காலத்துக்கு வணக்கம் கி அ சச்சிதானந்தம் மண்டபம் பாழாகி தூண்கள் தலைமொட்டையாகி பரதேசிகளுக்குப் புகலிடமாய் பரிணமித்தது. மழையாலும் காற்றாலும் சிற்பங்கள் சிதையவில்லை எப்போதோவரும் ஆராய்ச்சியாளனுக்கு பிழைப்புத் தர நிலத்தினுள் மூழ்கிக் கொண்டிருக்கிறது. நிழல்தரும் தூண் ஒன்று அதன் இடையில் ஆண்பெண் இருவர் புணரும் உருவங்கள். சிற்பி இலக்கியத்தின் இலட்சணங்களையும் வாத்சாயனாவின் காமத்தையும் இரண்டறக் கலந்திருக்கிறான். முலைகளில் முதிர்ச்சி அடைய இடப்பையன்கள் கசங்கிய கறையும் அல்குலில் தாரைத் தடவிய முக்கோடும். அன்றொருநாள் அந்தத் தூணின் கீழ் துணி நீங்கிய இருவர் புணர்ந்திருந்தனர் திரும்பிப் பார்த்தேன் தொழுநோய்ப் பிச்சைக்காரர்கள் சிற்பம் உயிரானதைக் கண்டு காலத்திற்கு வணக்கம் செலுத்தினேன்.