Skip to main content

கவிதையும் ரசனையும் - 3

அழகியசிங்கர்








கல்யாண்ஜி என்ற பெயரில் ஏராளமான கவிதைகளும், வண்ணதாசன் என்ற பெயரில் கதைகளும் எழுதிக் குவித்துக்கொண்டிருப்பவர் கல்யாணி.சி.

இவர் சிறுகதைகளுக்கு எப்படி ஒரு சாகித்திய அக்காதெமி பரிசு கிடைத்ததோ அதேபோல் இவர் கவிதைகளுக்கும் சாகித்திய அக்காதெமி பரிசு கிடைக்க வேண்டும்.

அந்த அளவிற்குத் திறமையாக கவிதைகளிலிருந்து விலகி கதைகளும், கதைகளிலிருந்து விலகி கவிதைகளையும் எழுதியிருக்கிறார் கல்யாணி.

இதைப் போன்ற திறமை ஒரு சிலருக்குத்தான் வரும்.  குறிப்பாகத் தமிழில் நகுலன், காசியபன், சுந்தர ராமசாமி.  அதேபோல் கல்யாணி சி என்கிற வண்ணதாசனுக்கு.  கல்யாண்ஜி என்கிற பெயரில் கவிதைகள் எழுதும்போது அவர் வேறு ஒரு உலகத்திற்குப் போய் விடுகிறார்.  அதேபோல் வண்ணதாசன் என்ற பெயரில் கதை எழுதும்போது “இவர்தானா அவர் என்ற எண்ணத்தைத் தோற்றுவிக்கிறார்.

நான் இப்போது இங்கு எடுத்துக் கொண்டு பேசப்போவது மழை குறித்து என்ற கவிதையைப் பற்றி.  இதோ அந்தக் கவிதையை இங்குத் தருகிறேன். கல்யாண்ஜி கவிதைகள் என்று வ.உ.சி நூலக வெளியீடிலிருந்து இந்தக் கவிதையை எடுத்துள்ளேன்.


மழை குறித்து



மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார்
சொல்லியிருக்கிறதா
ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக
ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய்விட்டதாக
ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டதாக
நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை
நனையக் கூடாது என்று தடுத்துவிட்டதாக
வெளியே வந்து எதையும் பாராமல்
முட்டாள் பெட்டிமுன் நீங்கள் சாய்ந்து கிடப்பதாக
இல்லை அல்லவா
அப்புறம் நீங்கள் ஏன் மழை குறித்து
இவ்வளவு புகார்களை எல்லோரிடமும்
வீட்டுக்குள் தேநீர் அருந்திக்கொண்டே
சொல்லிக் கொண்டு இருக்கிறீர்கள்



இந்தக் கவிதையைப் படிக்கும்போது வாசிப்பவனை நோக்கி இந்தக் கவிதை பேசுவதுபோல் தோன்றுகிறது.  

வாசிப்பவன் மழையைப் பற்றி ஏதோ புகார் கூறியதுபோலவும் அதனால் அதற்கு விளக்கம் அளிக்கும் விதமாக இக் கவிதை எழுதப் பட்டுள்ளது.
 
மழை உங்களிடம் இதுவரை ஏதேனும் புகார் சொல்லியிருக்கிறதா என்று ஆரம்பம் ஆகிறது கவிதை.  மழையே உங்களைப் பற்றி புகார் அளிக்காதபோது நீங்கள் ஏன் புகார் அளிக்கிறீர்கள் என்பதுபோல் அமைந்துள்ளது.

மழை வந்ததால் ஒரு பச்சைப் புழுவைக் காணோம் வெகு நாட்களாக.  ஒரு கூழாங்கல்லை ஒரு சிறுமி பொறுக்கிப் போய் விட்டாள்.  ஒரு வானவில் மீன்கொத்திச் சிறகாக உதிர்ந்து விட்டது இதெல்லாம் யாரு யாரிடம் குறை பட்டுக்கொள்கிறார்கள்.  

மழையின் சார்பாகக் கவி குரலோன் இதையெல்லாம் சொல்கிறான். அப்புறம் இன்னொன்றும் சொல்கிறான்

நீங்கள் உங்கள் வீட்டுச் சிறுவனை நனையக் கூடாது என்று தடுத்து விட்டீர்கள் ஏன்? 

உங்களுக்கு மழையைப் பார்த்தால் பயம்.  மழையில் நனைந்தால் சிறுவனின் உடல்நிலை பாதிக்கும் நீங்கள் முன்னதாகவே கற்பனை செய்து அவனை வெளியே வராமல் தடுத்து விட்டீர்கள்.  மேலும் நீங்களும் வெளியில் வந்து பார்க்கவில்லை. 

அதேபோல நீங்களும் முட்டாள் பெட்டி முன் சாய்ந்த கிடக்கிறீர்கள்.

உங்களுக்கு எந்தவித அக்கறையுமில்லை.  மழை பெய்கிறதா இல்லையா என்பதுகூட உங்களுக்குத் தெரியாது.

இப்படி ஜாக்கிரதையாக இருக்கும் நீங்கள் ஏன் மழை குறித்து  இவ்வளவு புகார்களை வீட்டிற்குள்ளே தேநீர் குடித்தபடி சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.  மனிதர்களுடைய இயல்பு எதைப் பற்றியாவது குறை சொல்லிக்கொண்டிருப்பதை என்பதை இக் கவிதை மூலம் கவிகுரலோன் வெளிப்படுத்துகிறானோ?

இவ்வளவு விஷயங்களை வெளிப்படுத்துபவன் யார்? கவிகுரலோன்தானா?  அவனைத் தவிர வேற யாருமில்லை.  அவன்தான் தன் செய்கையை நினைத்து நொந்து, நீங்கள்தான் இதற்குப் பொறுப்பு என்று உங்களைக் குற்றம் சாட்டுவதுபோல் தன்னை வெளிப்படுத்துகிறானா?

தன்னுடைய இயலாமையைக் கவிதை மூலம் கொண்டு வருகிறானா?  மழையைப் பற்றி புகார்களைத் தேவையில்லாமல் சொல்லிக்கொண்டு வருகிறானா? எப்படிப் பார்த்தாலும் இக் கவிதை எழுதப்பட்ட விதம் சிறப்பாக உள்ளது.

(தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகையான திண்ணையில் 18.10.2020 அன்று வெளியான கட்டுரை)


Comments