Skip to main content

முப்பத்திரண்டாம் நாளின் வாசிப்பனுபவம் (03.10.2019)அழகியசிங்கர்

கடந்த 2 நாட்களாக அலைச்சல். போகுமிடமெல்லாம் புத்தகங்களைத் தூக்கிக்கொண்டு போனேன்.  ஆனால் படிக்க முடியவில்லை.  எப்படியோ முயற்சி செய்து ஒரு நாடகப் புத்தகத்தைப் படித்து விட்டேன்.  அந்தப் புத்தகம் பெயர் : 'மகாத்மா காந்தியின் ஐந்து வினாடிகள்.'

அது ஒரு நாடகம்.  மூல ஆசிரியர் வால்டெர் ஏரிஷ் ஷேபெர் என்கிற ஜெர்மன் ஆசிரியர்.  அதைத் தமிழில மொழி பெயர்த்தவர் ஜி.கிருஷ்ணமூர்த்தி.

1995ஆம் ஆண்டு வெளியானது.  ஏ கே கோபாலன் வெளியிட்டுள்ளார்.  இந்த நாடகம் 1949-ல் எழுதப்பட்ட ஒரு ரேடியோ நாடகம் என்ற குறிப்பு இந்தப் புத்தகத்தில் உள்ளது.  இதில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கும் பாத்திரங்கள்.  அறிவிப்பாளர், பண்டிட் நேரு, மருத்துவர். 

காந்தி : ஆண்குரல் . மத்திய குரல் ஒலியில்
பூமி  : பெண் குரல், ஆழமான குரல் ஒலியில்
நதி : ஆண் குரல் ஆழமான குரல் ஒலியில்
காற்று : ஆண் குரல். உயர்ந்த குரல் ஒலியில்
தோட்டா (ரவை) : பெண் குரல், மத்திம குரல் ஒலியில்
குரல் : பெண் குரல், உயர்ந்த குரல் ஒலியில்

இந்த நாடகத்தை ஆரம்பிக்கும் முன் மகாத்மா காந்திஜியின் பொன் மொழிகள் என்று கொடுக்கப்பட்டிருக்கிறது.  அதில் குறிப்பிட்ட சிலவற்றைப் பார்ப்போம். 

செய்தித்தாள் இன்று பைபிளையும், குரானையும், கீதையையும் ஓரத்தில் ஒதுக்கி விட்டது. 

உண்ணாவிரதம் என்பது எனக்கும் இறைவனுக்குமிடையே உள்ள விஷயம்.  எப்போதெல்லாம் தீர்க்க முடியாத பிரச்சனைகள் வருகிறதோ அப்போதெல்லாம் விரதமிருந்து இறைவனைத் தொழவே என் மதம் கற்பிக்கிறது.

நல்லவைகளுடன் உங்களது இணக்கம் எவ்வளவு அவசியமோ அதைவிட அவசியம் தீயவற்றிலிருந்து விலகல்.  

இந்து மதத்தின் மூலமாகத்தான் கிறிஸ்துவர்களையும், முஸ்லீம்களையும் மதிக்கக் கற்றுக்கொண்டேன்.

இதெல்லாம் காந்திஜியின் பொன்மொழிகள் இந்தப் புத்தகத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.

மகாத்மாகாந்தியின் ஐந்து விநாடிகள் என்ற இந்த நாடகம் ஜெர்மன் ரேடியோ நாடக வரலாற்றில் மிக முக்கியமான ஒன்று. காந்திஜி கொல்லப்பட்ட அடுத்த ஆண்டே இது அங்கு எழுதப்பட்டிருக்கிறது.  காந்திஜியை ஒரு உலகப் பொதுபார்வையில் பார்கிறது இந்த நாடகம். 

இந்த நாடகத்தைக் கூத்துப்பட்டறை மூலம் ந முத்துசாமி அவருடைய மேற்பார்வையில் கூத்து கலைஞர்களை வைத்து மேடை ஏற்றிருக்கிறார். ஆனால் இது நிச்சயமாக ரேடியோ நாடகம். மேடை நாடகம் அல்ல.  ஏன் எனில் மேடை நாடகத்தின் தன்மை இதில் மிகமிகக் குறைவு.

ஆனால் முத்துசாமி அவருடைய முன்னுரையில் நாடகத்தைப் பற்றிய அவருடைய பார்வையைக் கொண்டு வந்துள்ளார்.

இங்கே இப்படிக் கூறுகிறார்.  üகருத்து வடிவமைப்பு இநத நாடகத்தில் இருக்கிறது.  ஆனால் நீங்கள் தயாரிப்பது ஒரு வாசிப்பை ஒத்த தயாரிப்பாக இருக்கக் கூடாது.  ஒரு சங்கீதத்தை ஒட்டிய தயாரிப்பாக இருக்க வேண்டும்,ý என்கிறார்.  டாக்டர் கே எஸ் சுப்பிரமணியத்திடம் கூத்துப் பட்டறை நடிகர்கள் சென்று இந் நாடகத்திற்கான சங்கீதத்தை பயிற்சிப் பெற்றார்கள்.  சங்கீதத்தை நாம் பலமுறை கேட்டுக் கேட்டு இன்புறுகிறோம்.  அதே போல் சங்கீதத்திற்கான நாடகமாக மாறினால் பலமுறை இந்த நாடகத்தைப் பார்த்து மகிழலாம் என்கிறார் முத்துசாமி.

நாடக நிகழ்வு என்பது மிகச் சிறந்த ஒரு கச்சேரியை ஒத்ததாக இருக்க வேண்டும் என்கிறார்.  ஆனால் இந்த நாடகம் மேடை ஏற்றத்திற்கு ஒத்ததாக இருப்பதாக எனக்குப் படவில்லை.  ஏன் முத்துசாமி ஒரு ரேடியோ நாடகமாக இதைப் பார்க்காமல் மேடை நாடகமாகப் பார்த்தார் என்பது எனக்குத் தெரியவில்லை.

இன்னொரு இடத்தில் இப்படிக் கூறுகிறார் : üநாங்களோ காந்திஜியின் மரணத்தை ஒரு ஓலமாகக் கருதி இருந்தோம்.  நமக்குச் சுதந்திரம் வாங்கிக்கொடுத்த காந்தியை நாம் இப்போது தினமும் பல முறை கொலைசெய்து வருகிறோம்.  அந்த ஓலத்தையே நாங்கள் கருதினோம்.  வெறும் அழுகை அல்ல.  ஒப்பாரி அல்ல.  அடி வயிற்றிலிருந்து பீறிக்கொண்டு வரும் அவலம்.

இந்த நாடகத்தைப் பொறுத்தவரை எல்லாம் குரல்கள்தான் பேசுகின்றன. பூமி, நதி, காற்று, தோட்டா பேசுவதுபோல் வருகின்றன. இதை எப்படியும் உருவகமாக காட்சிப்படுத்த முடியுமா என்று தெரியவில்லை.  ஆனால் இதை ரேடியோ நாடகமாக வாசித்தால் அதன் மூலம் எல்லாவற்றையும் உணர்த்த முடியும்.

பெண் குரல் ஒன்று : என்னை மன்னித்து விடு மகாத்மா

காந்தி : யார் நீ?

பெண் குரல் : உன் மார்பில் வழியாக உள்ளே நுழைந்து கொண்டிருக்கும் (துப்பாக்கித்) தோட்டா நான்.  என்னை மன்னித்துவிடு.

இப்படி தோட்டாவே தன்னை காந்தியிடம் வெளிப்படுத்துவதுபோல் வருகிறது.  

இந்த நாடகத்தை நம்மால் காதால் கேட்டு ரசிக்க வேண்டுமென்று தோன்றுகிறது.  நாடக நடிகர்களை வைத்து நடிக்க வைக்கக்கூடாது.  இதை மேடை நாடகமாகப் போடாமல் திரும்பவும் ஒருமுறை ரேடியோ நாடகமாக அரங்கேற்றம் செய்தால் என்ன என்று தோன்றுகிறது.

காந்தி பேசுவதைக் கவனியுங்கள் : üஉன் மீது எந்தக் குற்றமும் இல்லை. துப்பாக்கியின் மீதும் குற்றமில்லை.  என் மீது துப்பாக்கிய நீட்டிய அந்த இளைஞனும் குற்றமற்றவன்.  இரைந்து கூவ முடியும் என்றால் எல்லோர் காதிலும் விழும்படி நான் கத்திக் கூவுவேன், அவன் நிரபராதி என்று. 

நான் அவன் நெற்றியைத் தொட்டு ஆசிர்வதித்திருக்கிறேன்.  என்னுடைய உறுதியான பழைய விரல்களில் இன்னும் கொஞ்சமாவது சக்தி இருந்திருக்கிறது என்றால் அவன் நெற்றியில் நான் இட்ட அந்த அடையாளத்தை இறைவன் கண்டுகொள்வான்.
உடனே தோட்டா சொல்கிறது : என்னையும் ஆசிர்வதித்துவிடு

காந்தி : உன்னையும் ஆசிர்வதிக்கிறேன் என் தோட்டாவே என்கிறார்.

தோட்டா சொல்கிறது காந்தியிடம்.  உனக்கு ஐந்து நிமிடங்கள்தான் இருக்கின்றன. அதன் பின் நீ இறந்து விடுவாய் என்கிறது.  இப்படி பலவித குரல்கள் மூலம் இந்த நாடகம் நடக்கிறது. அடுத்து காற்று பேசுகிறது.  நதி பேசுகிறது.  பூமி பேசுகிறது. 

இந்த நாடகத்தைப் படிக்கும்போதே முத்துசாமியால் இதை மேடையில் திறமையாக நடத்தி இருக்க முடியாது என்று தோன்றியது.  அவர் மேடை ஏற்றத்தை நான் பார்க்கவில்லை.  ஆனால் இதை வாசித்தப்பிறகு வேறுவிதமாக அடையாளப்படுத்தப் பட வேண்டிய நாடகம்.  அல்லது இந்த நாடகத்தை அமைதியாகப் படிக்கலாம்.  படிக்க வேண்டிய நாடகமாக மாற்றலாம்.

எனக்கு ஒரு ஆசை.  இந்த நாடகத்தை எல்லோரும் ஒரு இடத்தில் கூடி படித்துப் பார்தது வசனம் பேசினால் என்ன என்று தோன்றியது.  அது மாதிரியான முயற்சியைப் பண்ணிப்பார்த்தால் என்ன? நடு நடுவே இசையைப் 
புகுத்தினால் என்ன? 

கடைசியாக அறிவிப்பாளர் இப்படிக் கூறுகிறார். அந்தச் சிறிய பறவை வெண்மேகத்தினுள் உட்புகுகிறது.  யமுனை நதி மீண்டும் பேரிரைச்சலுடன் ஓடத் தொடங்கியது.  காந்தியின் தலை சற்று தாழ்ந்து சாய்ந்தது. 

கடைசியில் நேரு, üஎன் குழந்தைகளே. எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை.  மகாத்மா காந்தி நம் தந்தை மரணம் எய்திவிட்டார். 

இந்த நாடகத்தைப் படித்து ரசித்தேன். ஆனால் இப்போது இந்தப் பிரதி விற்பனைக்குக் கிடைக்காது என்று நினைக்கிறேன. 
Comments

Popular posts from this blog