Skip to main content

துளி - 105 - எலி (கள்) கடித்த இதழ்...


அழகியசிங்கர்




போன ஆண்டு அமெரிக்கா போய்விட்டுத் திரும்பியபோது ஒன்றைக் கவனித்தேன். லைப்ரரியில் வைத்திருந்த புத்தகங்கள் பத்திரிகைகளைக் கொஞ்சம் எலி (கள்) பதம் பார்த்திருந்தது. அதுவும் சமையல் அறையில் மட்டும் அதிக அட்டகாசம்.
சமையல் எதுவும் பண்ணி வைக்காமல் புத்தகங்களையும் பழைய பத்திரிகைகளையும் வைத்திருக்கிறேன் என்ற ஏமாற்றம் அதற்கு இருக்குமென்று நம்புகிறேன்.
குறிப்பாக ஓரத்தையெல்லாம் எலி கடிக்கிறது. நடுவில் இல்லை. அப்படி ஒரு பத்திரிகையை நன்றாகப் பதம் பார்த்துவிட்டது. அந்தப் பத்திரிகை வேற ஒன்றுமில்லை. உயிர் எழுத்து என்ற பத்திரிகைதான். மார்ச்சு 2018ல் வெளிவந்த பத்திரிகை.
நல்லகாலம் அந்தப் பத்திரிகையை எலி பதப் படுத்தியிருந்தாலும் எடுத்துப் பிரித்துப் படிக்கும்படிதான் இருக்கிறது அந்தப் பத்திரிகை. அதைக் கடித்தப் பகுதியைப் பார்த்தால் எலி தானாகவே ஒரு டிசைன் பண்ணியிருப்பதுபோல் தோன்றுகிறது.
உயிர் எழுத்தின் அந்தப் பத்திரிகையை எடுத்துப் புரட்டிப் பார்த்தேன் அது 11 ஆண்டுகளாகத் தொடர்ந்து வந்த இதழ், விடை பெறுகிறதா உயிர் எழுத்து என்ற தலைப்பில் ஒரு தலையங்கக் கட்டுரையைப் படித்தபோது திகைப்பாகப் போய்விட்டது.
உருக்கமாக அந்தப் பத்திரிகை ஆசிரியர் பத்திரிகை நின்று போகப் போகிறது என்று குறிப்பிட்டு எழுதியிருந்தார். இந்த இதழையா எஙூ கடிக்க வேண்டும்.
ஆனாலும் இதழ் தப்பித்து விட்டது. எதுவும் போகவில்லை. முழுவதும் படிக்க முடிந்தது.
முதலில் கறுப்பினப் போராளி அம்பலவாணர் பற்றிய கட்டுரை. எஸ்வி.ராஜதுரை எழுதியது. 4 கட்டுரைகள், 6 சிறுகதைகள், 2 கவிதைகள் சொண்ட பத்திரிகை இது. நீண்ட வாசகர் கடிதங்களும் இவ்விதழை அலங்கரிக்கிறது. இப் பத்திரிகையை முழுவதும் படித்துவிட்டு எழுதுகிறேன்.



Comments