Skip to main content

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி



அழகியசிங்கர்





மயிலாடுதுறையில் இருக்கும்போது ஒரு இலக்கிய நண்பர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர்  ஆயிரம் புத்தகங்களை அடுக்கி வைத்திருப்பதாகச் சொன்னார்.  ஆயிரம் புத்தகங்கள் என்றால் அளவு என்ன என்று பார்ப்பதற்காகப் போனேன்.  

அங்குப் போய் பார்த்தவுடன் ஆயிரம் புத்தகங்கள் இருப்பதாகவே தெரியவில்லை.  அந்த அளவிற்கு அடுக்கி வைத்திருந்தார். மூன்று அடுக்குகளாக வைத்திருந்தார்.  

வீட்டிற்கு வந்தவுடன் முதல் வேலையாக அப்படி அடுக்க வேண்டுமென்று தோன்றியது.  என் நூலகத்தில் அதுமாதிரி ஆரம்பித்தேன். 

புத்தகங்களை நிரப்புவதற்கு முன்னை விட அதிக இடம் கிடைத்தது.  முன்பு நான் புத்தகங்களைப் படுக்க வைத்திருந்தேன்.  அதன் மேல் மேல் என்று அடுக்கிக்கொண்டு போவேன்.  ரொம்ப இடத்தை அது எடுத்துக்கொண்டு விடும்.

நண்பர் வீட்டிலிருப்பதுபோல் நீளமாகப் புத்தகங்களை நிற்க வைத்திருந்தேன்.  புத்தக முதுகு பார்ப்பவர்களைக் கவர்ந்து விடும். மேலும் அதிக இடம் கிடைக்கும்.  நான் வசிக்கும் வீட்டிலேயும் கட்டிலில் அப்படி அடுக்கத் தொடங்கினேன். மேலும் முதுகைப் பார்க்கும் போது என்ன புத்தகம் என்று தெரிந்து விடும்.
ஊரிலிருந்து வந்தவுடன் எனக்கு இரண்டு நாட்கள் இப்படிப் பொழுது போயிற்று.  மகிழ்ச்சியாக இருந்தது. இன்னும் ஏகப்பட்ட புத்தகங்கள் நீள வாக்கில் அடுக்க வேண்டும்.
ஒரு இரும்பு ராக் முழுவதும் 33 வருடங்களாகச் சேகரித்து வைத்திருக்கும் விற்காத விருட்சம் இதழ்களை (என்னை விட்டுப் போக விரும்பாத) நீள வாக்கில் அடுக்கி அழகு பார்க்க வேண்டுமென்று தோன்றுகிறது. 

மயிலாடுதுறை நண்பருக்கு நன்றி.



Comments

Popular posts from this blog