அழகியசிங்கர்
நான் இதை எழுதும்போது என் முன்னால் ஏகப்பட்ட கவிதைத் தொகுதிகள் படிக்கக் கிடைக்காமலில்லை. இதைப்பற்றியெல்லாம் பக்கம் பக்கமாக எழுத வேண்டுமென்று தோன்றுகிறது. ஒரு புத்தகத்தின் முழுப் பகுதியை எழுதவில்லை. ஒரு சில கவிதைகளைக் குறிப்பிட்டுத்தான் எழுதுகிறேன். என்னால் எதை ரசிக்க முடிகிறது என்று வரிசைப்படுத்த விரும்புகிறேன்.
அதே சமயத்தில் விட்டுப்போன கவிதைகளை இன்னொரு சந்தர்ப்பத்தில் குறிப்பிடலாமென்று தோன்றுகிறது.
மணல்வீடு பதிப்பகம் சிறப்பாகக் கொண்டு வந்த ஜபூஜ்ய விலாசம்ஹ என்ற நெகிழன் கவிதைத் தொகுதியை எடுத்துக்கொள்வோம். அதில் பல கவிதைகள் சிறப்பாக எழுதப்பட்டுள்ளன. உண்மையான உணர்வுடன் எழுதப் பட்டிருக்கின்றன.
நற்பெயர் என்ற கவிதையை எடுத்துக்கொள்வோம். ஒரு நாயைப் பற்றி கவிதை எழுதியிருக்கிறார். மிட்டு என்ற நாயைப் பற்றி. இங்கே அந்தக் கவிதையைக் குறிப்பிடுகிறேன்.
நற்பெயர்
வாசலில்
புதிதாக ஒரு ஆளைப்பார்த்துவிட்டால் போதும்
மிட்டுவுக்கு ஒரே குஷி
குரைப்பான் குரைப்பான்
வாய் வலிக்கக் குரைப்பான்
பழகிய முகங்கள்
அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன
மேலுமவை
ஒருபோதும் நற்பெயர் வழங்குவதில்லை
சலாம் வைப்பதும்
வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும்
சில இரவுகளில் யாருமற்ற வெளியை
நா தள்ளக் குரைப்பதும் என
எல்லாப் பாடுகளும்
அந்த ஒன்றுக்குத்தான்
இன்னும் சுருங்கச் சொல்வதெனில்
மிட்டுவின் அகராதியில்
நற்பெயர் என்பது
ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு.
மிட்டு என்ற ஒரு நாயைப் பற்றிக் குறிப்பிடுகிறார் கவிகுரலோன். அதாவது ஒரு புதிய ஆள் எதிர்ப்பட்டால் மிட்டு என்ற நாய் ஒரே குரைப்பாகக் குரைத்துவிடும்.
அதாவது மனிதர்களின் பழக்க வழக்கமெல்லாம் அதற்கு வந்துவிடுகிறது. மனிதர்களுடன் பழகி. புதிய ஆளைப் பார்த்தால் வாய் வலிக்கக் குரைப்பான். அதே பழைய முகங்களைப் பார்த்தால் ஒன்றும் குரைப்பதில்லை. பழைய முகங்கள் அவனிருப்பை இன்மைக்குத் தள்ளுகின்றன. சலாம் வைப்பதும் வாலை விதான விசிறியாய் சுழற்றுவதும் அவன் பெயருக்கு ஒரு போதும் நற்பெயர் வழங்குவதில்லை.
சில இரவுகளில் யாருமற்ற வெளியை பார்த்து நா தள்ளக் குலைப்பதும் என எல்லாப்பாடுகளும் நற்பெயர் வாங்கும் அந்த ஒன்றுக்குத்தான். மிட்டு குரைக்கக் குரைக்கத்தான் அவனிருப்பை வெளிப்படுத்த முடியும். அவனிருக்கிறான் என்பதை ஊறுதி செய்து நற்பெயரையும் எடுக்க முடியும். நற்பெயர் என்பது ஞாயிற்றுக்கிழமையின் ஒரு நல்லி எலும்பு என்கிறார் கவிஞர்.
'ஊற்று' என்ற அடுத்த கவிதையைப் பார்ப்போம்.
ஊற்று
எங்கள் ஊரில்
ஒரு புகழ்பெற்றக் கிணறிருக்கிறது
நீர் கீழிறங்கும்போதெல்லாம்
ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார்
நீர் சற்று மேலெழும்
ஒவ்வொரு மாதமும் இப்படித்தான்
போனமாதம்
ரொம்பவும் கீழே போய்விட
ஒரு குடும்பமே கல்லெடுத்துக்கொண்டு நீருக்குள் போனது ஒவ்வொருமுறையும் நீருக்குள் போகிறவர்கள்
அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள்
அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்
ஊற்றாய் மாறுகிறார்கள்
பின் மெல்ல மேலெழும்பி
நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்..
எளிமையாக தன் அனுபவங்களை அடுக்கிக்கொண்டு போகிறார் கவிஞர். பொதுவாக இருக்கிற கிணறு பற்றி இந்தக் கவிதை பேசுகிறது. புகழ்பெற்றக் கிணறு என்கிறார். என்? ஊரில் பொதுவாக கிணறொன்றை புகழ்பெற்ற கிணறு என்றால் என்ன? எல்லோருடைய உபயோகித்துக்கும் அந்த கிணறு இருந்தவண்ணம் இருக்கிறது.
எப்போதும் ஊரில் பாழடைந்த கிணறுகள்தான் தென்படும். அந்தக் கிணறுகளைச் சுற்றிப் பல கதைகள் உண்டு
ஆனால் இது புகழ்பெற்ற கிணறு. எல்லோருக்கும் இனிக்கும் நீரை வழங்கிக்கொண்டிருக்கிற கிணறு.
நீர் கிணற்றில் வற்றிப் போய்க்கொண்டிருக்கும்போது யாராவது ஒருவர் கல்லைக் கட்டிக் குதிப்பார். உடனே நீர் ஊற்று மேலெழும்.
கிணற்றின் பயன் ஊருக்கு அதிகம் இருப்பதால் ஒவ்வொரு மாதமும் இப்படித்தான் நடக்கும்.
போனமாதம் ரொம்பவும் கீழே போய்விட்டது. ஏன்? கோடைக்காலமாகப் போன மாதம் இருக்கலாம். கிணற்றின் பயன்பாடு மிக அதிகமாக இருந்திருக்கும்.
ஒரு குடும்பமே கல்லெடுத்துக் கொண்டு நீருக்குள் போனது. நீருக்குள் போகிறவர்கள் அதன் ஊற்றைக் கண்டுபிடிக்கிறார்கள். அதன் இனிக்கும் நீரைப் பருகுகிறார்கள்.. அதோடு அல்லாமல் ஊற்றாய் மாற்றுகிறார்கள். பின் கிணற்றிலிருந்து மேலே வந்து நீராய் சூரிய ஒளியில் மின்னுகிறார்கள்.
நான் குடியிருந்த அடுக்கத்தில் கூட ஒரு கிணறு இருந்தது. கடுமையான வெயில் காலத்தில்கூட அதன் ஊற்றிலிருந்து தண்ணீர் கொடுத்துக்கொண்டு இருக்கும். மற்ற வீடுகள் உள்ள கிணறுகளில் கிடைக்காது. அதைக் குறித்து ஜஅற்புதக் கிணறேஹ என்று கவிதை எழுதி மகிழ்ந்திருக்கிறேன்.
நெகிழன் கவிதையில் ஊரிலிருக்கும் கிணறு. எல்லோராலும் போற்றப் படுகிறது.
இத்தொகுப்பில் நான் ரசித்த வரிகள் பல கவிதைகளில் வெளிப்படுகின்றன.
‘மழைக்கால ஈசல்கள்’ என்ற கவிதையில் இப்படி எழுதியிருக்கிறார்.
'பானை புற்றாகிவிட்டிருந்த மாயையை
இறகுகள் முளைத்து
ஈசல்களால் வெளியேறிவிட்ட அரிசிகளை'
சமீபத்தில் வெட்டுக்கிளியைப் பற்றி ஒரே பேச்சாக இருந்தது. ‘களவு’ என்ற தலைப்பில் எழுதியிருப்பதைப் பாருங்கள்.
'ஒரேயொரு வெட்டுக்கிளி
ஒரு நெல் மூட்டையைத் தூக்கிக்கொண்டு
தாவித் தாவிப் பறந்து சென்றதைப் பார்த்ததாக
நாங்கள் சொன்னால்
யாரும் நம்புவார்கள்’
இவர் கவிதைகள் சில புரியாதத்தன்மையுடன் எழுதப்பட்டிருக்கின்றன. ‘ பூஜ்ய விலாசம்’ என்ற கவிதையை எடுத்துக்கொள்ளலாம். அதைக் குறையாகச் சொல்லவில்லை. ஒரு கவிதை புரியவில்லையென்றால் வாசகனும் முயற்சி செய்ய வேண்டும். அப்படியும் புரியாவிட்டால் விட்டுவிட வேண்டியதுதான்.
புத்தகத்தின் பின் அட்டையில் இப்படி ஒரு கவிதை எழுதப்பட்டிருக்கிறது.
நம்பிக்கையின் எலும்புகள்
முறியும் அகாலத்தில்
உச்சுக் கொட்டுகிறது பல்லி
கனவுகளின் ஒளிநாடா
பற்றியெரியும் இரவுகளில்
தன் பூட்ஸ் கால்கள்
அழுந்த புதிய
வீடெங்கும் நடைபயில்கிறது
சுவர்க்கடிகாரம்.
இதை உற்றுப் பார்த்தால் கவிதையைப் புரிந்து கொள்ள இயலும். ஒரு சாதாரண நிகழ்ச்சியை அசாதாரண தன்மையுடன் எழுதப்பட்டுள்ளது.
இதில் பல கவிதைகள் ரசிக்கும்படி உள்ளன. பூஜ்ய விலாசம் என்ற கவிதைப் புத்தகத்தை ஒருவர் விலைக்கு வாங்கி வைத்துக்கொள்வது ஒரு நல்ல கவிதைத் தொகுப்பிற்குக் கொடுக்கும் மரியாதையாகும். மணல்வீடு வெளியீடாக இந்தப் புத்தகம் வந்திருக்கிறது.
Comments