூறினார்கள். ஒரு பயிற்சியாக ஒரு பத்திரிகைச் செய்தியை அடிப்படையாகக் கொண்டு இரு பக்கங்களில் ஒரு புனைகதை எழுதச் சொன்னேன். ஐந்து பேரும் ஐந்து வெவ்வேறு சிறந்த கதைகளை எழுதியிருந்தார்கள்.

இந்த மாதம் (ஏப்ரல் 2008) பாவண்ணனின் கட்டுரைகள் ஒரு தொகுப்பாக வந்திருப்பதைப் படிக்க நேர்ந்தது. பதினாறு கட்டுரைகள். பல கட்டுரைகள் நேரடியாகக் கர்னாடகத்தைக் களமாகக் கொண்டவை. பாவண்ணன் பயணம் மேற்கொள்ள தயக்கமில்லாதவர் என்றும் தெரிந்தது. ஒவ்வொரு கட்டுரையும் ஆழமான சிந்தனைகளில் வெளியானது. மிகவும் மகிழ்ச்சியாயிருந்தது. ஓரிடத்தில்கூட அபசுவரம் இல்லாத பக்குவமான தேர்ந்த எழுத்து. நான் சமீபத்தில் பாவண்ணன் வசிக்கும் பெங்களூருக்குச் சென்றிருந்தேன். அங்கிருந்த இரு நாட்களிலும் உடல் நலமில்லை. நான் தங்கியிருந்த வீட்டினருடன் கூடச் சரியாகப் பேச முடியவில்லை. பாவண்ணனைச் சந்திக்கவில்லை. இன்னும் பல நண்பர்கள், உறவினர்களையும் பார்க்க முடியவில்லை. நான் தொலைபேசியில் கூடப் பேசவில்லை.

இன்று நான் படித்த 'துங்கபத்திரை' நூலை அன்று படித்திருந்தால் ஒரு வேளை பாவண்ணனைப் பார்க்க முயற்சி செய்திருக்கக் கூடும். அடுத்த முறை என்பது எனக்கு இருக்குமா என்று சந்தேகமாக இருக்கிறது.
**********

நான் சிறுவனாக இருந்தபோது ஒரு முறை துங்கபத்திரையைக் கடந்தேன். அது 1941-ம் ஆண்டு. நாங்கள் போய்த் தங்கப் போகும் வீடுகளுக்குக் கொடுப்பதற்காகத் துவரம்பருப்பையும் உளுத்தம்பருப்பையும் சிறு சிறு மூட்டைகளாகக் கட்டி அவற்றைப் படுக்கைச் சுருளில் எடுத்துச் சென்றோம். அன்று தானியங்கள் ஓசூரிலிருந்து இன்னொரு ஊர் எடுத்துச் செல்வது குற்றம். என்ன சட்டம், என்ன விதி என்று தெரியாது. ஆனால் பிடிபட்டால் நடுவழியில் இறக்கி விட்டுவிடுவார்கள். இரயிலில் படுக்கையையே நாங்கள் பிரிக்க மாட்டோம்.

இரண்டாம் முறை ஹம்பி பார்க்கச் சென்றபோது பாவண்ணன் ஹம்பி பற்றி எழுதியிருப்பாரோ என்று எண்ணினேன். ஹம்பி என்ற விஜயநகரம் மிகப் பெரிய நகரம். குறுக்கே துங்கபத்திரை ஓடுகிறது. செங்கல் சுண்ணாம்புக் கட்டிடங்கள் முன்னூறு நானூறு ஆண்டு இருக்க வாய்ப்பில்லை. ஆனால் நிறையக் கட்டிடங்கள் கருங்கல்லால் கட்டப்பட்டவை. கோயில்களும். எவ்வளவு பெரிய நரசிம்மர்! ஆனால் ஒரு சிற்பம் ஒரு சிலை தப்பவில்லை. பாமினிஅரசர்கள் ஆறு மாதங்கள் கல்லுளியும், சுத்தியலும் கட்டப்பாரையும் கொண்டு ஆட்களை விட்டு ஓரங்குலம் விடாதபடி உடைத்திருக்கிறார்கள். அந்தப் பாமினி வம்சத்துக்குப் பெயரே ஒரு 'பொம்மன்' (பிராமணன்) ஆசியால் ஏற்பட்டது என்று ஆங்கிலேயர்கள் எழுதிய வரலாறிலேயே இருக்கிறது. விஜயநகர அரசனைத் தோற்கடித்துத் துரத்தியாகிவிட்டது. ஆனால் நகரத்தை வென்றவர்களே பயன்படுத்தியிருக்கலாமே?

சென்ற வாரம் நடந்த ஒரு நிகழ்ச்சியையே எவ்வளவு விதவிதமாக வெவ்வேறு குழுக்கள் சித்திரிக்கின்றன? ஐம்பது ஆண்டுகள் நூறு ஆண்டுகள் பற்றி எப்படி உறுதியாக இருக்க முடியும்? இரண்டாயிரம் ஆண்டுகளாக வரலாறைக் கூறியே யூதர்களை எல்லாருமே சேர்ந்து வேட்டையாடினார்கள். இரண்டாம் உலக யுத்த நாட்களில் மிகக் கொடூரமாக இயங்கிய யூத அழிப்புச் சாலையாக விளங்கிய ஆஷ்விச் அனுபவத்திலிருந்தும் தப்பியவர் ஒருவரின் செய்தி படித்தேன். அந்த 1944 ஆண்டில் அவருடைய வயது 15. ஆதலால் எல்லாம் தெளிவாகத் தெரியக் கூடிய பருவம். "இன்றும் நினைவுகள் துரத்துகின்றன. ஆனால் இந்த நினைவுகள்தான் எனக்குக் கவசமாகவும் தோன்றுகின்றன," என்று அந்தக் கிழவர் கூறியிருக்கிறார்.

(நவீன விருட்சம் 79-80 வது இதழில் வெளிவந்த கட்டுரை - July 2008)

Comments

Popular posts from this blog