Skip to main content

விருட்சம் தேர்ந்தெடுத்த மனதுக்குப் பிடித்த கதைகள்


                                              


அழகியசிங்கர்





செப்டம்பர் மாதம் சிறுகதை ஒன்றைத் தேர்ந்தெடுக்க பத்திரிகைகளை பலவற்றைப் புரட்டினேன்.  ஜøலை, ஆகஸ்ட் மாதங்களில் வெளிவந்த கதைகளை விட செப்டம்பர் மாதம் வெளிவந்த கதைகளின் எண்ணிக்கைக் குறைவாக இருக்கும்போல் தோன்றியது.  காலச்சுவடு ஒரே ஒரு கதையைத்தான் பிரசுரம் செய்திருந்தது.  அமிருதா ஒரு கதையும் பிரசுரம் செய்யவில்லை.  கதைகளின் தன்மையும் முதல் இரண்டு மாதங்களில் தென்பட்ட அவதியை உருவாக்கவில்லை.  பல கதைகளைப் படிக்கும்போது வேண்டாம் வேண்டாம் என்று ஒதுக்கவே தோன்றியது.  

குறிப்பாக ஆகஸ்ட் மாதம் பல கதைகள் சிறப்பாகவே எழுதப்  பட்டிருந்தன.  அந்தத் தன்மை செப்டம்பர் மாதக் கதைகளில் தென்படவில்லை.  ஆனாலும் சில பத்திரிகைகள் நம்பிக்கைத் தராமலில்லை.  

இ வில்சன் என்பவர் கல்கி 14.09.2014 இதழில் பாக்கியம் என்ற கதையை எழுதி உள்ளார்.  அதேபோல் கணையாழி செப்டம்பர் மாத இதழில் கிருஷ்ண வதம் என்ற கதையை எழுதி உள்ளார்.  கிருஷ்ண வதம் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  யோகேஸ்வரன் இரண்டு குழந்தைகளை அவர் வீட்டுக்கு லீவுக்காக அழைத்துக்கொண்டு போகிறார்.  இரண்டு குழந்தைகளில் ஒரு குழந்தையை அழைத்துப் போக அவர்கள் வீட்டில் சம்மதிக்கவில்லை.  கீதா என்கிற அக் குழந்தைக்கு தண்ணியிலே கண்டம் பயம்தான் அதற்குக் காரணம்.  ஏற்கனவே ஒரு முறை அக்குழந்தைக்குதண்ணீரில் பிரச்சினை ஆகிவிட்டது.  யோகேஸ்வரன் சமாதானம் செய்து அண்ணன் தங்கை இரண்டு பேர்களையும் அவர் வீட்டுக்கு அழைத்துப் போகிறார்.  

யோகேஸ்வரன் வீட்டில் பல குழந்தைகளும் சேர்ந்து கொட்டம் அடிக்கும் இடம்.  ஆசையுடன் அவர்களை வரவழைத்து அன்பு பாராட்டுவரர்கள்.  இந்தக் கதையில் தண்ணியால கண்டம் உள்ள கீதாவிற்கு குளத்தில் குளிக்கும்போது பாம்பு கடித்து விடுகிறது.  அது ஒரு தண்ணீப் பாம்பு.  என்றாலும் அது ரொம்பும் அக் குழந்தையின் அம்மாவைப் பாதிக்கிறது.  திரும்பவும் விடுமுறை முடிவதற்குள் தன் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வருவதோடு அல்லாமல்  அவர்களைத் திட்டியும் தீர்த்து விடுகிறாள்.  குழந்தைகளை அழைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு வருத்தமாகப் போய் விடுகிறது.  இ வில்சன் இக் கதையைச் சிறப்பாக எழுதி உள்ளார்.  அதே போல் கல்கியில் அவர் எழுதிய பாக்கியம் என்ற கதையில் பாக்கியம் ஒரு விசேஷவேலையின் போது எல்லா வேலைகளையும் அவளே எடுத்துச் செய்கிறாள்.  அங்கு மிச்சமான சாப்பாடுகளை அங்கிருந்து வீட்டுக்கு எடுத்துக்கொண்டு வருகிறாள்.  காலையில் செய்த பொங்கலை அவள் வீட்டு மாடிற்கு கொடுத்து, மாடு எழுந்திருக்க முடியாமல் படுத்து விடுகிறது.  அந்தப் பதைப்பை கதையில் நன்றாகக் கொண்டு வந்திருக்கிறார்.

அதேபோல் தீராநதியில் எஸ் ராமகிருஷ்ணன் கதையான வானோர் என்ற கதையும், அதேபோல் உயிர்மையில் எழுதிய தனலட்சுமியின் துப்பாக்கி என்ற கதையும் சிறப்பாக எழுதப்பட்டட கதைகள்.  

உயிர்மையில் வெளிவந்த சாங்கியம் என்ற கதை.  இதை சிவபிரசாத் என்பவர் எழுதி உள்ளார்.  இறந்த உடல்களின் முடிகளை அப்புறப் படுத்தும் கதை.  இதை சாங்கியம் என்று குறிப்பிடுகிறார்கள்.  இறந்தவர் ஒருவர் முடியை எடுக்கும்போது இறந்தவர் மனைவி பக்கத்தில் இருந்து அதை கவனித்து வருகிறார்என்பதை உணர்கிறார் தண்டபாணி.  அவர் பின்னால் அவள் நின்றிருந்தாள்.  இறந்தவரின் துணியை இடுப்புக்குக் கீழே நீக்கும்போது அந்தப் பகுதி வாழைப்பழத்தை துண்டாக வெட்டியதைப் போலிருந்தது.  அதையாரிடமாவது சொல்ல வேண்டும் என்று நினைக்கும்போது, இறந்தவர் மனைவி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று வேண்டுகோள் விடுக்கிறார்.  இதை சிறப்பாகவே எழுதி உள்ளார் சிவபிரசாத்.  

அசோகமித்திரன் எழுதிய கதை உறுப்பு அறுவடை என்ற கதை.  இதுவும் சிறப்பாக எழுதப்பட்ட கதை.  அசோகமித்திரன் அவருடையநடையில் சிறப்பாக எழுதப்பட்ட கதை. 

நான் தேர்ந்தெடுத்த பத்திரிகைகளில் இந்த முறை தளம் பத்திரிகையும் சேர்த்துக் கொண்டேன்.  தளம் இதழ் எனக்கு செப்டம்பர் மாதம் கிடைத்தது.  அதை செப்டம்பர் மாத இதழாக எடுத்துக் கொண்டேன். 

அதில் வெளிவந்த எஸ் எம் ஏ ராம் எழுதிய தாத்தா காலத்து பீரோ என்ற கதை.   தாத்தா காலத்தில் தாத்தாவால் ஆசையாக தயாரித்த மரப்பீரோவை பாதுகாப்பது எத்தனைப் பிரச்சினையை உண்டாக்குகிறது என்பதே இக் கதை.  கடைசியல் பாட்டி தாத்தாவின் பீரோவைப் பார்க்காமலே இறந்து விடுகிறாள்.   அவளுடைய பேரன் தான் அந்தப் பீரோவைப் பார்க்கப் போகிறான்.

இந்த மாத சிறப்புக் கதையாக நான் தேர்ந்ததெடுத்த கதை ப.முகமது ஜமிலுதீன் எழுதிய புதுச் சட்டை என்ற கதை.  இக் கதை உயர் எழுத்து செப்டம்பர் மாத இதழில் வெளிவந்த கதை.  கதை சரளமான நடையில் எழுதப்பட்ட கதை.  கதையைப் படிக்க படிக்க சுவாரசியம் கூடிக்கொண்டே போகிறது.  ரஹ்மான் என்கிற பையன் பக்ரீத் வருவதை ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறான்.  ஏனெனில் பக்ரீத் அன்றுதான் அவனுக்கு புதிய துணி கட்டிக்க கிடைக்கும்.  உண்மையில் இதுமாதிரி பண்டிகைத் தினங்கள் ஏழைகள் பாடு திண்டாட்டமாக இருக்கும்.  அவர்களால் புதுத் துணிகள் கூட வாங்க வழி இல்லாமல் இருக்கும்.  எப்படி ரஹ்மான் புதிய துணி வாங்க துடியாய் துடிக்கிறான் என்பதுதான் கதை.  அதற்கான முயற்சியில் ஈடுபடும்போது ரயில் விபத்து ஏற்படுவதைத் தடுக்கிறான்.  

அதன் மூலம் கிடைக்கும் புகழைக் கூட அவன் அறியாமல் இருக்கிறான். அவனுக்கு ரெடிமேட் கடையில் ஒரு சட்டைக்கு இரண்டு சட்டையாக பக்ரீத் அன்று கிடைக்கிறது.  

Comments