அழகியசிங்கர் இமையம் அவர்களின் 'எங்கதெ' என்ற புத்தகத்தைப் படித்து முடித்தேன். 110 பக்கங்களில் எழுதப்பட்ட நாவல் இது. சமீபத்தில் தமிழ் இந்து மடடுமல்லாமல் இன்னும் பல பத்திரிகைகளில் இந்த நாவலைப் பற்றி பலர் எழுதி உள்ளார்கள். தமிழ் இந்துவில் பெரிய அளவில் இந்தப் புத்தகத்தைப் பற்றி இரண்டு பேர்கள் விமர்சனம் செய்திருந்தார்கள். அதேபோல் தீராநதியிலும், அமிருதாவிலும் இப் புத்தகம் பற்றி விமர்சனம் வெளியிட்டிருந்தார்கள். மேலும் இப் புத்தகத்தைப் பற்றி ஒரு கூட்டம் நடந்தது. ஒருவிதத்தில் இப்படி இப் புத்தகத்தைப் பற்றி பேசுவது சரியானது என்று தோன்றுகிறது. உண்மையில் நடுப்பக்கத்தில் ஒரு புத்தகம் பற்றி இப்படி விமர்சனம் வருவது நல்ல விஷயமாக எனக்குப் படுகிறது. ஒரு தமிழ் இந்து இல்லை, நூறு தமிழ் இந்துக்கள் உருவாக வேண்டும். நடுப்பக்கத்தில் கண்டுகொள்ளமால் விடப் படுகிற பல புத்தகங்களை எல்லோரும் எழுத வேண்டும். சினிமா படங்களுக்கு, சினிமா நடிகர், நடிகைக்குக் கிடைக்கிற முக்கியத்துவம் எழுத்தாளர்களுக்குக் கிடைக்க வேண்டும். இதெல்லாம் சொல்லலாம்...