Skip to main content

தென்றலில் என் பேட்டி வந்துள்ளது



அழகியசிங்கர்

17 ஆண்டுகளாகத் தொடர்ந்து வரும் பத்திரிகை தென்றல்.  அமெரிக்காவிலிருந்து வரும் பத்திரிகை.  டிசம்பர் மாதம் தென்றல் இதழில் என் பேட்டி ஒன்றை வெளியிட்டிருந்தார்கள்.  பேட்டி எடுத்த அரவிந்த் சுவாமிநாதன் அவர்களுக்கு என் நன்றி.

என்னை இதுவரைக்கும் எந்தப் பத்திரிகையும் பேட்டி எடுத்ததில்லை.  இத்தனை ஆண்டுகள் யாரும் என்னை ஏன் பேட்டி எடுக்கவில்லை என்பது எனக்குப் புரியவில்லை. இரண்டு காரணங்கள் இருக்கும்.  என்னை இலக்கியப் பிரமுகராக யாரும் நினைக்காமல் இருந்திருக்கலாம்.  இன்னொரு காரணம் ஒவ்வொருவராக பேட்டி எடுக்கும்போது என்னை மறந்து போயிருக்கலாம்.  என்னைப் பேட்டி எடுத்த தென்றலுக்கு துணிச்சல் வேண்டும். பல பக்கங்களில் என் பேட்டி.  ஒன்றிலிருந்து நூறு இதழ்கள் வரை என் விருட்சம்  என்ற பத்திரிகையில் எனக்கு நேர்த்த அனுபவத்தை பேட்டி எடுக்கப்பட்டிருக்கிறது.  

          பத்திரிகையில் யாருடையாவது பேட்டியைப் படிக்கும்போது, என்னையும் ஒருவர் பேட்டி எடுக்க வருவார்கள் என்று ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருப்பேன்.  யாரும் வரவில்லை என்பதோடல்லாமல், என் திசை நோக்கி யாரும் திரும்பக் கூட இல்லை.அவர்களுக்கு வழி தெரியவில்லையோ என்றெல்லாம் யோசிப்பேன்.  உண்மையில் அவர்களுக்கு வழி தெரியும்.  ஆனால் என் பக்கம் கண்ணில் படாமல் தப்பி ஓடியிருக்க வேண்டும். 

இன்னொரு பிரச்சினையும் இதில் கவனிக்க வேண்டும்.  என்னைப் பேட்டி எடுக்க வருபவர்கள் என்னை விட மேதாவிகளாக இருக்கிறார்கள்.  இவனுக்கு என்ன தெரியும் இவனை ஏன் பேட்டி எடுக்க வேண்டும் என்று அவர்களுக்குத் தோன்றி இருக்கலாம்.  சரி விடுங்கள் நான் சொல்ல வந்தது வேற விஷயம். என் பேட்டி வந்த தென்றல் இதழில்  என் புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார்கள்.  பொதுவாக இரண்டு மூன்று இடங்களில் புகைப்படம் எடுக்கிறார்கள் என்றால் வேண்டாம் என்று சொல்வேன்.  ஒன்று ரேஷன் கார்டு அட்டையில்.  என்னதான் முயற்சி செய்தாலும் அட்டையில் வரும் புகைப்படத்தை யாரும் நம்ப மாட்டார்கள்.  இன்னொரு புகைப்படம் வாக்காளர் அட்டையில் எடுக்கப்படுவது.  அதிலும் என்புகைப்படம் வந்திருந்தால் யாரும் நம்ப மாட்டார்கள்.  மூன்றாவது வாகன ஓட்டுநர் அட்டையில் புகைப்படம் எடுத்தால் மோசமாக இருக்கும்.  அதிலும் நான் இருக்க மாட்டேன். வேண்டா வெறுப்பாகத்தான் புகைப்படம் எடுத்துக்கொள்வேன்.  

தென்றல் பத்திரிகைக்காக புகைப்படம் எடுத்த அரவித்ந் சுவாமிநாதன் என் மூக்குக் கண்ணாடியை முகத்தில் இருந்து எடுத்துவிட்டு புகைப்படம் எடுத்துள்ளார். அப்போதுதான் வெளிச்சம் வரும் என்று.  அந்தப் புகைப்படத்தை அட்டையிலும் பிரசுரமும் செய்து விட்டார்.  தென்றல் இதழைப் பார்த்தவுடன் அதில் வந்தப் புகைப்படம் நான்தான் என்பதை வீட்டில்  நம்ப   மறுக்கிறார்கள். இல்லை. நான்தான் அது. நான்தான் அது என்று சொன்னாலும் நம்ப மறுக்கிறார்கள்.  குறிப்பாக என் மனைவிக்கு அந்தப் புகைப்படத்தைப் பார்த்தவுடன் கொஞ்சங்கூட நம்ப முடியவில்லை.  நானும் அந்தப் புகைப்படத்தையே பார்த்துக் கொண்டிருக்கிறேன்.  நான்தானா அது..
   

Comments