Skip to main content

எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்




அழகியசிங்கர்




க.நா.சு ஒரு பொருளைக் கொடுத்துப் பேசச் சொன்னால் எந்த முன் தயாரிப்புமில்லாமல் பேசத் தொடங்கி விடுவார்.  இலக்கியத்தின் கட்டடக் கலை என்பதைப் பற்றி ஒரு முறை உரை ஆற்றினார். எந்தவிதத் தயாரிப்புமின்றி, ஞாபகத்திலிருந்து.  
ஆனால் பெரும்பாலான எழுதத் தெரிந்தவர்களெல்லோரும் பேசத் தெரியாதவர்கள்.  எழுத்தாளர் சுஜாதாவிற்கு மேடைப் பேச்சு சரியாக வராது.  ஆனால் அவர் கட்டுரை மாதிரி தயாரித்துப் படித்து விடுவார்.  
அந்தக் காலத்தில் நகுலன் மேடையில் அமர்ந்து இருக்கும்போது கூனிக் குறுகி அமர்ந்திருப்பார்.  ஏன்டா மேடையில் உட்கார்ந்திருக்கிறோம் என்று அவருக்குத் தோன்றும்.  நகுலன் மணிக்கணக்கில் பேசுவார்.  ஆனால் அவர் எதிரில் உள்ள ஒருவருடன்தான் பேசுவார்.  பக்கத்தில் இருப்பவர்களுக்குக் கூட அவர் என்ன பேசுகிறார் என்பது புரியாது. ஆனால் பல விஷயங்களைக் குறித்து அலுக்காமல் பேசுவார்.
என்னுடைய இலக்கியச் சந்திப்புக் கூட்டங்களில் பல எழுத்தாளர்கள் பேசியிருக்கிறார்கள்.  ஒருமுறை சாகித்திய அக்காதெமி விருதுபெற்ற அசோகமித்திரனுக்கு ஆழ்வார்பேட்டையில் உள்ள ஸ்ரீனிவாசா காந்தி நிலையத்தில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தேன்.  அவரைப் பற்றி ஒரு கட்டுரை எழுதி வாசிக்க வைத்திருந்தேன்.  என்னைத் தவிர அந்தக் கூட்டத்தில் சா கந்தசாமி பேச அமர்ந்திருந்தார்.  ஆனால் கூட்டம் நடந்து ஒரு மணி நேரம் கூட இல்லாமல் சீக்கிரமாக முடிந்து விட்டது.  கூட்டத்தை ஏற்பாடு செய்த எனக்குப் பெரிய ஏமாற்றமாக இருந்தது.  நான் கட்டுரையைச் சுருக்கமாக எழுதி விட்டேன்.
இன்னும் கூட எனக்குக் கூட்டத்தில் யாராவது ஒரு மணி நேரம் பேசுகிறார்கள் என்றால் ஆச்சரியமாக இருக்கும்.  அவர்கள் என்னதான் பேசுகிறார்கள் என்பதைக் கவனித்துக்கொண்டே இருப்பேன். பெரும்பாலும் உப்புசப்பில்லாத விஷயமே பேசுவார்கள்.
சமீபத்தில் ஒரு இலக்கியக் கூட்டத்தில் பேசிய எழுத்தாளர் எந்தப் புத்தகத்தைப் பற்றி பேச வேண்டுமோ அந்தப் புத்தகத்தைப் படிக்காமல் பேசினார்.  கில்லாடித்தனமாகப் பேசினார்.  புத்தகம் படிக்காமலயே அதைப் பற்றி ஒரு மணி நேரம் பேசினார். எவ்வளவு சாமார்த்தியம் வேண்டும். ஆனால் கேட்பவர்கள் புத்திசாலிகள் கவனித்து விடுவார்கள்.
மேடையில் பேசுவதைப் பற்றி என் மூத்த இலக்கிய நண்பர்கள் பலவித அறிவுரை கூறுவார்கள்.  எதிரில் யாரும் உட்கார்ந்திருக்கவில்லை என்று நினைத்துக்கொள்ள வேண்டுமென்று. அப்போதுதான் பேச வரும் என்று ஞானக்கூத்தன் கூறுவார்.  அவர் திறமையாகப் பேசக் கூடியவர். மேடைப் பேச்சுக்கு உதாரணமாக அவரைச் சொல்லலாம்.  
இன்னொரு எழுத்தாளர் அசோகமித்திரன் ஒரு துண்டு காகிதத்தில் குறிப்புகளை எழுதி வைத்திருப்பார்.  அந்தக் குறிப்புகளை வைத்துக்கொண்டு திறமையாகப் பேசிவிடுவார்.
ஞானக்கூத்தனோ பேச்சில் தீவிரத்தன்மை உடையவர்.   அசோகமித்திரனோ அதற்கு எதிர்.  அவர் பேச ஆரம்பிக்கும்போதே கேட்பவர்களுக்குச் சிரிப்பு வந்துவிடும்.
என் நேர்பக்கம் புத்தக வெளியீட்டு விழாவில் அசோகமித்திரன் பேச ஆரம்பித்தார்.  புத்தகத்தில் முதல் கட்டுரை சி சு செல்லப்பாவைப் பற்றி இருந்தது. சி சு செல்லப்பாவை வைத்து ஒரு ஜோக் அடித்தார்.  கேட்டவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
மேடையில் எழுதி வாசிப்பது என்பது சரியாக வராது.  அதை நான் ஏற்றுக்கொள்வதில்லை.  ஆனால் பேச்சு அனுபவமில்லாததால் எழுதித்தான் வாசிக்க வேண்டி உள்ளது.  அப்படிப் படிக்கும்போது மெதுவாக பார்வையாளர்களை அடிக்கடி பார்த்துப் பார்த்துப் படிக்க வேண்டும்.  ஒருமுறை வல்லிக்கண்ணனைப் பேச அழைத்தேன்.  அவர் தமிழ் நாவல்களைப் பற்றி பேசினார்.  அவர் படித்த நாவல்களைப் பற்றி கடகடவென்று ஒப்பித்தார்.  ஒரு பேச்சாளர் கையில் காùஸட் ரெக்கார்டரை வைத்திருந்தார்.  பேசுவதற்கு முன் காùஸட் ரெக்கார்டரை ஆன் செய்தார்.  இதோ நானும் பேசுகிறேன். இந்த ரெக்கார்ட் ப்ளேயரும் பேசுகிறது என்று ஆரம்பித்தார் பேச. 
பேசுபவருக்கு ஞாபகமறதி இருக்கக் கூடாது.  எதாவது ஒரு கவிதையோ குட்டி கதையோ சொல்லிக் கூட்டத்தை நடத்தி விடலாம். ஞாபகமறதி உள்ளவர்கள் பேசும்போது தாளில் எழுதி வைத்துப் பேசுவது சிறப்பானது. பேச்சு என்பது நடிக்க வேண்டும்.  பேசும்போதே நடிக்க வேண்டும்.  சிலரால்தான் அது முடியும்.   வந்து வந்து என்று பேசும்போது பேசுவது பெரிய உபயோகமாக இருக்கும்.   எதாவது பேசும்போது தயக்கம் வந்தால் ஒரு வந்தை போட்டுப் பேசி விடலாம்.
சமீபத்தில் நான் ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகச் சென்றேன். கூட்டத்தை ஏற்பாடு செய்தவர் என்னை கூட்டத்தை ஆரம்பித்து விடுங்கள் என்று சொல்லி விட்டார்.  எனக்கு ஒரே திகைப்பு.  ஒரு வழியாக சமாளித்தேன்.
பல கூட்டங்கள் அர்த்தமில்லாமல் போகின்றன.  சரி கூட்டத்தால் என்ன கிடைக்க வேண்டும்.  ஒன்றும் கிடைக்க வேண்டாம்.  ஆனால் போவோம்.  நண்பர்களை, பிடித்தமானவர்களை சந்திப்பதற்காகப் போவோம்.  
 

Comments