அழகியசிங்கர்
1 . நாற்காலி
நாற்காலியில்
அமர்ந்திருந்தேன்
நாற்காலியோடு
நானும் நிறைந்திருந்தேன்
நாற்காலியை விட்டு
எழுந்து நின்றேன்
இப்போது
நாற்காலி மட்டும்
தனியாக அமர்ந்திருக்கிறது.
2. பிள்ளையார்
மனதில்
உருவாகியிருக்கும்
பிள்ளையாருக்கு
பல்லாயிரக்கணக்கான
கைகளும்
பல்லாயிரக்கணக்கான
முகங்களும்
ஓர் அதிசய உருவமாய்க்
கண்ணில் தென்படுகிறார்
3. வார்த்தைகள்
நான்
எழுதிக்கொண்டே
போகிறேன்
நீ
வாசித்துக்கொண்டே
போகிறாய்
இருவருக்கும்
இடையில்
வார்த்தைகள்
புரண்டு போய்க்
கொண்டிருக்கின்றன
4.. ஊஞ்சல்
எனக்கு
ஊஞ்சலில் உட்கார பயம்
அதுவும்
ஆடிக்கொண்டிருக்கும்
ஊஞ்சல் என்றால்
பயமோ பயம்
என் மனதில்
எப்போதும்
ஒரு ஊஞ்சல்
ஆடிக்
கொண்டிருக்கிறது
எப்போதும்....
5.. ரவாதோசை
க.நா.சு மயிலாப்பூரில்
வசித்து வந்தார்
அவர்தான் ராயர் ஓட்டலை
அறிமுகப்படுத்தினார்
நாங்கள்
இலக்கியவாதிகள்
ரவாதோசை ஆர்டர்
செய்து சாப்பிட்டோம்.
க.நா.சு போனபிறகு
இன்னும் கூட
ரவாதோசை நாவில்
கரைந்து கொண்டிருக்கிறது
ஏனென்றால்
நாங்கள் இலக்கியவாதிகள்
ரொம்பவும் கற்பனை செய்வோம்
Comments