Skip to main content

அந்தப் புத்தகம் யார் எழுதியது என்று சொல்லப் போவதில்லை

அழகியசிங்கர்





சமீபத்தில் நான் ஒரு புத்தகம் படித்தேன்.  கிட்டத்தட்ட 400 பக்கங்களுக்கு மேல் உள்ள புத்தகம்.  அப் புத்தகத்தை எழுதிய ஆசிரியர் பிரபலமான எழுத்தாளர்.  ஆனால் அவர் பெயரைச் சொல்ல விரும்பினாலம் சொல்லப் போவதில்லை.   நிச்சயமாக அந்தப் புத்தகம் பிடிக்கவில்லை என்று சொல்லப் போவதில்லை.  நான் அப் புத்தகத்தை எடுத்துப் படிக்க படிக்க முடித்துவிட வேண்டுமென்ற எண்ணம் தோன்றி கொண்டிருந்தது.  புயல் போதுதான் அந்தப் புத்தகத்தை எடுத்துப் படிக்க ஆரம்பித்தேன்.  எங்கும் இருட்டு.  இன்வெர்டர் மூலம் ஒரு அறையில் ஒரு விளக்குப் போட்டுக்கொண்டு அந்தப் புத்தகத்தை எடுத்துப் படித்துக்கொண்டிருந்தேன்.
அந்தப் புத்தகம் கிட்டத்தட்ட சுயசரிதம் மாறி இருந்தது.  இரண்டு பகுதிகளாக இருந்தது.  பின் பகுதி முழுக்க முழுக்க சுயசரிதம். படிக்க படிக்க தெவிட்டாத இன்பமாக இருந்தது.  இப்படியெல்லாம் சொல்லலாமா?  சொல்லலாம்.  நான்தான் யார் எழுதிய புத்தகம் என்று சொல்லப் போவதில்லை.  புத்தகத்தின் பெயர்கூட சொல்லப் போவதில்லை.  ஆனால் புத்தகத்தைப் பற்றி என் விருப்பப்படி சொல்லப் போகிறேன்.  இதற்கு உங்கள் அனுமதி இருந்தால்போதும். 
அந்தப் புத்தகத்தின் முதல்பகுதி.  ஒரு விஷயத்தைப் பற்றி எழுதியிருந்தது.  சாப்பாட்டில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று.நான் அறிவுரை கூறும் புத்தகங்களை பெரிதும் விரும்புவேன்.  அப் புத்தகம் படிப்பதன் மூலம் நான் என்னை மாற்றிக்கொள்ள முடியுமா என்று பார்ப்பேன்.  இந்தப் புத்தகத்தை முழுவதும் படிப்பதற்கு முன்பே, üசாப்பிட ஆசைப்படாதே,ý என்கிறது.  என்னடா இது என்று தோன்றியது.  நாம சாப்பிடுவதே மிகக் குறைவு. வயிறு என்ன வண்ணான் சாலா என்கிறது.  சாப்பிடுகிற ஆசையைக் குறைக்கச் சொல்கிறது.
நான் எப்போதும் காலையில் வாக் செல்வேன்.  வாக் செல்வது அரை மணி நேரம்தான் இருக்கும்.  ஒரு பூங்காவை 18 தடவைகள் சுற்றிக்கொண்டிருப்பேன்.  அப்போது என் யோசனை எல்லாம் சங்கீதா ஓட்டல் மீது குவிந்திருக்கும்.  வாக் முடித்து விட்டு புதிதாக திறந்திருக்கும் சங்கீதா ஓட்டலுக்குச் சென்று, ரூ35ல் ஒரு இட்லி, கொஞ்சம் பொங்கல், ஒரு மசால்தோசை, ஒரு வடை, ஒரு காப்பியை எப்படி விழுங்குவது என்று காத்திருப்பேன்.  தொட்டுக்கொள்ள விதம் விதமாக சட்னிகள் இருக்கும்.  சாம்பாரை இரு மடங்கு குடிப்பேன்.  சாப்பிட்டு வீட்டுக்கு வரும்போது பூனை போல் கம்ப்யூட்டரில் உட்கார்ந்து எதாவது தட்டுவேன்.  பின் நான் எழுந்து சாப்பிடுவதற்கு பகல் 12போல் ஆகிவிடும்.  ஆனால் இந்தப் புத்தகத்தைப் படித்தால் என்னை சாப்பிடாதே என்று அறிவுரை கூறுகிறது.  உன் வயிறு என்ன வண்ணான் சாலா என்கிறது.  üநீ சாப்பிடு.  ஆனால் பசித்தால் மட்டும் சாப்பிடு.  அதுவும் இரண்டு இட்லி சாப்பிட்டு விட்டு எழுந்துவிடு,ý இப்படி சாப்பாட்டை அடக்கினால் உன் மனம் சுத்தம் அடையும் என்கிறது.  நீ ஆரோக்கியமாக இருப்பாய் என்கிறது.  குடலின் கோபத்தைத் தணிக்க சிறிதளவு மோர் விட்ட சாதம் போதும் என்கிறது இந்தப் புத்தகம்.  
என்னடா இது சாப்பிடுகிற சாப்பாட்டிலேயே இந்தப் புத்தகம் கை வைக்கிறது என்று தோன்றியது.  மேற்கு மாம்பலத்தில் இருக்கும் வெங்கடஸ்வரா போளி ஸ்டாலைப் பற்றி இந்தப் புத்தகம் எழுதியவருக்குத் தெரியுமா? மாலை நேரங்களில் நிற்கக் கூட முடியாது கூட்டம் நெக்கித் தள்ளும்.  காரமே இல்லாத மிளகாய் பஜ்ஜியைப் பற்றி இந்தப் புத்தகம் அறிந்துள்ளதா?  என்னமோ மோர் சாதம் சாப்பிட்டால் போதுமென்று எந்தக் காரணத்திற்காக இந்தப் புத்தகம் சொல்கிறது.  
இதை எழுதிய ஆசிரியர் கிண்டல் அடிக்கிற மாதிரி இன்னொரு விஷயம் சொல்கிறார் : üருசி என்ற ஒரு சுகத்தையும் அறுத்துவிட்டால் வாழ்க்கையில் அனுபவிக்க வேறு என்னதான் இருக்கிறது என்ற கோபம் ஏறப்பட்டிருக்கும்,ý இன்னொன்று சொல்கிறார்.  நான் உணவிற்கு எதிராக பேசவில்லை.  ருசிக்கு எதிராகப் பேசுகிறேன் என்கிறார். 
நான் இன்னொரு விஷயம் சொல்கிறேன்.  மாம்பலத்தில் அயúôத்தியா மண்டபம் எதிரில் உள்ள தெருவில் ஒரு வண்டியில் சுடச்சுட பட்டாணி சுண்டல் கிடைக்கும்.  அத்துடன் இரண்டு மசால் வடைகளையும் சேர்த்து சாப்பிடக் கொடுப்பார்கள்.  அந்தச் சூட்டில் அதைச் சாப்பிடும் சுவை இருக்கிறதே அதை சாதாரணமாக விவரிக்க முடியாது.  
எப்போதும் என் வண்டி அயோத்தியா மண்டபத்தைத் தாண்டுபோதெல்லாம் தானகவே வலதுப் பக்கம் திரும்பி சுண்டல் விற்கும் கடையின் முன் நின்றுவிடும்.  இது மாதிரியான எண்ணம் வரக்கூடாது என்று நான் நினைக்க வேண்டுமென்றால், அந்தப் பக்கமே போகக்கூடாது.  என் பாதையை மாற்றிக்கொள்ள வேண்டும்.  அப்போதுதான் இதை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.
உணவு விஷயத்தில்தான் இப்படியெல்லாம் சொல்லி நம்மை தர்மசங்கடப் படுத்திவிட்டார் என்று நினைத்தால், இன்னொரு விஷயத்தையும்  சொல்லி நம்மை யோசிக்க வைக்கிறார்.  அவர் இப்படி எழுதுகிறார் : உங்களை முற்றிலும் புரிந்துகொண்ட, முழுவதுமாய் அன்பு செலுத்துகின்ற, உங்களை எந்த எதிர்பார்ப்பும் இன்றி நேசிக்கின்ற மனிதர் என்று உலகில் எவரும் இல்லை.  எந்த உயிரினமும் இல்லை.  ஒரு வேளை சோற்றுக்குத்தான் நாய் வாலாட்டுகிறது.  கிட்டத்தட்ட அந்த மாதிரி விஷயங்களுக்குத்தான் மற்ற மனிதர்களும் உங்களை நெருங்கியிருக்கிறார்கள்...ஹைட்ரஜன் குண்டை வீசி எறிந்தால் எப்படி இருக்கும் அப்படி வீசி எறிகிறார் இந்தப் புத்தக ஆசிரியர்.  இதை மனதின் பெரும் பசி என்கிறார்.  அதை அடக்கச் சொல்கிறார்.  யாருடைய பாராட்டுப் பத்திரத்திற்கும் காத்துக்கொண்டிருக்காதீர்கள் என்கிறார்.
யாருடனும் பேசாமல், பேச்சை அறுக்கச் சொல்கிறார். அப்படி இருந்தால் யாராவது நம்மைப் பார்த்தால் என்ன நினைத்துக் கொள்வார்கள்.  சரியான முசுடு என்று நினைத்துக் கொள்ள மாட்டார்களா?  
அதேபோல் தொண தொணவென்று பேசிக்கொண்டிருந்தால், அதுவும் ஆபத்து.  நமக்கு ஏதோ பிரச்சினை என்று நினைத்துக்கொள்வார்கள்.  நாம் பேசாமல் இருப்பதோடல்லாமல் யாரைப் பற்றியும் புறம் கூறாமல் இருப்பது நல்லது என்று தோன்றுகிறது.
இந் நூலாசிரியர் என்ன சொல்கிறார் என்றால் நீங்களே உங்களுக்குள் பேசிக்கொள்ளுங்கள் என்கிறார்.  உங்கள் மனதோடு நீங்கள உறவு வைத்துக்கொள்ளுங்கள் என்கிறார்.  
யாராவது உங்களிடமிருந்து பத்தாயிரம் ரூபாய் பணம் கடனாக வாங்கிக்கொண்டு போகிறாரென்றால், வாங்கிச் செல்பவர் திருப்பித் தராவிட்டால் பணத்தைக் கேட்காதே என்கிறார்.  இதெல்லாம் சாத்தியப்படுமா?  உண்மையில் வாங்கிச் செல்பவர்கள் கேட்டாலும் திருப்பித் தர வேண்டாம் என்று நினைத்தால் திருப்பியே தர மாட்டார்கள். ஆனால் வாங்கிக்கொண்டு திருப்பித் தராத நபர்களை நாம் ஞாபகம் வைத்துக்கொண்டுதான் இருப்போம்.  நாம் சண்டைப் போட விரும்பாத நபராக இருந்தாலும், பணம் கொடுக்காமல் ஏமாற்றி விட்டான் என்று தோன்றாமல் இருக்காது. மேலும் நம்மை அவன் திரும்பவும் எதுவும் கேட்டு ஏமாற்றமல் இருக்க வேண்டும் என்று நினைப்போம்.  வங்கியை நடத்துபவர்கள் இதுமாதிரி பணத்தை கடனாகக் கொடுத்துவிட்டு அதைத் திரும்பி வாங்குவதற்குள் படுகிற பாட்டை சாதாரணமாக விவரிக்க முடியாது.  பணம் வராமல் போய்விட்டால் கடனைக் கொடுத்த மானேஜரை வங்கி பதம் பார்த்துவிடும்.
இந்தப் புத்தகத்தின் கடைசிப் பகுதியில் நாடிசுத்தம் பற்றி சொல்கிறார்.  ஒருவர் நாடிசுத்தம் தினமும் செய்துகொண்டு ஆன்ம பலத்தைப் பெருக்கச் சொல்கிறார்.  இன்னும் புரியாத விஷயத்தையும் அவர் சொல்கிறார்.  அதுதான் குண்டலினி சக்தி.  
இப் புத்தகத்தில் அவர் சுயசரிதமாக அவருடைய அனுபவங்களை வெளிப்படுத்தியிருக்கிறார்.  அவர் சந்தித்த ஒரு குரு மூலம் அவருக்கு ஏற்பட்ட நிகழ்ச்சிகளைத் தொகுத்து அளித்திருக்கிறார்.  இந்தப் புத்தகத்தை நாம் படித்துக்கொண்டே போகலாம்.   அவர் சந்தித்த குருவை நானும் சந்தித்திருக்கிறேன்.  ஆனால் எனக்கு அவர் அனுபவம் எதுவும் கிடைக்கவில்லை. நான் அதை எதிர்பார்த்து அந்தக் குருவை சந்திக்கவும் இல்லை.  குண்டலினி போன்ற விஷயங்கள் எனக்கு எப்போதும் புரியாத விஷயம்.  
சரி, இந்தப் புத்தகம் யார் எழுதியது, புத்தகத்தின் பெயர் என்ன என்றெல்லாம் எதுவும் சொல்லப் போவதில்லை.  நீங்களும் கேட்காதீர்கள்.     

Comments