Skip to main content

நான், பிரமிள், விசிறிசாமியார்......12



காலையில் ஸ்ரீனிவாஸன் போன் செய்தபோதுதான் இந்தத் தொடரை ஏன் நிறுத்தி விட்டோ ம் என்று தோன்றியது. ஒருவரைப் பற்றி சொல்லும்போது அவர்களுடைய சாதகமான விஷயங்களைப் பற்றி மட்டும் கூற வேண்டும். எந்த மனிதரை எடுத்துக்கொண்டாலும் பலவீனமான அம்சத்தை மட்டும் எடுத்துக்கொள்ளக் கூடாது. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை என்பார்கள். நான் பிரமிளுடன் பேசிக்கொண்டிருக்கும்போது அவரைப் பற்றி பல கதைகள் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன். நானும் அவரைப் பற்றி மற்றவர்கள் சொல்வதில் எல்லாவித நியாயமும் இருக்கிறது என்றுதான் யோசிப்பேன். எனக்கு அவரைப் பார்க்கும்போது சில எண்ணங்கள் தோன்றும். ஆனால் அதையெல்லாம் வெளிப்படுத்த மாட்டேன். உதாரணமாக அவரைப் பார்க்கும்போது அவர் குளிக்கவே மாட்டாரா என்று தோன்றும். இதையெல்லாம் அவரிடம் கேட்டதில்லை.


அவருடன் பழகிய ஒரு எழுத்தாளருடன் அவர் மயிலாப்பூரில் உள்ள சங்கீத சபா அருகில் சண்டைப் போட்டதாக சொல்வார்கள். நான் ஒருமுறைகூட இதைப் பற்றி அவரிடம் பேசியதே இல்லை. நானும், ஸ்ரீனிவாஸனும் என் அலுவலகத்தில் பேசிக்கொண்டிருக்கும்போது, பிரமிள் ஒருநாள் வந்துவிட்டார்.அப்போதெல்லாம் ஒரு எழுத்தாளர் இன்னொரு எழுத்தாளரைப் பார்க்கும்போது எதாவது குழுவுடன் இணைப்பார்கள். ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் பிரமிளுக்கு ஞானக்கூத்தன் கவிதை ஞாபகம் வந்து விட்டது. ''ஆமாம். பிறர் மேல மூச்சு விடத்தான் விடுவேன்....என்ன பண்ணுவே நீ..'' என்று கத்த ஆரம்பித்துவிட்டார். ஸ்ரீனிவாஸனுக்கு தர்ம சங்கடமாகப் போய்விட்டது. நானும், ஸ்ரீனிவாஸனும் எந்தக் கட்சியையும் சேர்ந்தவர்கள் இல்லை. ஆனால் ஸ்ரீனிவாஸனைப் பார்த்தவுடன் ஞானக்கூத்தனுடன் தொடர்புப் படுத்தி ஏன் பேசினார்?


இன்னொரு சம்பவம். ஆத்மாநாம் இரங்கல் கூட்டம் நடந்தபோது, பிரமிளும் திடீரென்று பேச ஆரம்பித்தார். எனக்கு ஆச்சரியம். ஞானக்கூத்தன் கூட்டத்திற்கு பிரமிள் எப்படி வந்தார் என்று. பிரமிள் ஆத்மாநாம் பற்றி பேச ஆரம்பித்தார். அப்படிப் பேசும்போது அவர் தொண்டை கரகரத்தது. கிட்டத்தட்ட அழக்கூட அழுதுவிட்டார். அந்த சமயத்தில் ஆத்மாநாமின் தற்கொலை பலரைப் பாதித்தது. பிரமிளையும். வெளியேற்றம் என்ற கவிதையை பிரமிள் படித்தார். அந்தக் கவிதை இதோ


சிகரெட்டிலிருந்து

வெளியே

தப்பிச் செல்லும்

புகையைப் போல்

என் உடன்பிறப்புகள்

நான்

சிகரெட்டிலேயே

புகை தங்க வேண்டுமெனக்

கூறவில்லை

வெளிச் செல்கையில்

என்னை நோக்கி

ஒரு புன்னகை

ஒரு கை அசைப்பு

ஒரு மகிழ்ச்சி

இவைகளையே

எதிர்பார்க்கிறேன்

அவ்வளவுதானே


பிரமிள் இந்தக் கவிதையைப் படிக்கும்போது விம்மலுடன் படிக்க ஆரம்பித்தார். அந்தச் சமயத்தில் பிரமிள் பேசியதைக் கேட்டு நான் உணர்ச்சி வசப்பட்டேன். கூட்டம் முடிந்து வீட்டிற்குப் போகும்போது, விமலாதித்த மாமல்லன் என்னைப் பார்த்து, 'பிரமிளை ஜாக்கிரதையாக அழைத்துக்கொண்டு போங்கள்,' என்று குறிப்பிட்டார். நான் பிரமிளை அழைத்துக்கொண்டு ஒரு ஓட்டலுக்குச் சென்றேன். பிரமிள் டிபன் சாப்பிட்டுக்கொண்டே, 'எல்லாம் ஆத்மாநாமைச் சுற்றி இருந்தவர்கள்தான், அவர் தற்கொலைக்குக் காரணம்,'என்றார். ஆத்மாநாம் சுற்றி இருந்த எழுத்தாள நண்பர்கள்தான் அவர் தற்கொலைக்குக் காரணம் என்ற ரீதியில் அவர் பேச ஆரம்பித்தார். நான் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. எனக்கு ஆத்மாநாமைவிட அவரைச் சுற்றி இருந்த நண்பர்கள் வட்டத்தை நன்றாகத் தெரியும்.

(இன்னும் வளரும்)

Comments