அழகியசிங்கர்
இந்து நாளிதழ் 14 01 2015ல் 'எழுத்தாளன் செத்துவிட்டான்' என்ற தலைப்பில் பெருமாள் முருகன் எழுதி கையெழுத்திட்ட அறிவிப்பைப் படிக்கும்போது சற்று வருத்தமாக இருந்தது. பெருமாள் முருகன் ஏன் இப்படி எழுத வேண்டுமென்று தோன்றியது. பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர். மிகச் சிறிய வயதிலேயே அவர் நாவல்கள் எழுத ஆரம்பித்துவிட்டார். முதன் முதலாக அவர் ஏறு வெயில் என்ற நாவலை எடுத்துக்கொண்டு இலக்கியச் சிந்தனை கூட்டத்தில் விற்பதற்கு வந்தார். அவரே அதைப் புத்தகமாக கொண்டு வந்ததைக் பார்த்தவுடன் ஆச்சரியமாக இருந்தது. அவர் மீது அவருக்கு நம்பிக்கை இருந்தால்தான் அப்படி ஒரு செயலை அவர் செய்ய முடியும்.
இப்படி ஒரு திறமையான எழுத்தாளர், பத்திரிகைகளை நம்பாமல் தானே எழுதத் துவங்கியவர், இன்று மாதொருபாகன் என்ற நாவலுக்கு ஏற்பட்ட எதிர்ப்பால் எழுத்தாளன் பெருமாள் முருகன் செத்துவிட்டான் என்று எழுதிவிட்டார். படிக்கும் பலருக்கு ஏன் இப்படி ஒரு அறிக்கையைக் கொடுத்தார் என்றுதான் தோன்றுகிறது.
அந்த நாவலில் அவர் தேவையில்லாதவற்றை எழுதியதால் இந்தப் பிரச்சினை ஏற்பட்டதாக தோன்றுகிறது. எப்போதும் ஒரு எழுத்தை எழுதியவன், எழுதி முடித்தவுடன் எழுத்தில் இறந்து விடுகிறான். அதன் பின் அதை எழுதியவன் வேறு, எழுத்து வேறு. எழுத்து தொடர்ந்து நீடிக்க வேண்டுமென்றால், அது வாசகர் கையில்தான் இருக்கிறது. எந்த எழுத்தையும் வாசகன் ஒருவன்தான் உயிர் கொடுக்கிறான். எழுத்தாளனுக்கு திறமை இருக்கலாம், ஆனால் வாசகன் மனசு வைக்காவிட்டால், எந்த எழுத்தும் நிற்க முடியாது. இது எல்லா எழுத்துக்கும் பொருந்தும்.
பெருமாள் முருகன் அவர் நாவலை எழுதி முடித்தவுடன் நாவல் மூலம் காணாமல் போகிறார். பின் வாசகன்தான் அந்த நாவலைக் குறித்து தீர்மானம் செய்ய வேண்டும்.
சர்ச்சைக்குரிய மாதொருபாகன் என்ற நாவலை நான் படித்ததில்லை. ஆனால் அவருடைய முதல் நாவலான ஏறுவெயில் படித்திருக்கிறேன். முதலில் எழுத்தில் ஒரு குழப்பம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. யார் முன்னிலையில் இருக்கிறார்கள். எழுத்தாளனா வாசிப்பவனா? என்னைப் பொறுத்தவரையில் வாசிப்பவனின் பங்கு முக்கியமானது. ஒரு எழுத்தாளன் அதை உணர மாட்டான். நவீன விருட்சம் என்ற பத்திரிகையை நான் 26 ஆண்டுகளாக நடத்திக்கொண்டு வருகிறேன். பிரமிள் ஒருமுறை பிரசுரத்திற்கு ஒரு கவிதையைக் கொடுத்தார். நான் அதைப் பிரசுரம் செய்யவிலலை. பிரமிளுக்கு என் மீது கோபம். "ஏன் அதை நீங்கள் பிரசுரம் செய்யவில்லை?" என்று கேட்டார். "அது படிப்பவரை டிஸ்டர்ப் செய்யும், அதனால் போடவில்லை, மேலும் அதைப் படித்து விட்டு ராத்திரி முழுவதும் தூக்கம் வரவில்லை," என்றேன். பிரமிள் பிடித்துக்கொண்டார். ஒரு பத்திரிகையில் அவர் கவிதையைப் படித்துவிட்டு நான் தூக்கமில்லாமல் தவித்ததாக எழுதி விட்டார். எம் வி வெங்கட்ராமின் 'காதுகள்' என்ற நாவலையும், கோபிகிருஷ்ணனின் ஒரு நாவலையும் படிக்க வைத்துக்கொண்டிருந்தேன். பழுத்த அனுபவமுள்ள ஒரு இலக்கிய நண்பரிடம் படிக்கப் போவதாக கூறினேன். üüபடிக்காதீர்கள், அப்புத்தகங்கள் மனதைத் தொந்தரவு செய்யும்,ýý என்றார். ஏன் இப்படி சொல்கிறார் என்று நான் படிக்கத்தான் செய்தேன். ஆனால் அந்த இலக்கிய நண்பர் கூறிய கருத்து உண்மைதான். மனதைத் தொந்தரவு செய்யும் எழுத்து ஏன் என்று தோன்றியது.
பெருமாள் முருகனின் நாவல் ஒரு குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்த மக்களை பெரிதும் துன்பப்படுத்துகிறது. அதனால் அதை ஏற்றுக் கொள்ள முடியாது என்கிறார்கள். அந்த நாவலின் சில பகுதிகளை அவர் மாற்றி வேறு விதமாக எழுதிக் கொடுக்கலாம். யார் மனதையும் புண்படுத்தாமல் ஒரு எழுத்து இருக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். பெருமாள் முருகன் ஒரு திறமையான எழுத்தாளர். இதை சுலபமாக அவரால் செய்ய முடியும். ஆனால் அவர் ஒரேடியாக பயந்துபோய் எழுதுவதையே விட்டுவிடுகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார். ஒவ்வொரு முறையும் எழுதியபிறகு எழுத்தாளன் செத்து விடுகிறான். வாசகன்தான் அவனுக்கு உயிர் கொடுக்கிறான்.
எழுத்தாளனைவிட வாசகன்தான் முக்கியமானவன். வாசகன் ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் யாராலும் ஒன்றும் செய்ய முடியாது. இன்றும் கூட புத்தகக் காட்சியில் கல்கியின் பொன்னியன் செல்வன் நாவலை எல்லாப் பதிப்பாளர்களும் போட்டு விற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஏன் என்று நாம் சிந்திக்க வேண்டும். கல்கி உயிருடன் நம் முன் இருக்கிறார்.
Comments