Skip to main content

பிறந்த தினத்தை முன்னிட்டு


அழகியசிங்கர்



முதலில் மனதுக்குப் பிடித்தக் கவிதைகள் என்ற பெயரில் 'வெயில்' அவர்களின் 'புத்தர் அழுதார்' என்ற கவிதையை முகநூலில் வெளியிட்டபோது 100 கவிதைகள் அடங்கியத்  தொகுப்பொன்றை கொண்டு வருவேனென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை.  இதோ முதல் நூறு கவிதைகள் அடங்கியத் தொகுப்பு தயாராகிவிட்டது.  100வது கவிதையாக என் கவிதையைச் சேர்த்துள்ளேன்.
இன்று என் பிறந்தநாள் முன்னிட்டு இக் கவிதையைக் கொண்டு வருகிறேன்.  முதல் தொகுதிக்குப் பிறகு இரண்டாவது தொகுதி, மூன்றாவது தொகுதி என்று கொண்டு வர உள்ளேன்.  முதல் தொகுதியில் இடம்பெறாத கவிஞர்கள் இரண்டாவது தொகுதியிலும் மூன்றாவது தொகுதியிலும் நிச்சயமாக இடம் பெறுவார்கள்.   யாரையும் புறகணிக்கும் நோக்கம் இல்லை.  மேலும் கவிதைத் தொகுதிகளிலிருந்துதான் கவிதைகள் தேர்ந்தெடுத்துள்ளேன்.  
இந்தத் தொகுதிக்கு எந்த முன்னுரையும் எழுத உத்தேசம் இல்லை.  கவிதைகள்தான் முன்னுரை.  
வேண்டுமென்றால் இந்தத் துண்டு அறிக்கையை முன்னுரையாக வெளியிடுகிறேன்.

மனதுக்குப் பிடித்த கவிதைகள் - 100


மின்சார வண்டி


அழகியசிங்கர்


கட்டையாய்க் குட்டைய
நெட்டையாய் மனிதர்கள்
முகம் அகலமாய்க்
குறுகலாய்
காது கோணலாய்
மனிதர்கள்

சளசளவென்று பேசியும்
கண்ணை மூடியும்
மனிதர்கள்

மௌனமாய்ப் பிராக்குப்
பார்த்தபடியும்
சீட்டி அடித்துக்கொண்டும்
ஏறி குதித்துக்கொண்டும்
மனிதர்கள்

பெரும் சத்தத்துடன்
அடிப்பட்டு ரத்தத்துடன்
மனிதர்கள்
கண்ணை நிமிர்த்தி
எதிர்ப்பக்கம் பார்த்தால்
போகும் வழியெல்லாம் வழியவிட்டபடி
மனிதர்கள்

நின்று நின்று ஒவ்வொரு ஸ்டேஷனாய்ப் போகும்
மின்சார வண்டி


நன்றி :  யாருடனும் இல்லை  - கவிதைகள் - அழகியசிங்கர்  - விருட்சம் வெளியீடு, சென்னை 33- மொத்தப் பக்கங்கள் : 96 - வெளியான ஆண்டு : 1995, 2017 - விலை : ரூ.70




Comments