Skip to main content

எதையாவது சொல்லட்டுமா......87



அழகியசிங்கர்


ஒருமுறை ஒரு மரத்தடியின் நிழலில் நாங்கள் நின்று பேசிக்கொண்டிருந்தபோது, அந்த நண்பர் ஒரு கேள்வி கேட்டார்.  üஉங்கள் வாழ்க்கையின் அர்த்தமென்ன?ý அப்போது அந்தக் கேள்விக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.  திகைப்பாக இருந்தது. இப்போதெல்லாம் அதுமாதிரியான கேள்விக்கு யாரும் சிரித்துக்கொண்டே பதில் சொல்லிவிடுவார்கள்.  சமீபத்தில் என் உறவினர் பையனிடம் அதுமாதிரி ஒரு கேள்வியைக் கேட்டேன்.  அவன் ஐடியில் பணிபுரிகிறான்.  காலையில் வேலைக்குப் போனால் இரவு தூங்குவதற்கு வருகிறான்.  காலையில் அவன் டிபன் சாப்பிடும்போது இந்தக் கேள்வியைக் கேட்டேன்.  அவன் உடனே சொன்னான்: "பூரி சாப்பிடுவது," என்று.

அந்த நண்பர் என்னிடம் குறிப்பிட்டபோது நான் கொஞ்சம் தீவிரமாக இதைக் குறித்து யோசித்துப் பார்த்தேன்.  அதற்கு எந்தப் பதிலும் என்னால் சொல்லமுடியவில்லை.  கேள்வி கேட்ட அவரும் அதற்கு பதில் சொல்லவில்லை.  பின் அவர் கேட்டார்.  'நீங்கள் இந்த மரத்தை பார்த்திருக்கிறீர்களா?'

"இந்த அவசர உலகத்தில் எங்கே மரத்தையெல்லாம் பார்க்கிறது?" என்று பதில் கேள்வி போட்டேன்.

       "நாம் இப்படித்தான் பாஸ்..எதையும் பார்ப்பதில்லை..அவ்வளவு அலட்சியம் நம்மிடம்.."

அவரை முதல்முறை ஜே கிருஷ்ணமூர்த்தி கூட்டத்தில் சந்தித்திருக்கிறேன்.  பிரமிளுடன் டீக் கடை ஒன்றில் டீ குடிக்க வந்துகொண்டிருக்கும்போது, அவர் பிரமிள் சட்டைப் பாக்கேட்டில் அவர் கையில் எடுத்தப் பணத்தைத் திணித்தார்.  அவருடைய செய்கை எனக்கு திகைப்பாக இருந்தது.  பணம் கேட்டாலே கொடுக்க விரும்பாத இந்த உலகத்தில் இப்படியும் ஒருவர் பிரமிளுக்குக் கிடைத்திருக்கிறாரே என்று நினைத்தேன்.

தனியாக இருக்கும்போது இது குறித்து பிரமிளிடம் கேட்டபோது, "பொறாமைப் படாதே ஓய்.." என்று குறிப்பிட்டார். அந்த நண்பர் மேற்கு மாம்பலத்தில்தான் வசிக்கிறார் என்பதைத் தெரிந்துகொண்டேன்.  பின் அவரை நான் அடிக்கடி தெரு முனைகளில், டீக்கடைகளில் சந்திப்பது வழக்கம்.  பெரும்பாலும் ஞாயிற்றுக்கிழமைகளில்.  அவரும் என்னைப் போல தேசிய வங்கி ஒன்றில் பணிபுரிகிறார் என்பதை அவர் மூலம் அறிந்தேன்.  

அவர் எப்போதும் தாடியுடன் காட்சி அளிப்பார்.  அந்தத் தாடியும் அவர் முகத்திற்கு பொருத்தமாக இருக்கும்.  பேசும்போது சன்னமான குரலில்தான் பேசுவார்.  அவர் சத்தம் போட்டு பேசி நான் பார்த்ததில்லை.  பெரும்பாலும் அவருடைய நண்பர்கள் ஆட்டோ ஓட்டுபவர்கள்.
  
அவர்களுக்கு பலவிதங்களில் அவர் உதவி செய்திருக்கிறார்.எப்போதுமே அந்த நண்பரை வீட்டில் போய் பார்க்க மாட்டேன். ஞாயிற்றுக்கிழமைகளில் நான் டூவீலரில் போய்க் கொண்டிருக்கும்போது அவர் கண்ணில் படுகிறாரா என்று பார்ப்பேன். நானே வலியப் போய் அவரைப் பார்ப்பதில்லை.  அதேபோல்தான் அவரும். 

பார்க்க கம்பீரமாக தோற்றமளிக்கும் அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்ற கேள்வியை அவருடைய நெருங்கிய நண்பர் ஒருவரிடம் கேட்பேன்.  

"அவர் ஏன் திருமணம் செய்துகொள்ளவில்லை என்பது தெரியவில்லை.  அவருக்கு ஒரு காதலி இருக்கிறாள்.."என்று அவர் குறிப்பிட்டிருக்கிறார்.

ஆனால் அந்த நண்பரை நான் நேரில் பார்க்கும்போது, இந்தக் கேள்வியை மட்டும் கேட்க மாட்டேன்.  அன்றாடம் உழலும் பிரச்சினைகளிலிருந்து விலகி நாங்கள் வேறு விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருப்போம். மரம் ஏன் பேசாமல் இருக்கிறது என்பதுபோல.  ராயப்பேட்டையில் பிரமிள் குடியிருந்த அறை இருந்த தெருவிற்கு எதிரில்தான் அவருடைய வங்கிக் கிளை.  அடிக்கடி பிரமிள் அறையில் அவர் தென்படுவார்.  அவர் பிரமிளுடன் என்ன பேசுவார் என்பது தெரியாது.  அங்குள்ள சில புத்தகங்களைப் பார்ப்பார்.  பின் பிரமிள் பேசுவதைக் கேட்பார்.  "வரட்டுமா, பாஸ்."என்று கிளம்பி விடுவார்.

"வித்தியாசமான மனிதர்," என்றன் பிரமிளிடம்.

"அவர் பிரச்சினை என்னவென்று தெரியாது.  நான்தான் அவரைக் காப்பாற்றினேன்."

நானும் அந்த நண்பரும் அடிக்கடி சந்தித்துக் கொள்பவரில்லை. பல மாதங்கள் சந்தித்துக்கொள்ளாமலேயே இருப்போம்.  

ரொம்பநாள் ஆயிற்றே அவரைப் பார்த்துப் பேசி அவர் வீட்டு வழியாகத்தானே வந்துகொண்டிருக்கிறோம், அவர் வீட்டிற்குப் போய்ப் பேசலாம் என்று நினைத்து அவர் வீட்டிற்குப் போனேன்.

அவர் அவருடைய இளைய சகோதரன் குடும்பத்துடன் வசித்து வந்தார். 

உள்ளே போனபோது வரவேற்பு மோசமாக இருந்தது.  எல்லோர் முகத்திலும் நண்பரைப் பற்றி சொல்லும்போது ஒரு வித அலட்சியம். 

எங்கே என்று கேட்டபோது, 'மாடியில் ஒரு அறை இருக்கிறது அங்கே போய்ப் பாருங்கள்," என்றார்கள்.

மாடி அறைக்குச் சென்று அவரைப் பார்த்தேன்.  அவர் வழக்கம்போல் பீடி பிடித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தார்.
  
"உங்களைப் பார்த்து ரொம்ப நாட்கள் ஆயிற்று,"என்றேன்.

"இங்கதான் இருக்கேன், பாஸ்..."
       "இன்னிக்கு என்ன வீட்டில எதாவது விசேஷமா?"

"ஆமாம். அப்பாவுக்கு திவசம்.."

"என்ன திவசமா?  நீங்கதானே முதல் பையன்.  சடங்கில் கலந்துகொள்ளவில்லையா?"

"பாஸ்..எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கைக் கிடையாது.."

"நம்பிக்கை வேண்டாம்..வருஷத்திற்கு ஒருமுறைதான் வருகிறது.  வீட்டில் உள்ளவர்களுடன் சேர்ந்து நீங்கள் அதை நடத்தினால் என்ன வந்தது."

என் கேள்விக்கு பதில் சொல்லக்கூட விரும்பவில்லை.
ஏன் நண்பரைப் பற்றி பேச்சு எடுக்கும்போது வீட்டிலுள்ளவர்கள் அவ்வளவு அலட்சியமாக பதில் சொன்னார்கள் என்று புரிந்தது.  அவர் வேண்டாத விருந்தாளியாக நினைக்கிறார்கள்.

அதன்பின் இரண்டு மூன்று ஆண்டுகள் அந்த நண்பரை நான் பார்க்கவும் இல்லை.  அவரும் என் கண்ணில் படவில்லை.

பின் ஒருமுறை அவரை ஒரு டீக் கடையில் சந்தித்தேன்.
என் வண்டியை நிறுத்திவிட்டு, அவரைப் பார்த்து, "எப்படி இருக்கிறீர்கள்?" என்றேன்.

"வேலையை விட்டுட்டேன் பாஸ்...." என்றார்.

கேட்பதற்கு அதிர்ச்சியாக இருந்தது.  அவரைப் பார்க்கும்போது, அவர் அணிந்திருந்த உடை அழுக்காக இருந்தது.  பார்க்க முன்பு இருந்த கம்பீரம் இல்லாமலிருந்தார்.
  
"ஏன் விட்டீர்கள்?"

"ஒரே கடன் தொல்லை...தாம்பரம் பக்கத்துல ஒரு வீடு கட்டியிருந்தேன்.  அதன் கடன் அதிகமாகப் போய்விட்டது...வேலையைவிட்டாத்தான் கடனை சரி பண்ணலாம் போலிருந்தது..."

"எப்ப விட்டீர்கள்?  இந்த கோல்டன் ஹண்ட் ஷேக் வந்ததே..அப்ப விட்டீர்களா?"

"அதுக்கு முன்னாடி.."
"ஏன் அதுமாதிரி செய்தீர்கள்? உங்களுக்கு பெரிசா கிடைத்திருக்காதே?"

அவர் செய்த முட்டாள்தனத்தை எண்ணி நொந்துகொண்டே சென்றுவிட்டேன்.  திரும்பவும் அவரை நான் பார்க்கவில்லை.  தெருவில் தட்டுப்படவில்லை.

ஒருமுறை பக்கத்தில் உள்ள அடுக்ககத்திலிருந்து ஒரு காவலாளி வந்து, "சார்...உங்களைப் பார்க்க ஒருவர் வந்திருக்கிறார்?" என்றான்.

நான் யார் என்று பார்ப்பதற்கு வெளியே வந்தேன்.  அவர்தான் நின்று கொண்டிருந்தார்.
  
"நான் இந்தப் பக்கமா வந்திருக்கிறேன்..இங்கதான் உங்கள் வீடு என்பது தெரியாது..".  பார்ப்பதற்கு மோசமாக இருந்தார்.  நான் பதில் பேசாமல் அவரைப் பார்த்தேன். "பாஸ்..கொஞ்சம் அவசரம்..பணம் வேண்டும்.  கொஞ்சம் இலவசமா கொடுங்க..கொஞ்ச கடனா கொடுங்க.."
"பணமா?"

"பாஸ்..யோசனைப் பண்ணாதீங்க.. வீட்டிலிருந்தால் எடுத்து வாங்க.. இல்லாட்டி பாங்கிலிருந்து எடுத்துத் தாருங்கள்.."

"வீட்டில் இல்லை," என்று கூறியபடி அவரை உஸ்மான் தெருவில் உள்ள என் வங்கிக் கிளைக்கு அழைத்துக்கொண்டு போனேன்.  வங்கியிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டு வரும்போது ஒரு டீக் கடையில் நின்று, 150 ரூபாய் பணம் கொடுத்தேன்.

"என்ன 150 ரூபாய் கொடுக்கிறீர்கள்....பாங்கிலதான் சம்பாதிக்கிறீர்கள்...300 ரூபாய்க்கு மேல் கொடுங்கள்.."என்றார்.  நான் திகைப்புடன் 300 ரூபாய் கொடுத்தேன்.

"நன்றி பாஸ்.." என்றார்.

அடுத்தவாரமே ஒருநாள் பீச் ரோடில் பணிபுரியும் என் அலுவலகத்திற்கு வந்துவிட்டார்.  பார்க்க இன்னும் கோரமாக இருந்தார். அலுவலகத்திற்குள் நுழைய வெட்கப்பட்டு கேட் கிட்டே நின்று கொண்டிருந்தார்.  நான் அவரைப் பார்த்து அவசரம் அவசரமாக ஓடி வந்தேன். 

"பாஸ்..பணம் வேண்டும்..."

நான் அவர் கேட்ட பணத்தைக் கொடுத்தேன்.  பின் மெதுவாக,"நான் இதுமாதிரி கொடுக்க முடியாது...தப்பாக நினைக்காதீர்கள்? இதுதான் கடைசி முறை," என்றேன்.  அதைக் கேட்டு அவர் கோபப் பட்டார்."கொடுத்தால் என்ன வந்தது...குறைஞ்சா போயிடுவே...நான் பிச்சைக்காரன்னு நினைத்தாயா..இந்தப் பணத்தையே கொஞ்ச நண்பர்களிடம்தான் கேட்டு வாங்குவேன்..யார்க்கிட்டேயும் போய் நிற்க மாட்டேன்...கொடுக்கறதுக்கு பெரிய மனசு வேண்டும்...இல்ல பாவம் வந்து சேரும்..."என்று கூறியபடி அவர் அந்த இடத்தைவிட்டு போய்விட்டார்.

என் திகைப்பு அடங்க வெகுநேரம் ஆகிவிட்டது.

     (ஆகஸ்ட் 2013 அம்ருதா இதழில் வெளிவந்த கட்டுரை)

Comments

சிரித்துக் கொண்டே அழுவதற்கு ஸ்மைலி இருக்கிறதா என்ன ...