க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’
அழகியசிங்கர்
44வது புத்தகக் காட்சியை ஒட்டில் 100 கவிதை நூல்கள் வெளிவந்துள்ளன என்ற குறிப்பை முகநூலில் படித்தேன். பல பதிப்பகங்கள் போட்டிப் போட்டுக்கொண்டு கவிதைப் புத்தகங்கள் வெளியிட்டிருக்கின்றன.
இதைத் தவிரப் பலர் தனிப்பட்ட முறையில் கவிதைப் புத்தகங்களை வெளியிட்டுள்ளார்கள். எந்த விளம்பரமும் இல்லாமல் இந்தப் புத்தகங்களும் வராமலில்லை.
டிசம்பர் 2013 அன்று வெளிவந்த க.வை.பழனிசாமியின் ‘காற்றில் கரையும் கணினி’ என்ற கவிதைத் தொகுதி என் கவனத்திற்கு வந்தது.
பழனிசாமி ‘முழுமை பெறாத அனுபவங்கள்’ என்ற தலைப்பில் தன் கவிதைப் புத்தகத்தை அறிமுகப்படுத்துகிறார்.
இப் புத்தகத்தில் உள்ள கவிதைகளைப் படிப்பதற்குமுன் இந்த முன்னுரையைப் படிக்க வேண்டும்.
– கவிதை குறித்துச் சொல்ல யாருக்கும் ஏதேனும் கருத்து இருப்பதுபோல எனக்கும் இருக்கிறது.
– நவீனக் கவிதையைப் பொறுத்தளவில் கவிதையைத் தந்த கவிஞனும் வாசகனும் ஒரு தளத்தில் சந்திப்பதில்லை.
இந்தக் கட்டுரையில் கூறப்பட்டுள்ள இந்த இரண்டு கருத்துகளையும் முழுதாக நான் ஏற்றுக்கொள்கிறேன்.
எல்லோருக்கும் கவிதையைக் குறித்து கருத்துச் சொல்ல உரிமை உண்டு. நவீன கவிதை எப்படி எழுதப்பட்டிருக்கிறது என்று ஒவ்வொருவர் ஒரு கருத்துச் சொல்வதால் தெளிவு ஏற்படுவதற்குப் பதில் குழப்பம்தான் மிஞ்சுகிறது.
எப்போதுமே கவிதையைத் தந்த கவிஞனும் வாசகனும் சந்திப்பதில்லை.
பழனிசாமியின் கவிதைகளை முன்னும் பின்னும் புரட்டினேன். உயர்ந்த தளத்தில் கவிதைகளை எழுதி உள்ளார். எல்லாக் கவிதைகளைப் பற்றியும் குறிப்பிட வேண்டுமென்று தோன்றுகிறது. அது சாத்தியமில்லை என்பதால் ஒருசில கவிதைகளுடன் நிறுத்திக் கொள்கிறேன்.
முதலில் ‘ரயில் வாசனை’ என்ற கவிதையைப் பார்ப்போம்.
ரயில் நிலையம் நுழையும்போது
அப்பாவும் அம்மாவும்
வேறு சில முகங்களும்
என்னோடு சேர்ந்துகொள்ளும்
பெட்டிகள் வைத்து
ஜன்னல்பார்த்து உட்காருவேன்
சந்தனப்பொட்டின் ஈரம் காயாது
அப்பா தெரிவார்
மயில் வண்ணப் புடவையில்
அம்மா சிரிப்பாள்
ஓடும் ரயிலில் அவ்வப்போது
இறங்கி
வயல்களில் மலைகளில்
சில நேரம் கடல்மீது கூட
காலாற நடந்து வருவேன்
திருவணி சொம்பிலிருந்து
நீர் அருந்துவேன்
அம்மாவின் விரல் மணக்கும்
புளியோதரையைப்”
பாக்கு மட்டை அவிழ்த்து
அப்பா நீட்டுவார்
ஒரு ஸ்டேசன் வர
அப்பா இறங்கி
நீர் பிடிக்கப் போனார்
இறங்கும்போதெல்லாம்
ரயில் கிளம்பும் பயம்
“ தொற்றிக்கொள்ளும்
மணி அடித்தது
வண்டியில் அப்பா ஏறவில்லை
அருகில் அம்மாவும் இல்லை.
மினரல் வாட்டர்
டப்பர்வேர் அருகில்
தலைசாய்ந்து கிடந்தது
அடுத்த முறை அப்பாவை
தண்ணீர் பிடிக்க
அனுமதிக்கமாட்டேன்
இக் கவிதை எளிதாகப் புரிகிறது. கவிதையின் மைய நாதம் பயம். அப்பாவையும் அம்மாவையும் ரயில் நிலையத்தில் அழைத்துப் போகும் ஒரு இளைஞனின் கவலையை அழகாகவும் ஆழமாகவும் படம் பிடித்துக் காட்டியிருக்கிறார்.
அப்பா சும்மா இருக்க முடியவில்லை. ஒவ்வொரு ஸ்டேஷனிலும் ம் தண்ணீர் பிடித்துவர இறங்கி விடுகிறார். கூட வருகிற பையனால் தடுக்க முடியவில்லை. அது மாதிரியான தவிப்பு உண்மையானது. கூடவே அப்பாவுடன் இருக்கும் அம்மாவும் காணும்.
ஓடும் ரயிலில் அவ்வப்போது இறங்கி வயல்களில் மலைகளில் சில நேரம் கடல்மீது கூட காலாற நடந்து வருவேன் என்கிறார். அதற்குத்தான் சன்னல் இருக்கையைப் பிடித்துக்கொண்டு விடுகிறார். சன்னல் மூலம் பார்க்கும் உலகம் விதம் விதமான காட்சிகளைக் காட்டியவண்ணம் இருக்கிறது. அதைப் பார்த்தவுடன் கற்பனையில் ஆழ்ந்து விடுகிறார் கவிகுரலோன்.
இருக்கும்போது அப்பா பரிவுடன் விரல் மணக்கும் புளியோதரையை பாக்குமட்டை அவிழ்த்து அப்பா நீட்டுவார். இதெல்லாம் சரி அப்பா அடிக்கடி தண்ணீர் பிடித்து வருகிறேன் என்று காரணம் சொல்லி இறங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாமல் இருக்கிறது. அவர் இறங்கும்போது ரயில் கிளம்பும் பயம் வந்து விடுகிறது.
ஒரு தீர்மானத்திற்கு வருகிறார். அடுத்த முறை அப்பாவை அழைத்து வரும்போதே தண்ணீர் பிடிக்க அனுமதிக்க மாட்டேன் என்கிறார் கவிகுரலோன்.
மிகச் சாதாரண அனுபவத்தை நம் முன் காட்சிப் படுத்துகிறார் கவிஞர். கவிதையில் ஒரு இடத்தில் மினரல் வாட்டர் டப்பர்வேர் அருகில் தலைசாய்ந்து கிடந்தது என்று.
மினரல் வாட்டர் தீர்ந்து விடுகிறது என்ற காரணத்தால்தான் அடிக்கடி நிலையத்தில் தண்ணீர் பிடிக்க இறங்கி விடுகிறார்.
‘அகவெளிக் குழந்தை’ என்ற ஒரு கவிதை.
அம்மாவைப் பார்க்கும் ஆசை
வளர்ந்தபடியிருக்கிறது
இறந்துபோன அம்மாவை
அழைத்து வர இயலாது
காஃபி குடிக்கும் வெறி
இந்த நள்ளிரவில்
சிலிண்டரில் கேஸ் இல்லை
ஃபிரிட்ஜில் பாலும் இல்லை
வெகுதூரம் நடந்து
குடித்து வரும் மனம் இல்லை
பெரிய நகரிலிருக்கும்
வீட்டை
அலுங்காது குலுங்காது
அப்படியே தூக்கி
மலைச்சரிவில் வைக்க
எதன் அறிவும் உதவவில்லை
இருந்தும்
அம்மாவைப் பாக்கணும்
காஃபி குடிக்கணும்
மலைக்கு
வீட்டைக் கொண்டு போகணும்
இப்போதே இப்பொழுதே!
இவர் கவிதைகளில் குடும்பத்தைப் பெரும்பாலும் கொண்டு வருகிறார். அம்மா மீதும் அப்பா மீதும் பாசம் அதிகம் கவிகுரலோனுக்கு.
இறந்துபோன அம்மாவைப் பார்க்க ஆசைப் படுகிறார். காஃபி குடிக்கும் வெறி வரும்போது அம்மா ஞாபகம் வருகிறது.
பெரிய நகரிலிருக்கும் வீட்டை அப்படியே தூக்கிக்கொண்டு மலைச் சரிவில் வைக்க ஆசைப்படுகிறார். அதுவும் இப்போதே. காப்பி குடிக்க வேண்டும், அம்மாவைப் பார்க்க வேண்டும். மலைச்சரிவில் வீட்டைக் கொண்டு போக வேண்டும். எல்லாம் இப்போதே.
கவிதைப் புத்தகத்தை நண்பர்கள் ஆனந்த், தேவதச்சனுக்கு அர்ப்பணித்திருக்கிறார். அதனால்தான் என்னவோ தேவதச்சன் இவர் கவிதைகளில் ஆங்காங்கே தென்படுகிறார். கவிதைகளில் இவருடைய அனுபவத்தைத்தான் சிறப்பாகக் கொண்டு வருகிறார். தேவதச்சனுக்கும் அதற்கும் சம்பந்தமில்லை.
அட்டையின் பின் பக்கம் இவர் கவிதைகள் குறித்து ஆனந்த் ஒரு பாரா எழுதியிருக்கிறார். அதை ஏன் இவர் புத்தகத்தில் சேர்த்தார் என்று தெரியவில்லை. ஒன்றும் புரியவில்லை. அபிமானத்தால் சேர்த்திருப்பார்.
மற்றபடி இவருடைய கவிதைகள் ஒவ்வொன்றும் வித்தியாசமானவை. 2013 ஆண்டு இந்தத் தொகுதி காலச்சுவடு பதிப்பகம் மூலம் வந்துள்ளது. விலை ரூ.70. பக்கங்கள் 80
(தமிழின் முதல் இணைய வார பத்திரிகை
Comments