Skip to main content

இமையம் எழுதிய வாழ்க வாழ்க….

 அழகியசிங்கர்  

ஆண்டாளின் பெண் வளர்மதி.  அவளுடைய குழந்தைக்கு உடம்பு சரியில்லை. ஆண்டாள் பெண்ணை சாடுகிறாள்.

"காசு இல்லாட்டி எப்படி ஆஸ்பத்திரிக்குப் போவது"  என்கிறாள் வளர்மதி.

"தனியார் ஆஸ்பத்திரிக்குப் போனாத்தான் மருந்து மாத்திரையென்று ஐந்நூறு ஆயிரத்தைப் பிடுங்குவான்." 

வெங்கடேசப் பெருமாள் ஆண்டாளிடம் பேசி கட்சி கூட்டத்துக்கு வர்ற சொல்கிறான்.  ஐந்நூறு ரூபாய் பணமும், புடவையும் கிடைக்குமென்று சொல்கிறான்.  இப்படிப் பலரை அந்தக் கிராமத்தில் உள்ளவர்களை ஆள் சேர்க்கிறான்.  

இப்படிக் கூட்டத்திற்கு ஆள் சேர்ப்பதே அவன் கட்சியின் முக்கிய வேலை.  இதன் மூலம் ஏழையாக இருந்த அவன், பணம் சம்பாதித்து, படிப்படியாக சுமா கார் வாங்கற அளவுக்குப் பெரிய பணக்காரனாக உயர்ந்து விட்டான்.

கட்சிக்கூட்டம் விருத்தாசலத்தில் நடக்கிறது.  அந்தக் கிராமத்திலிருந்து விருத்தாசலம் போவதற்குக் கால் மணி நேரம் ஆகும். 

இப்படிப் பேச்சுத் தமிழில் சிறப்பாக எழுதிக்கொண்டு போகிறார் இமையம்.

எப்போதுமே வெங்கடேசப் பெருமாள் இருக்கிற சின்னக் கண்டியாங்குப்பத்தில், குறைந்த வாக்குகளே த.உ.மு கழகத்துக்குக் கிடைக்கும். அதாவது தமிழக உழைப்பாளர் முன்னேற்றக் கழகம்.  கட்சியில் தலைவியை எப்போதும் புகழ்ந்து கூறுவார்கள்.

இரண்டாவது எதிர்க் கட்சி உலகத் தமிழர் முன்னேற்றக் கழகம். 

வெங்கடேசப் பெருமாளுக்கு ஊரில் பாவப்பட்டவர்கள் யார்? பணத்துக்காக ஆசைப் படுபவர்கள் யார் என்றெல்லாம் தெரியும்.

அவர்களை அழைத்துப் போகும் வேனில் 15 பேர்கள் மட்டும் ஏறலாம்.  ஆனால் 34 பேர்கள் ஏறுகிறார்கள்.  வேனில் நிற்பதற்குக் கூட இடமில்லாமல் இருக்கிறது.

விருத்தாசலம் நகரத்திலிருந்து பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிற மணலூருக்குமிடையே இரண்டு கிலோ மீட்டர் தூரம்தான்.  அந்தக் கூட்டத்தைக் கடப்பதற்கு ஒரு மணி நேரத்திற்கும் மேலாகி விட்டது. கூட்டத்தைப் பார்த்தும், மேடை அலங்காரத்தைப் பார்த்தும் அந்தக் கிராமத்திலிருந்து வந்தவர்கள் மலைத்துப் போகிறார்கள்.

த.உ.மு கழகத்தின் தலைவி ஹெலிகாப்டரிலிருந்து இறங்குவதற்கும், அங்கிருந்து மேடைக்குக் காரில் போவதற்கும், திரும்பவும் கூட்டம் முடிந்து ஹெலிகாப்டர் போவதற்கும் இடம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கூட்டம் நடத்துபவர்கள் கூட்டத்திற்குச் செலவு ஐம்பது கோடிக்கும் மேலாகும் என்று பேசிக்கொள்கிறார்கள்.  கூட்டத்தில் வந்தவர்களுக்குள் நாற்காலி போட்டு உட்காருவதற்குள் சண்டை ஏற்படுகிறது.  இதனால் ஜாதிப் பிரச்சினை வருகிறது.  இதைச் சுவாரசியமாக இமையம் எழுதிச் செல்கிறார்.

கதை பெரும்பாலும் கூட்டத்தில் கூடியிருக்கிற பெண்களைப் பற்றிப் பேசுகிறது.  எல்லோரும் பலவித அவதிகளுக்கு ஆளாகிறார்கள். கூட்டம் வழக்கம்போல் குறிப்பிட்ட நேரத்தில் நடைபெறவில்லை. கூட்டத்திற்கு வந்திருந்த பெண்கள், இயற்கை உபாதைகளுடனும், பசியுடனும் இருக்கிறார்கள். 

நேரம் ஆக ஆகக் கூட்டத்தில் நெரிசல் அதிகமாகிறது. வெங்கடேசபெருமாள் எங்கோ போய் சாப்பாடு பொட்டலம் கொண்டு வந்து கொடுக்கிறான். கூட்டத்தில் சிலர்  பர்சைத் தொலைத்து விடுகிறார்கள்.  சிலர் சங்கிலியை இழந்து விடுகிறார்கள். ஆனால் பேச வரவேண்டிய அரசியல் தலைவி இன்னும் வரவில்லை.

கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு வரப்பட்ட பெண்கள் பல இன்னல்களுக்கு ஆளாகிறார்கள். 

நாவலின் கடைசியில் இமையம் இப்படி எழுதியிருக்கிறார் 

:

'பெண்கள் பகுதியில் ஏற்பட்டிருந்த கூச்சல், குழப்பம், சாவு, கைகால் முறிவுபற்றி எதுவும் தெரியாமல் த.உ.மு கழகத்தின் தலைவி,  என் உயிரினும் உயிரான, உடலினும் உடலான, கண்ணிலிம் கண்ணான, என் உயிர் மூக்சினும் மேலான வாக்காளப் பெருங்குடி மக்களே, நடைபெற இருக்கின் சட்டமன்றத் தேர்தலில் த.ந.மு. கழக வேட்பாளர்களுக்காக உங்களிடம் வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.  என்று கையில் வைத்திருந்த காகிதத் தைப் பார்த்துப் பார்த்துச் சத்தமாகத் தன் போக்கில் படித்துக் கொண்டிருந்தார்.


- இமையம் ஒரு அரசியல் கட்சியின் செயல்பாட்டை வைத்துக் கொண்டு இப்படியெல்லாம் எழுதியிருந்தாலும் எல்லாக் கட்சிகளுக்கும் இது பொருந்தும்.


- கூட்டத்தில் கலந்துகொண்டு விபத்தில் சாகிறார்கள்  என்பது மிகைப்படுத்தப்பட்ட ஒன்றாகப் படுகிறது.


- கட்சியில் இருப்பவர்கள்தான் அதிகமாகக் கட்சியை வைத்துக்கொண்டு சம்பாதிப்பதாகக் கூறினாலும், வேங்கடேச பெருமாள் கட்சிக் கூட்டம் நடக்கும்போது கூட்டம் சேர்ப்பவன், அவன் அதன் மூலம்  கார் வாங்கி அமோகமாக இருக்கிறான் என்று கூறுவது நம்பும்படியாகத் தோன்றவில்லை.

 

 Comments