Skip to main content

பாலகுமாரனின் 'இது போதும்'




அழகியசிங்கர்






100வது இதழ் நவீன விருட்சம் தயாரித்து பலருக்கு அனுப்பிக் கொண்டிருந்தேன்.  அந்த இதழ் அதிகப் பக்கங்களுடன் தயாரிக்கப்பட்டதால் செலவு அதிகமாகிவிட்டது.  
ரகு மூலம் அந்த இதழ் பாலகுமாரன் கண்ணிலும் பட்டது.  உடனே அவரிடமிருந்து எனக்கு ஒரு போன்.  அப்போது நான் ஒரு இலக்கியக் கூட்டத்திற்கு அவசரம் அவசரமாகப் போய்க்கொண்டிருந்தேன்.  üநாளைக்கு வீட்டிற்கு வர முடியுமா,ý என்று கூப்பிட்டார்.
அவர் வீட்டிற்குச் சென்றேன்.  அவர் வீட்டின் பெரும்பகுதி ஒரு கோயில் மாதிரி இருந்தது.  யோகி ராம்சுரத்குமாரின் பெரிய புகைப்படங்கள்.  பூஜை அறையில் யோகி ராம்சுரத்குமார்.  
அவருடைய வெண்ணிற தாடி அவர் மீது எனக்கு ஒரு மரியாதையை ஏற்படுத்தியது.   முன்பு பிரமிளுடன் நான் யோகி ராம்சுரத்குமாரை சந்தித்த விபரத்தைத் தெரிவித்தேன்.  அங்கு நடந்த சில சங்கடமான விஷயங்களை அவரிடம் தெரிவித்தேன். உருக்கமாக.  அவர் சாதாரணமாக அதைக் கேட்டு விளக்கிக்கொண்டிருந்தார்.  யோகி ராம்சுரத்குமாருக்கு உங்கள் மீது எந்தக் கவனமும் இல்லை என்றார். 
நன்கொடையாக விருட்சம் இதழுக்கு பணம் அளித்தார்.  அவர் இன்னொன்றும் சொன்னார்.  'யோகி ராம்சுரத்குமார் கட்டளையால் நான்கொடை கொடுக்கிறேன்,' என்றார்.  அவர் சொன்னதை என்னால் நம்ப முடியவில்லை.  
"உங்களுடைய புத்தகம் எதாவது தரமுடியுமா?"  என்று கேட்டேன்.  'இது போதும்,' என்ற புத்தகம் ஒன்றை கொடுத்தார்.  உள்ளே கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார்.
என்னுடைய சந்திப்பு 26.10.2016ல் நடந்தது.  அவருடைய 'இது போதும்' என்ற புத்தகத்தைப் படித்துவிட்டு நான் ஒரு கட்டுரை எழுதி முகநூலில் பதிவு செய்தேன்.  என் கட்டுரையின் தலைப்பு  'அந்தப் புத்தகம் யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை,'  என்று.  என்னைப் பொறுத்தவரை பாலகுமாரனின் இந்தப் புத்தகம் முக்கியமானதாகக் கருதுகிறேன்.

அவருடைய குரு யோகி ராம்சுரத்குமாரிடம் இப் புத்தகத்தில் உள்ள பல விஷயங்களைப் பேசி விவாதித்து எழுதி உள்ளார்.   இது ஒரு பயனுள்ள புத்தகம்.  இப் புத்தகத்தைப் படித்து நான் எழுதிய கட்டுரையிலிருந்து சிலவற்றை இங்கு தருகிறேன். 
'இதை எழுதிய ஆசிரியர் கிண்டல் அடிக்கிற மாதிரி இன்னொரு விஷயம் சொல்கிறார் : üருசி என்ற ஒரு சுகத்தையும் அறுத்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்க வேறு என்னதான் இருக்கிறது என்ற கோபம் ஏற்பட்டிருக்கும்,ý இன்னொன்று சொல்கிறார்.  நான் உணவிற்கு எதிராக பேசவில்லை.  ருசிக்கு எதிராகப் பேசுகிறேன் என்கிறார். 
உணவு விஷயத்தில்தான் இப்படியெல்லாம் சொல்லி நம்மை தர்மசங்கடப் படுத்திவிட்டார் என்று நினைத்தால், இன்னொரு விஷயத்தையும்  சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார்.  அவர் இப்படி எழுதுகிறார் : உங்களை முற்றிலும் புரிந்துகொண்ட, முழுவதுமாய் அன்பு செலுத்துகின்ற, உங்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கின்ற மனிதர் என்று உலகில் எவரும் இல்லை.  எந்த உயிரினமும் இல்லை.  ஒரு வேளை சோற்றுக்குத்தான் நாய் வாலாட்டுகிறது.  கிட்டத்தட்ட அந்த மாதிரி விஷயங்களுக்குத்தான் மற்ற மனிதர்களும் உங்களை நெருங்கியிருக்கிறார்கள்...ஹைட்ரஜன் குண்டை வீசி எறிந்தால் எப்படி இருக்கும் அப்படி வீசி எறிகிறார் இந்தப் புத்தக ஆசிரியர்.  இதை மனதின் பெரும் பசி என்கிறார்.  அதை அடக்கச் சொல்கிறார்.  யாருடைய பாராட்டுப் பத்திரத்திற்கும் காத்துக்கொண்டிருக்காதீர்கள் என்கிறார்
இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் நாடிசுத்தம் பற்றி சொல்கிறார்.  ஒருவர் நாடிசுத்தம் தினமும் செய்துகொண்டு ஆன்ம பலத்தைப் பெருக்கச் சொல்கிறார்.  இன்னும் புரியாத விஷயத்தையும் அவர் சொல்கிறார்.  அதுதான் குண்டலினி சக்தி.'
  
பாலகுமாரன் இன்று இல்லை.  ஆனால் இந்தப் புத்தகத்தின் மூலம் சிலவற்றைப் பேசிவிட்டுச் சென்றதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது.   நான் யாரோ அவர் யாரோ.  ஆனால் என் பத்திரிகையைப் பார்த்துவிட்டு அதற்கு எதாவது நன்கொடை அளிக்க வேண்டுமென்ற எண்ணம் அவருக்கு ஏற்பட்டதை நினைத்து எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது.  உண்மையில் யோகி ராம்சுரத்குமார் அவர் மூலம் கட்டளை இட்டிருக்கலாம். 
இந்தச் சந்திப்புக்குப் பிறகு எனக்கும் அவருக்கும் எந்தச் சந்திப்பும் நிகழவில்லை.  போனில் பேச நினைத்தாலும் பேச அவர் விழையவில்லை.   அதன்பின் நான் அனுப்பிய விருட்சம் இதழ்களை அவர் பார்த்தாரா என்பது கூடத் தெரியாது.   பத்து கேள்விகள் பத்து பதில்கள் என்ற தலைப்பில் அவரை வைத்து படம் எடுக்க வேண்டுமென்று நினைத்தேன்.  அதற்கு அவர் சம்மதமும் தெரிவிக்கவில்லை.
இன்று காலை அவர் பூத உடலைப் பார்க்க வேண்டுமென்று போய்ப் பார்த்துவிட்டு வந்தேன்.  அந்தத் தெரு முழுவதும் கட்டவுட்டும் கூட்டமுமாக இருந்தது.  பாலகுமாரன் கண்ணாடிப் பேழையில் படுத்தபடி இருந்தார்.  

Comments