Skip to main content

சாகித்திய அக்காதெமி பரிசும் மூத்த எழுத்தாளர்களும்..


அழகியசிங்கர்


இந்த ஆண்டு சாகித்திய அக்காதெமியின் பரிசு வண்ணதாசனுக்குக் கிடைத்துள்ளது.  ஏற்கனவே அவருக்கு விஷ்ணுபுர விருதும் இந்த ஆண்டு கிடைத்துள்ளது.  இப்படி இரண்டு விருதுகள் ஒருவருக்குக் கிடைப்பது இதுதான் முதல் முறை என்று நினைக்கிறேன்.  அவருக்கு என் வாழ்த்துகள்.
பொதுவாக எனக்குத் தெரிந்த பல மூத்த எழுத்தாளர்களுக்கு எந்தப் பரிசும் கிடைத்ததில்லை.  சாகித்திய அக்காதெமியின் பரிசு பெறுவது என்பது சாதாரணமாக நடக்கக் கூடியதல்ல.  இந்தப் பரிசு கிடைக்காமலே போன எழுத்தாளர்கள் பலர்.  நான் சில மூத்த படைப்பாளிகளைப் பார்த்திருக்கிறேன்.  அவர்கள் கண்களில் ஒருவித விரக்தி இருக்கும்.  ஒருவித ஏக்க உணர்ச்சி வெளிப்படும். இலக்கியத் தரமான படைப்புகள் எழுதி சாதித்தும் அவர்களுக்கு சாகித்திய அக்காதெமி விருது கிடைப்பதில்லை.  சாகித்திய அக்காதெமியின் குழப்பம், இலக்கியத் தரமான புத்தகத்திற்கு பரிசு கொடுப்பதா? எழுத்தாளர்களுக்கு பரிசு கொடுப்பதா? 
உண்மையில் படைப்புகளுக்குத்தான் இந்தப் பரிசை கொடுக்க வேண்டுமென்று நான் நினைக்கிறேன். புளியமரத்தின் கதை எழுதிய சுந்தர ராமசாமிக்கு எப்போதோ சாகித்திய அக்காதெமி பரிசு கொடுத்திருக்க வேண்டும். நடக்கவில்லை. அன்று வேறு கிழமை என்ற  கவிதை நூலிற்காக ஞானக்கூத்தனுக்கு பரிசு வழங்கியிருக்க வேண்டும்.  நடக்கவில்லை.  நினைவுப்பாதை எழுதிய நகுலனுக்கு, அசடு எழுதிய காசியபனுக்கு என்றெல்லாம் இலக்கியத் தரமான படைப்புகளுக்கு பரிசு போயிருக்க வேண்டும்.  போகவில்லை. இதன் மூலம் என்ன தெரிகிறது.  பரிசுக்கும் பரிசு பெற வேண்டிய நபருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று.  இந்த பரிசு கிடைக்கவில்லை என்று ஏங்காமல் இருக்க வேண்டுமென்றும் தோன்றுகிறது. எழுதுபவர்கள் பரிசுக்காக எந்த எதிர்ப்பார்ப்பும் வைத்திருக்கக் கூடாது என்றும் தோன்றுகிறது.  
நானும் சில ஆண்டுகளுக்கு முன் புத்தகங்களுக்குப் பரிசு கொடுக்கலாமென்று நினைத்தேன்.  கொஞ்சம் யோசித்த போது அந்தத் திட்டத்தை கை விட்டுவிட்டேன்.  ஒவ்வொரு பரிசுக்கும் தேர்ந்தெடுக்கும் பின்னால் பரிசு பெறக்கூடிய இன்னொரு புத்தகம் இருந்துகொண்டு இருக்கும். எதையும் திருப்தி செய்ய முடியாது என்று பட்டது.  இந்த வம்பில் ஏன் மாட்டிக்கொள்ள வேண்டுமென்றும் தோன்றியது.
நானும் தப்பித்தேன்.  புத்தகமும் தப்பியது.  -+

Comments