Skip to main content

ஜெயந்தி ஜெகதீஷ்ஷின் ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக் குண்டு’

 

அழகியசிங்கர்


உணர்வுகளில் சிக்குண்ட கதைத் தொகுப்பு


எல்லாச் சிறுகதைகளையும் படித்துவிட்டேன். ஒரே மூச்சாக. 15 கதைகள் கொண்ட தொகுப்பு. இந்தச் சிறுகதை ஆசிரியர் ஒரு பெண். இவருடைய சிறுகதைகள் எந்தப் பத்திரிகையிலும் பிரசுரமாகவில்லை என்பது ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் அகல் என்ற மின்னிதழில் பிரசுரமாகியிருக்கிறது.
மேற்கு மாம்பலத்தில் விஎம்எ ஹாலில் நூல் வெளியீடு. நானும் ஒரு பேச்சாளன். முதலில் தயக்கமாக இருந்தது. புது சிறுகதை எழுத்தாளராக இருக்கிறாரே எப்படி சிறுகதை இருக்குமென்று. ஆனால் எதிர்பார்த்ததை விடச் சிறப்பாகவே எழுதியிருக்கிறார்.
நாம் எதிர்பார்க்கிற மாதிரிதான் கதைகள் எழுதப் பட வேண்டுமென்பதில்லை. உதாரணமாக ‘ரெஜித்தர் ஆபிஸ் மசிக்குண்டு’ என்ற கதையை எடுத்துக்கொள்வோம். இந்தக் கதையை நான் எழுதுவதாக இருந்தால் வேற மாதிரி எழுதியிருப்பேன். நான் எழுதுவதுதான் சரி என்று சொல்ல வரவில்லை.
இந்தக் கதையில் ஒரு வரி வருகிறது. ‘வாசல்ல கிடந்த திண்ணையிலேயே உக்கார்ந்து கிடந்தோம். உள்ள டொம் டொம்முன்னு அந்த மசிகுண்ட வெச்சு அடிச்சுக்கிட்டே இருக்காக’
எத்தனை வயல், எத்தனை வீடு ரெசிஸ்தர் ஆபீஸ்சுல இருக்கிற மசிக்குண்டு அத்தனையும் மாத்தி விடுவாத எழுதியிருக்கிறார். கூடவே உணர்ச்சிப் பெருக்கத்தை.
ரெசிஸ்டர் அதிகாரி என்னிடம் கேட்டார். ‘முழுச்சம்மதத்தோடதானே இந்த இடத்தை அவருக்கு விக்கிறீங்க’ இந்த இடத்தில் ஜெயந்தி ஜெகதீஷ் கதையை முடித்திருக்க வேண்டும்.
பல கதைகளில் இவர் பயன்படுத்துகிற வரிகள். அவற்றைக் கவனத்தில் கொள்ள வேண்டுமென்று தோன்றுகிறது. உப்புக் கோட்டையெனச் சரிந்து விழுந்தது என்கிறார். இன்னொரு இடத்தில் ஒரு பட்டுப் பூச்சியைக் கூட ரசிக்க இயலாத ஒரு தலைமுறை என்கிறார். கொப்பரை என்கிற கதை. ஒரு தனியார்ப் பள்ளியில் ஆசிரியராகச் சேரும் ஒரு பெண். ஆரம்பத்தில் அவள் வைத்திருந்த கனவுகள் எல்லாம் மடமடவென்று சரிவதைக் காண்கிறாள். திருமணம் செய்வதற்கு வழியில்லை. அப்போது கணக்கு வாத்தியார் மெய்யப்பன் தன் காதலைச் சொல்கிறார். அவருக்கு என்ன வயது? 40 வயதுக்கு மேல். அவர் செல்வந்தராக இருந்தும் அவரைப்பிடிக்கவில்லை. ஒரு வரியில் கதையில் வெளிப்படுத்துகிறார். ‘அவரைப் பார்க்கும்போது எனக்குள் ஒரு பொதுக் கழிப்பிட நாற்றம் அடிக்கும்’ இந்த வரியில் கதையே அடங்கி விட்டது.
அந்தப் பெண்ணின் அம்மா யாராவது கிடைத்தால் போதும் திருமணம் செய்து கொண்டு விட வேண்டுமென்று நினைக்கிறாள். ‘ஒரு அபலையின் குரல் போல் ஒலித்தது அம்மாவின் குரல்’ என்று முடித்துவிட்டிருக்கலாம் ஜெயந்தி ஜெகதீஷ் இன்னும் இழுத்துக்கொண்டு போகிறார்.
ஒவ்வொரு கதையையும் படிப்பவரைச் சிரமப்படுத்தாமல் கன கச்சிதமான வடிவத்துடன் முடித்து விடுகிறார். ஒரு 3 அல்லது 4 பக்கங்களுடன் முடித்து விடுகிறார். ஒரு சில கதைகள் பக்கங்கள் கூட.
‘எனக்குள் நான்’ என்ற கதை பெண்ணிற்கு இயல்பாக நடக்கும் கதை. படிப்பவருக்கும் ஒரு பெண்ணின் வலியை உணரும்படி கொண்டு வருகிறார். அந்த வலியை ஏற்றுக்கொள்கிற பக்குவம் வேண்டுமென்றும் முடிக்கிறார்.
பொதுவாக ஜெயந்தி ஜெகதீஷ் கிட்டத்தட்ட எல்லாக் கதைகளிலும் ஆணை மையப்படுத்தித்தான் எழுதியிருக்கிறார். இந்தப் புத்தகத்தில் அவருடைய பெயரை எடுத்துவிட்டால் ஒரு பெண் எழுத்தாளர் கதை என்று சொல்ல மாட்டார்கள். அப்படி எழுதலாம் அப்படி எழுதுவதில் தவறில்லை. ஆல்பர்ட்டோ மொரவியா என்ற இத்தாலி எழுத்தாளர். அவர் ஒரு ஆண் எழுத்தாளராக இருந்தாலும் பெண்ணை மையப்படுத்தித்தான் எழுதுவார். அவர் கதைகளில் பெண் பாத்திரங்கள்தான் முதன்மைப் படுத்தியிருக்கும். தி வுமன் ஆப் ரோம் என்ற நாவலைப் படித்தேன். ஒரு விலைமாதுவைப் பற்றிய கதை. பெண்ணின் உடல்மொழியைத் தத்ரூபமாகக் கொண்டு வருகிறார்.
வேலைக்காரி’ என்ற கதை. அந்தக் கதை ஆரம்பிக்கும்போதே இப்படி ஆரம்பிக்கிறது. அந்த வீட்டு வேலைக்காரிக்கும் வீட்டு ஓனருக்கும் பாக்கம் என்று ஆரம்பிக்கிறது. இந்தக் கதையில் வேலைக்காரியைப் பற்றியும் ஓனரைப் பற்றி மூன்றாவது மனிதர் சொல்வதுபோல் வருகிறது. இது நல்ல முயற்சி.
இன்னும் சில கதைகளில் ஆண் காதலிக்கிறான். மனம் விட்டு தன் எண்ணத்தைப் பெண்ணிடம் சொல்லத் தயங்குகிறான். பிரிந்து போய்விடுகிறார்கள். கனத்த மனதுடன். பிரிவு ஏற்படுத்தும் அழுத்தம் கதைகளில் வெளிப்படுகின்றன.
‘ஸ்ரீ’ என்ற கதை. இக் கதையில் கண்ணிலாதவன் காதலிக்கிறான். சொல்லத் தயக்கம்தான் இந்தக் கதை. ஸ்ரீ ராகவ விட்டுப் பிரிந்து போய்விடுகிறாள். இருவரும் தங்கள் எண்ணங்களை வெளிப்படையாகச் சொல்லவில்லை. கண்ணீரை விடையாக அளிக்கிறார். இப்படி இன்னொரு கதையும் இத் தொகுப்பில் உள்ளது.
நாற்பத்தைந்தாம் வயதில் காதல் வயப்படும் ஒரு பெண்ணின் கதை. ‘மனவெளி’ என்ற பெயர். ஒரு நடன நிகழ்வை வானதி பார்க்கிறாள். தன் பக்கத்துச் சீட்டில் வந்தமரும் ஸ்ரீனிவாசனுக்கு வயது 60 இருக்கும். அவரைப் பார்த்தவுடன் காதல் துளிர்க்கிறது. வானதிக்கு. அப்படிப்பட்ட அனுபவம் சிலருக்கு ஏற்படும். முதல் கதைத் தொகுப்பு என்பதோடல்லாம் எந்தக் கதையும் எந்தப் பத்திரிகைக்கும் எழுதவில்லை என்பது சற்று ஆச்சரியம்தான்.
இந்தச் சிறுகதைத் தொகுப்பின் விலை ரூ.130. தொகுப்பைப் பெறத் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைப்பேசி எண்: 9445912564.
(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை திண்ணையில் 5 டிசம்பர் 2021 வெளி வந்துள்ளது.)
Chandramouli Azhagiyasingar

Comments