அழகியசிங்கர்
25.10.2014 சனிக்கிழமை அன்று நடந்தது. தமிழில் கவனிக்கப்பட வேண்டிய எழுத்தாளர் இரா முருகன் அவர்கள் தலைமையில் இக் கூட்டம் இனிதாக துவங்கியது.
கூட்டத்தின் முதல் நிகழ்ச்சியாக விருட்சம் ஒவ்வொரு மாதமும் தேர்ந்தெடுக்கும் சிறுகதையைப் பற்றிய பின்னணியுடன் ஆரம்பமானது.
உயிர்எழுத்து செப்டம்பர் மாதம் வெளிவந்த புதுச் சட்டை என்கிற ப முகமது ஜமிலுதீனின் கதையைத் தேர்ந்தெடுத்துள்ளோம். அதைப் பற்றிய குறிப்பை அடியேன் வாசித்தேன்.
பின், தேனுகா, ராஜம் கிருஷ்ணன் மறைவை ஒட்டி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி நடத்தினோம்.
ஒரே மழை பயமாக இருந்ததால் கூட்டம் எங்கே நடக்காமல் போய்விடுமோ என்ற அசசம் எங்களை விட இரா முருகனுக்கு அதிகமாக இருந்தது. நல்லகாலம். கூட்டம் இனிதே நடந்து முடிந்தது.
இரா முருகனின் விஸ்வரூபம் என்ற மெகா நாவலை தினமும் சில பக்கங்கள் என்று படித்துக் கொண்டு வருகிறேன். எப்போது முடிக்கப் போகிறேன் என்பதை அம்பலப் புழை ஸ்ரீகிருஷ்ணன்தான் அறிவார்.
எனக்கு இந்த இடத்தில் ஒரு விஷயத்தைச் சொல்ல வேண்டும். காஞ்சிபுரத்தில் வே நாராயணன் என்ற ஒருவர் இருந்தார். அவர் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்துவார். கூட்டம் முடிந்தவுடன் யார் யார் என்னன்ன பேசினார்கள், என்னன்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை கொஞ்சங் கூட பிசகாமல் கூட்டம் முடிந்தவுடன் ஒப்பிப்பார்.
நானோ அதுமாதிரி செய்ய இயலாதவன். மேலும் கூட்டத்தில் பேசாத விபரத்தையும் கூட்டத்தில் பேசியதுபோல் சொல்லக் கூடியவன். அந்தக் காலத்தில் கணையாழி குறுநாவல் போட்டியில் ஜெயமோகன், பாவண்ணன், இரா முருகன், சுப்ரபாரதி மணியன், அழகிய சிங்கராகிய நான் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் குறுநாவல்கள் கணையாழியில் படைத்துக் கொண்டு வருவோம். அதில் ஜெய மோகனும், இரா முருகனும் பிடிக்க முடியாத இடத்திற்குப் போய்விட்டார்கள். அப்படியென்றால் என்ன? அதிகப் பக்கங்கள் கூடிய குண்டு குண்டு நாவல்களை எழுதி தள்ளுகிறார்கள். ஜெயமோகன் பிடிக்க முடியாத வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறார். இரா முருகனின் விஸ்வரூபம் நாவலை எப்போது படித்து முடிப்பேன் என்று தெரியவில்லை. இந்தக் கூட்ட முடிவில் நான் அவரைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டேன். 'இத்தனைப் பக்ககங்கள் உடைய நாவலை எப்போது படித்து முடிப்பது' என்று. அது ஒரு பிரச்சினை இல்லை என்பதுபோல்தான் இரா முருகன் குறிப்பிட்டார்.
இரா முருகன் நாவல் மட்டுமல்லாமல், சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள் என்று பல தளங்களில் இயங்கிக் கொண்டிருப்பவர். முதலில் பேச ஆரம்பித்தபோது எப்படி எழுதவே தெரியாத அவர் எழுத்துத் துறைக்கு வந்தார் என்பதைக் குறிப்பிட்டார். கிட்டத்தட்ட 2 மணிநேரம் இரா முருகன் தம் கட்டி பேசியது ஆச்சரியமாக இருந்தது. ஆனால் கேட்பவர்களுக்கு கொஞ்சங்கூட அவர் பேசியது அலுக்கவில்லை என்பது நிஜம். வழக்கத்தைவிட கூட்டம் அதிகமாகவே வந்தது. எத்தனை எண்ணிக்கை என்பதை உங்களுக்குச் சொல்லப் போவதில்லை.
நடிகர் கமல்ஹாசனுடன் அவருக்கு ஏற்பட்ட நட்பு, எழுத்தாளர் சுஜாதாவை சந்தித்த நிகழ்ச்சி என்றெல்லாம் குறிப்பிட்டார். அவர் சில படங்களுக்கு திரைக்கதை வசனமும் எழுதி உள்ளார். கிரேஸி மோகன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க நாடகம் ஒன்றும் எழுதி உள்ளார். டிவியில் சீரியல் எழுதுவதையும் இப்போது ஆரம்பித்திருப்பதாகக் கூறி உள்ளார். அவர் முதலில் கதை எழுதத் தொடங்குவதற்கு காரணமாக இருந்தவர்களில் அவர் கல்லூரியில் வகுப்பெடுத்து இளம்பாரதி என்ற ஆசிரியர் என்று குறிப்பிட்டுள்ளார்.பின் மீரா. இரா முருகன் வீட்டில் தூங்கிக் கொண்டிருக்கும்போது, இரவு பத்து மணிக்கு மேல் மேலை வீதியிலிருந்து கீழ வீதிக்கு நடை பயிலும் கறுப்பான உருவம் என்றெல்லாம் குறிப்பிட்டுப் போகிறார்.
அவர் பேசியதை SONY RECORDER மூலம் பதிவு செய்துள்ளேன். இதை எப்படி இத்துடன் இணைப்பது என்பது மட்டும் எனக்கு இன்னும் தெரியவில்லை. யாராவது ஒரே ஒரு முறை உதவி செய்தால் நன்றி உடையவனாக இருப்பேன்.
Comments
“ புதுப்புனல்’ இதழில் வந்த கதைகளையும் பரிசீலிக்கலாமே . மூன்று சிறுகதைகள் வந்துள்ளன . அதில் ஒன்று என்னுடையது - சாமியாடி . பரிசை எதிர்பார்த்து வைக்கப்படும் வேண்டுகோள் அல்ல இது . கதையைப் படித்துவிட்டு தங்கள் கருத்தைக் கூறினால் எனது எழுத்தைச் செப்பனிட்டுக் கொள்ள இயலும் என்பதனால்தான் , நன்றி . - சுப்ரா