Skip to main content

மனிதாபிமானம் மறையும் மருத்துவம் ! (மருத்துவம் அன்றும் இன்றும்)டாக்டர் பாஸ்கரன்


எட்டாம் வகுப்பு வரை நான் சிதம்பரத்தில் தாத்தா, பாட்டிவீட்டிலிருந்துதான் படித்தேன் – மாலைகட்டித் தெரு, முனிசிபாலிடி ஹயர் செகண்டரி பள்ளிக்கூடம் – என்பெற்றோர் சென்னையில் இருந்தனர். சிறு வயது முதலேடாக்டர், மருந்து என்றாலே ஒரு பயம்; அதிலும் ஊசிஎன்றால், மரண பயம் !
ஒரு நாள் முனிசிபாலிடியிலிருந்து சின்ன அம்மைக்கு(நீர்க்குளுவான் – CHICKEN POX.) தடுப்பூசி போடுவதற்குப்பள்ளிக்கு வந்தனர். (அப்போதெல்லாம் பொது சுகாதாரம்அரசின் முக்கியமான பணிகளில் ஒன்றாக இருந்தது). ஒருசொட்டு வாக்சினை முழங்கைக்குக் கீழே, நிமிர்த்திய கைமேல் வைத்து, அதன் மேல் மெல்லிய ஊசிகள் கொண்டசிறிய திருகாணியால் சுழற்றி விடுவர் – மருந்தும்தோலுக்குள் சென்றுவிடும் ! எறும்புக்கடியை விட குறைவானவலிதான். இந்த ஊசிக்குப் பயந்து நான் பிரேயர் மைதானம்முழுவதும் அலறியபடி ஓடியதும், ஹெட்மாஸ்டர் திருஉமாபதி அவர்கள் என்னைத் துரத்திப் பிடித்ததும் இன்றும்நினைவிலிருக்கிறது ! (ஊசி போட்டுக் கொண்டேனாஎன்பது நினைவில் இல்லை !) ஊசியை விட என்அலறலுக்கு மிரண்ட குழந்தைகளே அன்று அதிகம் ! இன்றுபள்ளிகளில் அந்த தடுப்பூசிகள் இல்லை – சின்ன அம்மையும்அவ்வப்போது தலைகாட்டிக் கொண்டுதான் இருக்கிறது.
அப்போது என் மாமா வீட்டுக் குடும்ப டாக்டர் திருவெங்கடேசம் பிள்ளை  – தீவிர காந்திய வாதி;அரைக்கைகதர்ச் சட்டை, கதர் வேட்டியுடன்தான் டிஸ்பென்சரியில்இருப்பார்.  அந்த கால கருப்பு பிரேம் கண்ணாடி அணிந்து, கிட்டத்தட்டஅன்றைய முதலமைச்சர் திரு பக்தவத்சலம்சாயலில் இருப்பார் !
பளபளவென்று மின்னும் சிமெண்ட் தரை, சுற்றிலும் மூன்றுஅல்லது நான்கு அடி உயர சுவர் - அதன் நான்கு மூலையிலும்மூங்கில் நட்டு, அதன்மேல் தென்னங்கீற்றுகளால்அருமையாக வேய்ந்த கூரை, பக்கத்துக்கு ஒன்றாக தொங்கும் இரண்டு நாற்பது வாட் பல்புகள்  – இதுதான் கன்ஸல்டிங்ரூம் ! ஒரு மேஜை, நாற்காலி, நோயாளியைப் பரிசோதிக்கஒரு பெஞ்சு, மர அலமாரியில் மருந்துகள், ஊசிகள் ( நான்அந்தப் பக்கமே திரும்ப மாட்டேன், பயம்!), ஸ்டெரிலைஸ்செய்ய ஓர் எலெக்ட்ரிக் ஹீட்டர் இத்யாதிகள். இயற்கையான காற்றுடன், நல்ல வெளிச்சத்துடன் இருக்கும்அந்த இடமும், சூழலும், இன்றைய குளிர் வசதியுடன் கூடிய, ஐந்து நட்சத்திர ஓட்டல் அறை போன்ற கன்ஸல்டிங்அறைகளை விடப் பல மடங்கு ஆரோக்கியமானதும், மனதுக்கு இதமளிப்பதும் ஆகும்.
உருண்டையான அல்லது பட்டையான பாட்டிலில் கலர்மருந்துகள் – அதன் முதுகில், வேளைக்கு ஏற்ப கத்தரித்துஒட்டப்பட்ட சீட்டு; சிறிய காகிதப் பாக்கெட்டுகளில் இரண்டுமூன்று மாத்திரைகள் அல்லது பொடிகள் ! இதற்கென்றுதனியாக மற்றுமொரு கீற்றுக் கொட்டகை – அன்றையபார்மசி ! மாத்திரை, மருந்துகளைக் கலந்து கொடுக்கும்கம்பவுண்டர், பளிச்சென வெள்ளை உடையில், புன்முறுவலுடன் !
மூன்றாவது கீற்றுக் கொட்டகையில், மூன்று படுக்கைகள் – அவசர கேஸ்கள், செலைன் ஏற்றுவதற்கு, புண், காயங்களுக்குக் கட்டு போடுவதற்கு, மற்றும் சிறிய அறுவைசிகிச்சை செய்வதற்கு என !
ஒரு நர்சு, ஒரு கம்பவுண்டர், ஓர் அசிஸ்டண்ட் – அவ்வளவுதான்.  நல்ல ஆரோக்கியமான சூழலில், அழகாகப்பராமரிக்கப்பட்ட டிஸ்பென்ஸரி அது !
‘ஸ்டெதாஸ்கோப்’ அன்றைய மருத்துவரின் மிக முக்கியமானஅணிகலன் – புன்னகைக்கு அடுத்தபடி ! இதயம், நுரையீரல், வயிற்றுப்பகுதி என எல்லா வியாதிகளுக்கும்ஸ்டெதாஸ்கோப் ஒன்றுதான் பரிசோதனைக்கு – இரத்தக்கொதிப்பு அளக்க மெர்குரி மானோமீட்டர், காய்ச்சல் அறியஒரு தெர்மாமீட்டர், நிறையப் பொது அறிவுடன் கூடிய மூளை - இவைதான் அன்றைய மருத்துவரின் மருத்துவக் கருவிகள் ! 
மிகக் குறைவான இரத்தம், சிறுநீர் பரிசோதனைகள், எப்போதாவது ஒரு எக்ஸ்ரே  ! மிக மிகக் குறைவானமருந்துகள் - சல்பாடயசின், பெண்டிட்சல்பா, பெனிசிலின் ஊசி, டெராமைசின், ரிபோப்ளேவின் போன்ற மிகக் குறைந்த விலையிலான சிறந்த மருந்துகள் – இவற்றுடன்தான் அன்றைய மருத்துவம் நடந்தது !,
சிறுவனான என்னைக்கூட, ‘என்ன தம்பீ, தாத்தா கூடவந்திருக்கியா ? மாமா ஊர்லெ இல்லயா ? அம்மாமெட்ராசுலெ நல்லா இருக்காங்களா ?’ போன்ற நலவிசாரிப்புகள் அவரை நம்மில் ஒருவராகச் செய்துவிடும் – வியாதியில் பாதி மறைந்து விடும் !
ஊசிக்குப் பயந்து நான் கதற, இரண்டு பேர் என்னைஅமுக்கிப் பிடிக்க, ‘ நல்லா உரக்க சத்தம்போடு தம்பீ – மெட்ராஸ்லெ அம்மாவுக்குக் கேக்கணுமில்ல ‘ என்றுசிரித்தபடியே வலியின்றி ஊசி குத்துவார் !
மனிதநேயம், அன்பு, அனுதாபம் நிறைந்த கரிசனம், குறைந்தமருந்துகள், நிறைந்த மன அமைதி, செய்யும் மருத்துவம் மீது நம்பிக்கை – இவையே அன்றைய மருத்துவர்களைஅடையாளம் காட்டின – அவர்கள் என்றும் வணக்கத்துக்கும், மரியாதைக்கும் உரியவர்களாக இருந்ததில் வியப்பென்ன?    
இன்றைய நிலை என்ன ?

இன்று மருத்துவத் துறையில் மட்டுமல்லாமல், பொதுமக்களிடையேயும் ஒரு அவசர நிலை நிலவுகிறது. பேசுகிறவர்கள் தவறான தகவல் தருகிறார்கள் ; மற்றவர்கள்பேசாதிருக்கிறார்கள் ! நோயாளி – மருத்துவர் இடையில் நிலவ வேண்டிய பரஸ்பர நம்பிக்கை இன்று குறைந்து வருகிறது.
முன்பிருந்த ‘குடும்ப டாக்டர்’ (FAMILY PHYSICIAN), என்னும் உறவு வழக்கொழிந்து வருகின்றது. இன்று படித்த அனைவரும் ‘ஸ்பெஷலிஸ்ட்’ மோகம் பிடித்து அலைகிறார்கள். முன்பெல்லாம், முதலில் குடும்ப டாக்டர்பார்த்து, பின்னர் தேவைக்கு ஏற்ப சிறப்பு மருத்துவரை சிபாரிசு செய்வர். இன்று ஊடகங்கள், வலைதளம் போன்றவை வெளியிடும் தகவல்களைக் கொண்டு மக்களும் சிறப்பு மருத்துவரையே நாடுகின்றனர் – பல சமயங்களில், தவறாகப் புரிந்துகொண்டு, தவறான மருத்துவரிடமும் செல்கின்றனர் – தேவையற்ற பரிசோதனைகள், மருந்துகள் என நேரமும், பணமும் விரயமாக்கப் படுகின்றன. அரிதாக ஒரு டாக்டர் டெஸ்டுகள் வேண்டாம் என்று சொல்லப் போக, உடனே வேறு ஒரு டாக்டரின் அல்லது நண்பரின் உதவியுடன் தாம் விரும்பும் டெஸ்டுகளை எடுத்து விடுகின்றனர் ! அறியாமை ஒரு புறம், ஏதாவது வியாதி இருந்து விடுமோ என்ற அச்சம் ஒரு புறம் மனிதனை ஆட்டுவிக்கிறது.


அறிவியல் வளர்ச்சி, புதிய பரிசோதனை முறைகள், புதிய மருந்துகள் என மருத்துவத் துறையின் முன்னேற்றம் பல புதிய தளங்களில் இன்று செயல்படுகின்றது. சராசரியாக 30-35 வயதுதான் வாழமுடியும் என்று இருந்தது, இன்று 60-65 வயது வரை வாழலாம் என்று ஆகிப்போனது ! மருத்துவத்துறையின் மகத்தான முன்னேற்றம் இது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், அதிக நாள் வாழ்வதற்கான விலையையும் கொடுக்க வேண்டிய நிலையையும் மறுப்பதற்கில்லை ! மனிதனின் வயது அதிகமாக ஆக, உடன் வயது சார்ந்த வியாதிகளும் அதிகரிக்கத் தானே செய்யும் – நீரிழிவு, இரத்தக்கொதிப்பு, ஸ்ட்ரோக் எனும் பக்கவாதம், அல்சைமர்ஸ். பார்க்கின்ஸன்ஸ், எலும்பு முறிவு, புற்று நோய்போன்ற வியாதிகள் அதிகமாகக் காணப்படுவதும் இயல்புதானே ! இன்றைய மருத்துவத் துறை எதிர்கொள்ளும் மிகப் பெரிய சவாலே ‘வயதானவர்களும் அவர்களது நோய்களும்’ தான் !


ஏன் வியாபாரமாகிப் போனது ?


அறுபதுகளில் நான் மருத்துவம் படிக்கும்போது – அரசு மருத்துவக் கல்லூரியில் தகுதி ஒன்றே கொண்டு தேர்ந்தெடுக்கப் பட்டவர்களுள் நானும் ஒருவன் – என் ஒரு வருடக் கல்லூரி கட்டணம் ரூ271/- !(கடைசீ தேதி வரைஅந்தப் பணம் கூட இல்லாமல் அலைந்தது, வேறு தனிக்கதை !) 
இன்று  பல இலட்சங்கள் – கோடிகள் மருத்துவ மேல் படிப்புக்குச் செலவாகிறது. போட்ட முதலை எடுக்கவேண்டிய நிர்பந்தம் இருக்கிறது ! .பணம் பண்ணுவதும், ஏமாற்றுவதும் மனித உயிர்களைப் பணயம் வைத்துச் செய்யும் வியாபாரம் ஆகும் – மருத்துவம்வியாபாரம் அல்ல ! 


பணம் படைத்த பெற்றோரும் தன் மகனையோ அல்லது மகளையோ மருத்துவராக்கிப் பார்க்க ஆசைப் படுகின்றனர் ! மருத்துவத்தில் நிறைய பணம்சம்பாதிக்கலாம் என்ற எண்ணம் சமூகத்தில் பரவியுள்ளது. இப்போது பணம் கொடுத்தால் மருத்துவ சீட் கிடைக்கிறது – இவைகள் ஒருபோதும் மருத்துவம் பயிலக் காரணமாகி விடக்கூடாது. உண்மையிலேயே ஊக்கமுடைய மருத்துவராக வேலை – இல்லைசேவை - செய்வதாக இருந்தால் மட்டும், இத்துறையைத் தேர்வு செய்யலாம். சமூகத்தில் உள்ள மதிப்புக்குக் காரணம், பணமோ, பகட்டோ, பலமாடிக் கட்டிடமோ அல்ல – உயிர்காக்கும் கடமைக்கும், தன்னலமற்ற சேவைக்கும் மக்கள்காட்டும் நன்றியறிதல் ! மருத்துவத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொருவரும் உணர வேண்டிய சத்தியம் இது ! 


சமூகம் என்ன எதிர்பார்க்கிறது ?


மருத்துவர்கள் சோதிடர்களோ, மந்திரவாதிகளோ அல்லது கடவுளோ அல்ல ! அவர்கள் கற்றறிந்துள்ள மருத்துவத்தின் மூலம் வியாதியைத் தீர்க்கவோ அல்லது வீரியத்தைக் குறைக்கவோ முயல்கின்றனர்.
சமூக சிந்தனைகளில் மாற்றம் தேவை ! இன்றும் ஏதாவது ஊசி போட்டால்தான் வியாதி குணமாகும் என்ற எண்ணம் பாமர மக்களிடம் மட்டுமல்லாமல், படித்தவர்களிடையேயும் காணப்படும் அறியாமையாகும்.
தனக்கு ஒரு குறைபாடு/ நோய் உள்ளதை ஏற்றுக்கொள்ள மறுக்கும் மனமே இங்கு அதிகம் காணப்படுகின்றது. “ இதனை எப்படி எதிர்கொள்ள வேண்டும்? “ என்பதை விட, “ எனக்கு ஏன் வந்தது ? ஏதாவது செய்து இதனைத் துடைத்து விட்டாற்போல், தீர்த்துவிட முடியுமா ? “ என்கிற எண்ணங்களே அதிகம் காணப்படுகின்றன !
நாம் நினைப்பதைச் சொல்லும் டாக்டர் கிடைக்கும்வரை,சட்டை மாற்றுவதைப் போல, –மருத்துவர்களை மாற்றிக்கொண்டே இருப்பவர்கள் நம்மிடையே ஏராளம்!!
மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டுகிறோம் என்ற பெயரில், ஊடகங்கள் வெளியிடும் தகவல்களின் நம்பகத் தன்மை கேள்விக் குறியாகி விடக்கூடாது. மக்கள் மனதில் தவறான கருத்துக்களைப் பரவ விடுதல், வீண் மனக்கலவரத்தையும், பீதியையுமே தோற்றுவிக்கும். இன்றைய மருத்துவத்தின் அணுகுமுறை, மருத்துவர்-நோயாளி இருவருக்கும் இடையே பரஸ்பர நம்பிக்கை , நோய் குறித்த விளக்கங்கள், விளைவுகள் போன்ற பலதளங்களிலும் மாற்றம் அவசியம்.
இது குறித்து மருத்துவக் கல்வியில் ஒரு தனி பிரிவே தொடங்கி, இளைய தலைமுறையினருக்கு வழிகாட்டலாம் ! 

Comments

rajamanickam said…
மிக அருமையான பதிவு