அழகியசிங்கர்
	உலகப் பூனைகள் தினம் இன்று.  நான் விருட்சம் கவிதை வாசிப்பு கூட்டம் நடத்த ஆரம்பித்து 3 மாதங்கள் ஓடிவிட்டன.  அடுத்த வாரம் (14.08.2020) உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த முன் வந்துள்ளேன். 
	பூனைகள் குறித்து ஏராளமானவர்கள் கவிதைகள் எழுதி உள்ளார்கள்.  பூனை ஒரு ஆன்மிக மிருகம்.  எளிதில் யாரிடமும் பழகாது.   ஒரு பூனையைத் தூக்கி மேலே போட்டால் அது கொஞ்சமும் அடிப்படாமல்  தன்னைக் காப்பாற்றிக் கொள்ளும் திறமை வாய்ந்தது.  அசோகமித்திரன் தாமோதர ரெட்டி வீட்டில் வசித்தபோது  அவருடன் பூனைகள் இருப்பதைப் பார்த்திருக்கிறேன்.
	சமீபத்தில் நான்  கவிதை வாசிக்கும் கூட்டம் நடத்தும் போது ஒவ்வொரு முறையும் பூனைகள் குறித்து கவியரங்கம் நடத்த வேண்டுமென்ற எண்ணம் ஏற்படும்.
	இதோ அடுத்த வாரம் உலகப் பூனைகள் கவியரங்கம் நடத்த உள்ளேன்.
	பூனைகள் குறித்து கவிதைகள் எழுதி உள்ள கவிஞர்களை எல்லாம் ஒன்று திரட்ட விரும்புகிறேன்.
	வாசிக்க வரும் ஒவ்வொரு கவிஞரும் பூனை பற்றி எழுதிய கவிதை மட்டும் வாசிக்க வேண்டும். ஒன்று அல்லது இரண்டு கூட இருக்கலாம்.  
	வாசிக்க வருபவர்கள் அவர்கள் கேள்விப்பட்ட வாசித்த கவிதைகளைக் கூட வாசிக்கலாம்   
	எல்லாரும் வாசித்த கவிதைகளைத் தொகுத்து  புத்தகமாகக் கொண்டு வருவேன்.   நான் ஏற்கனவே பூனைகள் குறித்து ஒரு புத்தகமாகக் கொண்டு வர முனைந்துள்ளேன்.
	நீங்கள் பூனையைக் குறித்து வாசிக்க விரும்புவதாக இருந்தால் உங்கள் தொலைப்  பேசி எண்ணைக் குறிப்பிடவும்.
	அடுத்த வாரம் வெள்ளிக் கிழமை (14.08.2020) பூனையைக் கொண்டாடுவோம். 
	நன்றி. மியாவ் . 
பூனைக் கவிதையை ஞாபகப்படுத்தும் விதமாய் இதோ ஒரு பூனைக் கவிதை 
               இரண்டு பூனைகள்
		ஒரு கருப்புப் பூனை
		நாற்காலி மீது அமர்ந்து கொண்டு
		என்னைப் பார்த்தது
		மியாவ் என்றது..
		இன்னொரு பூனை கருப்பும் வெள்ளையும்
		கலந்த நிறத்தில் 
		நாற்காலி கீழே அமர்ந்திருந்தது.
		என்னைப் பார்த்து மியாவ் மியாவ் என்று
		இரண்டு முறை கத்தியது
		நான் பேசாமல் வந்து விட்டேன்.

Comments