Skip to main content

என்னுடைய கதை....

அழகியசிங்கர்இந்த மாதம் கலைமகள் இதழில் விருட்சத்தில் வெளியான டீ என்ற என் சிறுகதை திரும்பவும் பிரசுரமானது.  என்னால் நம்ப முடியவில்லை.   கலைமகள் ஆசிரியருக்கு என் நன்றி. நீங்களும் படிக்க அந்தக் கதையை இங்கு அளிக்கிறேன்.


..
டீ.........
அந்தக் கிராமத்தில் அவர்கள் இருவரும் முக்கியமானவர்கள். இருவரும் வயதானவர்கள்.  தினமும் அவர்கள் சந்திக்கும் இடம்.  அந்தக் கிராமத்திலேயே பிரதானமாக இருக்கும் அந்த டீ கடையில்தான்.  என்ன அந்த டீக் கடையில் முக்கியமானது என்றால் ஒன்றுமில்லை.  அது கொஞ்சம் பெரிய டீக் கடையாக இருக்குமாதலால்,  அவர்கள் இருவரும் அமர்ந்துகொண்டு உலக விசாரணை வீட்டு விசாரணையெல்லாம் பேசிக் கொண்டிருப்பார்கள்.  நான் அவர்கள் இருவரையும் அடிக்கடிப் பார்ப்பேன்.  பென்சன் பணம் வாங்க எங்கள் வஙகிக் கிளைக்குத்தான் வருவார்கள்.  சென்னையிலிருந்து கிராமத்திற்கு வந்து மாட்டிக்கொண்ட என்னைப் பார்த்து பச்சாதாபப்படுவார்.  
"இந்த இடத்திலேயே இருக்கீங்களே இந்த இடம் போரடிக்கவில்லையா?" என்று ஒரு நாள் கலியமூர்த்தி என்ற பெரியவரைப் பார்த்துக் கேட்டேன்.

:"போரடிக்கவில்லை.  ஆனா எனக்கு மெட்ராஸில இருந்தாதான் போரடிக்கும்," என்றார் அவர்.

"நீங்க மெட்ராஸ் வந்திருக்கீங்களா?"

"ஒரே தடவைதான் வந்திருக்கிறேன்.  மயிலாப்பூர் என்ற இடம்.  என் தம்பிக்கு கல்யாணம் ஆன சமயத்தில,"

"நான் ஒருமுறை கூட மெட்ராஸ் போனதில்ல.. திருச்சிக்குப் போயிருக்கேன்," என்றார் அப்துல்லா என்ற கலியமூர்த்தியின் நண்பர்.

இருவரும் அந்தக் கிராமத்தில் பக்கத்து பக்கத்து வீட்டிலே இருந்தார்கள். மிக சிறிய வீடு.  ஒரு வரண்டா ஒரு அறை ஒரு சமையல் அறை. கழிவறையும், குளிக்கும் இடமும் தனித்தனியாக பின்னால் இருந்தன.  இரண்டு வீடுகளும் ஒரே மாதிரியாகக் கட்டியிருந்தார்கள்.

"நாங்கள் இருவரும் சகோதரர்கள் மாறி.. எங்கள் வாரிசுகள் எல்லாம் எங்கக் கூட இல்லை." என்றார் அப்துல்லா.

"எனக்கு ஒரே ஒரு பையன்.  அவன் அமெரிக்காவில இருக்கான்.  வருஷத்துல ஒரே ஒருமுறை வந்திருந்து சில நாட்கள் இங்கே தங்கிவிட்டுப் போவான்,"என்றார் கலியமூர்த்தி.

"எனக்கு ஒரே ஒரு பெண்தான்.  அதைக் கட்டிக் கொடுத்துட்டேன்.  அது துபாயில இருக்கு.  'அப்பா, எப்படி இருக்கேன்னு' விஜாரிக்கும்,  அவ்வளவுதான்." என்றார் அப்துல்லா.

அவர்கள் குரல்களில் இதையெல்லாம் சொல்லும்போது எந்த வருத்தமும் இல்லை.  வருமானம் என்று பெரிதாக இல்லாவிட்டாலும, அவர்கள் இருவரையும் பாதுகாத்துக்கொள்வதற்கான பணம் கிடைக்காமல் இல்லை. மேலும் அவர்கள் தேவை ரொம்பவும் குறைவு. 

முதலில் அப்துல்லா மனைவிதான் இறந்து போனாள்.  அதன்பின் அப்துல்லா கலியமூர்த்தி வீட்டில்தான் சாப்பிடுவார்.  அதற்காக அவர் பணம் கொடுத்தாலும் கலியமூர்த்தியும் அவர் மனைவியும் வாங்கிக் கொள்ள மறுத்து விட்டனர்.

"என் சகோதரன் மாதிரி நீங்கள்," என்று கலியமூர்த்தியின் மனைவி அப்துல்லாவை கவனித்துக் கொள்வாள்.  அதுமாதிரி சமயங்களில் அப்துல்லா உண்மையில் நெகிழ்ந்து போயிருக்கிறார். மேலும் அந்தக் கிராமத்தில் உள்ள பெரும்பாலான குடும்பங்களுக்கு இவர்கள் இருவர் குடும்பங்களையும் தெரியும்.  கிராமத்தில் எதாவது பிரச்சினை என்றால் இவர்களுடைய அறிவுரையைக் கேட்காமல் இருக்க மாட்டார்கள்.  

ஒருமுறை கிராமத்தில் காலரா நோய் தொற்றிக்கொண்டபோது எப்படி மற்றவர்களுக்குப் பரவாமல் இருப்பது என்பது பற்றி மருத்துவ ரீதியில் தெரிந்துகொண்டு பலரிடம் அறிவுரை கூறி பிரச்சாரம் செய்தார்கள் இருவரும்.  
ஒரு வருடம் முன்புதான் கலியமூர்த்தியின் மனைவியும் இறந்து விட்டாள்.  கண்கலங்கி அவள் கணவரையும், அப்துல்லாவைப் பார்த்தும் கையசைத்து விட்டுப் போய்விட்டாள். அது ஒரு பெரிய துக்கமாக கலியமூர்த்தியை வாட்டியது உண்மைதான்.  அந்தத் தருணத்தில் அப்துல்லாவின் துணை பெரிதும் தேவைப்பட்டது.  

இப்படி அதிசயமாக இரண்டு பேரகள் இருப்பதை நினைத்து அந்த ஊரே பெருமைப் பட்டது.  அவர்களுக்குள் எந்தச் சண்டையும் நிகழ்ந்ததில்லை. ஹிந்து கோயிலுக்குள் அப்துல்லாவும், மசூதிக்கு கலியமூர்த்தியும் போய் வருவார்கள்.  

அந்தக் கிராமத்தில் உள்ள மக்களுக்கு அவர்கள் இருவர் மீது ஒரு சந்தேகம் எப்போதும் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பதுதான் அந்தச் சந்தேகம்.  அவர்கள் வீட்டில் அவர்கள் எந்தச் சமையலையும் அடுப்பை மூட்டி சமைப்பதில்லை.  ஒவ்வொருவரும் ஒவ்வொரு சமயத்தில் உணவு வழங்கினாலும, அது ஒரு தொடர்கதை கிடையாது.  சில நாட்கள் யாருமே அவர்களுக்கு உணவு வழங்கமாட்டார்கள்.  

அதேபோல் உணவு இல்லை என்று அவர்கள் கவலைப் படுவதுமில்லை.  எப்படி இந்த அதிசயம் நிகழ்கிறது? அவர்களுடைய எளிமையான வாழ்க்கை அவர்களை நீண்ட ஆயுளுடன் வாழ வைக்கிறது.

யார் வேண்டுமானாலும் காலையில் அவர்கள் இருவரையும் டீக் கடையில் பார்க்கலாம்.  டீக்கடையில் வாங்கும் தினசரிகளை வைத்துக்கொண்டு இருவரும் பேசிக் கொண்டிருப்பார்கள். கொஞ்ச நேரம் நடப்பார்கள்.  கிராமத்தில் உள்ள பாதையில்.  பின் டீக்கடையில் டீயைச் சாப்பிட்டபடி கிட்டத்தட்ட காலை 11 மணி வரை பொழுதைக் கழிப்பார்கள்.  பின் வீட்டிற்குச் சென்று குளித்துவிட்டு சிறிது நேரம் தூங்கி எழுந்து திரும்பவும் டீக் கடைக்கு வந்து விடுவார்கள்.

எனக்கு அவர்களுடைய வாழ்க்கை முறையைக் கேட்டவுடன் ரொம்ப ஆச்சரியம்.  எப்படி சமையல் பண்ணாமல் அவர்கள் உயிர் வாழ்கிறார்கள் என்பதுதான் சந்தேகம்.

என் அலுவலக நண்பரை நான் கிண்டல் செய்வேன்.  அலுவலகம் நடந்து கொண்டிருக்கும்போது அவசரம் அவசரமாக அவன் வெளியே ஓடுவான்.  என்ன காரணம் என்றால் சுடச்சுட டீக் கடையில் போடும் போன்டாவைச் சாப்பிடத்தான் அவன் அப்படி ஓடுவான்.  அதனால் அவன் பெயரை போன்டா ஸ்ரீனிவாசன் என்று அலுவலகத்தில் கூப்பிடுவோம்.

அவனைப் பார்த்துதான் ஒரு முறை கூறினேன் : "நீ இப்படி போன்டாவுக்காக தினமும் ஓடுகிறாயே,,,அவர்களைப் பார்த்தாயா? எதுவும் சாப்பிடாமல் இருக்கிறார்கள்."

"யாருக்கு என்ன தெரியும்.  அவர்கள் இருவரும் டீக் கடையில் இருப்பதால் எதாவது சாப்பிடாமல் இருக்க மாட்டார்கள் என்று."

எனக்கும் அந்தச் சந்தேகம் எழுந்ததால், டீக் கடைக்காரரிடம் ஒரு நாள் அவர்களைப் பற்றி விஜாரித்தேன். 

"அவர்கள் இருவரும் இந்தக் கடைக்கு வருவதால்தான் இந்தக் கடையில் லட்சுமி கடாச்சாம் தவழ்கிறது.  டீயைத் தவிர அவர்கள் எதுவும் சாப்பிட மாட்டார்கள்."

"ஒரு நாளைக்கு எத்தனை டீ சாப்பிடுவார்கள்."

"பத்து பதினைந்து சாப்பிடுவார்கள்.  சில சமயம் 20 டீக் கூட சாப்பிடுவார்கள்."

"நிஜமாகவா?"

"உண்மைதான் சார்.  நல்ல மனுஷங்க சார் இரண்டு பேரும்."

அன்றிலிருந்துதான் என் சந்தேகம் வலுத்துக் கொண்டே இருந்தது.  எப்படி இவர்கள் இருவரும் டீ மட்டும் சாப்பிட்டு உயிர் வாழ்கிறார்கள் என்று,

அவர்கள் இருவரும் ஒருமுறை வங்கிக் கிளைக்கு வந்தவுடன், விஜாரித்தேன்.  "இது உண்மையா?"

"எது?"

"நீங்க இருவரும் டீ மாத்திரம் சாப்பிட்டு இருப்பது."

"ஆமாம்." என்றார் அப்துல்லா.

"எப்படி அது மாதிரி இருக்க முடியும்?"

"எங்கள் தேவை மிகக் குறைவானது.  ஒரு நாள் அப்படி இருக்க முடிவு செய்தோம்.  வெறும் டீ மாத்திரம் அன்று குடித்தோம்.  பார்த்தால் ஆச்சரியமாக இருந்தது.  எங்களால் அப்படி இருக்க முடிந்தது."

"நானும் அப்படி இருக்க முடியுமா?"

"நீங்க ஏன் தம்பி அப்படி இருக்கணும்.  நாங்க வயசானவங்க.  எந்த வேலையும் எங்களுக்குக் கிடையாது.  இன்னும் எத்தனை வருஷம் உயிரோடு இருப்போனுன்னு தெரியாது. அதனால் டீயைக் குடிச்சிட்டு காத்திருக்கிறோம்."

நான் அந்தக் கிராமத்தை விட்டு வேற கிராமத்திற்கு மாறி வந்து விட்டேன்

  ஆனால் அந்தக் கிராமத்தில் இருக்கிற அந்தப் பெரியவர்களை மட்டும் என்னால் மறக்க முடியவில்லை.

ஒருநாள் தினமலர் பத்திரிகையைப் பிரித்துப் படித்துக்கொண்டிருந்தேன். அதில் ஒரு செய்தி, அவர்கள் இருவர் புகைப்படங்களைப் பிரசுரம் செய்து.  '75 வயதிலும் டீ மாத்திரம் குடித்து உயிர் வாழ்கிறார்கள்,' என்று.


  
.

Comments

Popular posts from this blog