Skip to main content

இருபத்தைந்தாம் நாளின் வாசிப்பனுபவம் (24.09.2019)


அழகியசிங்கர்



தொடர்ச்சியாக சின்ன அண்ணாமலை புத்தகமான சொன்னால் நம்ப மாட்டீர்கள் புத்தகத்தை ஒரு வழியாகப் படித்து முடித்துவிட்டேன். இது ஒரு சுயசரிதம். தனக்கு ஏற்பட்ட அனுபவங்களை வரிசையாக அடுக்கிக் கொண்டு போகிறார் பல பெரிய மனிதர்களுடன் அவருக்கு சவகாசம். கல்கி மீது அளவற்ற நம்பிக்கை. நட்பு. முதலில் குறிப்பிட்டமாதிரி ஒரு காரையே கல்கி அவர்கள் சின்ன அண்ணாமலைக்கு வழங்கி விடுகிறார்.

காங்கிரஸ், காந்தி, கல்கி, ராஜாஜி என்று சுற்றிச் சுற்றி வருகிறார். இதைத் தவிர மற்ற விரோத கட்சிகளுடன் கூட நட்புடன் பழகுபவர். ம பொ சியின் அபிமான நண்பர்.

1946ஆம் ஆண்டு இவர் ஒரு பத்திரிகை ஆரம்பிக்கிறார். வெள்ளி மணி என்று பத்திரிகையின் பெயர். குமுதம் பத்திரிகையும் அப்போதுதான் துவங்கப்பட்டது. வாரம் ஒரு முறை வெள்ளி மணி பத்திரிகை வெளிவருகிறது. அப்போது குமுதம் கூட வாரம் ஒரு முறை வரவில்லை.

ஆனால் ஆனந்தவிகடன், கல்கி முதலிய பத்திரிகைகளைப் பார்த்துக்கொண்டு தீபாவளி மலர் தயாரிக்கிறார். அதில் சறுக்கி விழுகிறார். தீபாவளி மலர் விற்பனை ஆகவில்லை. ஏகப்பட்ட பணம் நஷ்டம் ஏற்பட்டு விடுகிறது. அதன் காரணமாகப் பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த முடியவில்லை.

பம்பாயில் வகுப்புக் கலவரம் நடைபெறுகிறது. சினிமா பார்த்துவிட்டு சின்ன அண்ணாமலை அவர் தங்கியிருக்கும் மாதுங்காவிற்குப் போக நினைத்து ஆட்டோவைக் கூப்பிடுகிறார். எந்த ஆட்டோகாரனும் வரப் பயப்படுகிறான். கடைசியில் ஒரு கார்காரனிடம் கெஞ்சிக் கூத்தாடி வரும்படி கேட்டுக்கொள்கிறார். அவனிடம், 'நானும் ஒரு இந்து. நீயும் ஒரு இந்து. உதவி செய்ய வேண்டாமா?' என்கிறார்.

"ஆமாம். இந்துவிற்கு இந்து உதவி செய்ய வேண்டும் ?" என்று அவரைக் கொண்டு போய் மாதுங்காவில் விடுகிறான். கொண்டு போய் விட்டவுடன், சொல்கிறான், "சார், நான் இந்துவல்ல, ஒரு முஸ்லிம்," என்கிறான். மேலும், 'உண்மையில் முஸ்லிம் யாருக்கும் தீங்கு செய்யக் கூடாதென்பது குரான் வாக்கு,' என்கிறான்.

சின்ன அண்ணாமலை கல்லாய் சமைந்து நிற்கிறார். இப்படி ஏகப்பட்ட அனுபவங்கள்.

திராவிடக் கழகத்தினரின் அட்டகாசம் எல்லை மீறி போய்விடுகிறது. சின்ன அண்ணாமலையும், ம பொ சி அவர்களும் தான் மேடைக்கு மேடை திராவிடக் கழகத்தைக் கண்டிக்கிறார்கள். அதனால் அவர்கள் உயிர்களுக்கே ஆபத்தாகப் போய்விடும் போல் இருக்கிறது.

இந்தப் புத்தகத்தில் காமராஜ் ராஜாஜி உரசலை மிக துல்லியமாக சின்ன அண்ணாமலை வெளிப்படுத்துகிறார்.

ராஜாஜி - காமராஜ் சண்டையில்தான், காங்கிரஸ் நாளாவட்டத்தில் பலவீனமடைந்தது. தேசிய சக்திகள் குன்ற, தேச விரோத சக்திகள் பலமடைந்தன என்று குறிப்பிடுகிறார்.

இரண்டு முக்கியமான திரைப்படங்களை எடுக்க சின்ன அண்ணாமலை காரணமாக இருந்திருக்கிறார். 1. கப்பலோட்டிய தமிழன் 2. வீர பாண்டிய கட்டபொம்மன்.

'இந்த இரண்டு திரைப்படங்களும் தமிழில் வெளிவர அஸ்திவாரம் நான்தான் என்பது பலருக்குத் தெரியாது. அஸ்திவாரம் எப்போதும் கண்ணுக்குத் தெரியாது என்பது அனைவருக்கும் தெரியும்,' என்று சின்னஅண்ணாமலை குறிப்பிடுகிறார்.

அதே போல் எம்ஜியாரின் திருடாதே என்ற படம் வருவதற்கு இவர்தான் காரணம். சரோஜாதேவி என்ற நடிகையை அறிமுகப்படுத்திய பெருமை இவருக்குச் சேரும்.

பெரியார் தந்த பத்து ரூபாய் என்ற தலைப்பில் எழுதப்பட்டுள்ள கட்டுரையை ஒருவர் கட்டாயம் வாசிக்க வேண்டும். பெரியாரை சின்ன அண்ணாமலை தாக்கிப் பேசுவது வழக்கம். ஒருமுறை பெரியாரைப் போய்ப் பார்க்கிறார். பெரியார் இவர் தாக்கிப் பேசுவதை வரவேற்கிறார். மேலும் இவர் பேசுவதைக் கேட்க வேண்டும் என்று விரும்புகிறார். ராஜாஜி காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி விடுகிறார். புதியதாக ஸ்வராஜ்யா என்ற கட்சி ஆரம்பிக்கிறார். சின்ன அண்ணாமலையை தன் கட்சியில் சேரும்படி ராஜாஜி வற்புறுத்துகிறார். சின்ன அண்ணாமலை அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. காங்கிரûஸ விட்டு வர முடியாது என்கிறார். அப்படியும் ராஜாஜியுடன் நட்புடன் இருக்கிறார்.

ராஜாஜி ஒருமுறை சின்ன அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். அந்த சமயத்தில் சின்ன அண்ணாமலை டிபன் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறார். பாதி சாப்பிட்டவுடன் எனக்காக எழுந்திருக்க வேண்டாம் என்கிறார் ராஜாஜி.

'தாங்களும் ஏதாவது சாப்பிடுவதாக இருந்தால் நானும் சாப்பிடுவேன்,''என்கிறார் சின்ன அண்ணாமலை.

'செட்டி நாட்டு இட்லி எனக்கும் இரண்டு கொடுங்கள்,' என்கிறார் ராஜாஜி.

வாழை இலையைப் போட்டு இரண்டு இட்லி எடுத்து வைத்து அவர் மனைவி, 'பிராமணர்கள் எங்கள் வீட்டில் சாப்பிட்டால் பெரும் பாவம் என்கிறார்களே?' என்கிறார் அவர் மனைவி.

அதற்கு ராஜாஜி, 'சுத்தமான இடத்தில் சமையலாகும் எதையும் யாரும் சாப்பிடலாம்,' என்கிறார்.

இந்த நிகழ்ச்சி சின்ன அண்ணாமலையும் ராஜாஜி எவ்வளவு நெருக்கமாக இருந்தார் என்பதைக் காட்டுகிறது.

திடீரென்று ஒரு நாள் ராஜாஜி இறந்த செய்தியைக் கேள்விப்பட்டு அவரது சடலத்தைத் தரிசிப்பதற்கு அவசரம் அவசரமாக ராஜாஜி மண்டபத்திற்கு போகிறார் சின்ன அண்ணாமலை.

அப்போது சின்ன அண்ணாமலை மனைவி உடல்நிலை சரியில்லாமல் இருக்கிறார். தானும் போய்ப் பார்க்கவில்லையே என்று அழுதுகொண்டு படுக்கையை விட்டு எழுந்திருக்கிறாராம். ராஜாஜியின் சடலத்தைத் தரிசிக்க வேண்டுமென்று தட்டுத் தடுமாறி எழுந்திருக்கிறார். அப்படியே கீழே விழுந்து விடுகிறார். ராஜாஜி போய் விட்டாரே என்று சொல்லியபடி அவர் உயிரும் போய் விடுகிறது.

இந்தப் புத்தகம் முழுவதும் பல சம்பவங்கள் தொகுக்கப்பட்டுள்ளன. இந்தப் புத்தகத்தை முடித்தபின் எனக்குத் தோன்றிது சின்ன அண்ணாமலை எப்படி கூட்டத்தில் பேசுவார் என்பதைக் கேட்க வேண்டுமென்று தோன்றியது. அதையெல்லாம் யார் பதிவு செய்திருக்கப் போகிறரர்கள்.

இந்தப் புத்தகத்தில் சொல்வதைப் போல இந்தப் புத்தகத்தைப் படித்துவிட்டேன் என்று சொன்னால் நம்ப மாட்டீர்கள்.


Comments