Skip to main content

நானும் பார்க்கிறேன் சினிமாக்களை......

2


                                                                                                 


அழகியசிங்கர்



லைஃப் ஈஸ் ப்யூட்டிஃபுல் என்கிற ராபர்ட்டோ பெனினி இயக்கிய இத்தாலி படம் ஒன்றை பார்த்தேன்.  1997ல் வெளியான இந்த இத்தாலி படத்திற்கு சிறந்த நடிகர், சிறந்த அயல் நாட்டுப் படம் என்று பல விருதுகள் கிடைத்துள்ளன.  இதை இயக்கிய ராபர்ட்டோ பெனினி அவர்களே இப்படத்தில் கிய்டோவாக முக்கிய வேடத்தில் சிறப்பாக நடிக்கிறார்.  படத்தின் முதல் பாதி கிய்டோ அவளது காதலியான தோராவுடன் ஏற்படுகிற உணர்ச்சிகரமான தன்மையை வெளிப்படுத்துகிறது.  கிய்டோ ஒரு புத்தகக் கடையை நிறுவ முயற்சி செய்கிறான். தோராவை திருமணம் செய்து கொண்டு அவர்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார்கள்.  அவர்களுக்கு ஜோஸ்வான் என்ற பையன்.  கிய்டோ  யூத இனத்தைச் சேர்ந்தவன்.  ஹிட்டலரின் படைகள் அவர்கள் இருக்கும் நகரத்தில் ரோந்து வருகிறார்கள்.  கிய்டோ ஒரு யூத இனத்தைச் சேர்ந்தவன் என்று அவனை சந்தேகம் கொண்டு அழைத்துப் போகிறார்கள்.  இந்த இடத்தில் தன்னுடைய உணர்ச்சிகளை வெகுவாக மறைத்துக் கொண்டு அது ஒரு நகைச்சுவை நிகழ்ச்சியாக மாற்றுகிறாரன் கிய்டோ.  ஐந்து வயது தன் பையனான ஜோஸ்வான் இதன் தீவிரத் தன்மையை உணரக்கூடாது என்று அவ்வாறு செய்கிறான்.

ஜோஸ்வானுடன் கிய்டோ கைது செய்யப்படுகிறான்.  அவர்களை ஹிட்டலரின் வதைக் கூடத்தில் அழைத்துக்கொண்டு போகிறார்கள்.  கிய்டோவின் மனைவி தோரா யூத வகுப்பை சாராதவள் என்றாலும், கணவனும் மகனும் செல்லுமிடத்திற்கு அவர்களுடன் ரயிலில் செல்கிறாள்.  ஜோஸ்வான் தன் அம்மாவும் தங்களுடன் பிரயாணம் செய்வதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறான்.  ஹிட்டலரின் வதைக் கூடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்கிறார்கள்.  இவர்களைப் போல் பலரும் பயணம் செய்கிறார்கள்.  எந்த வசதியும் இல்லாத ரயிலில் மிருகங்களைப் போல் அவர்களை அடைத்தப்படி அழைத்துச் செல்கிறார்கள்.  

கிய்டோ இது மாதிரியான இக்கட்டில் பயணம் செய்தாலும் தன் மகன் ஜோஸ்வான் இது குறித்து எதுவும் அறிந்து விடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறான்.  ஒரு பெரிய ஆபத்தை, சோகத்தின் உச்சத்தை கிய்டோ உணர்ந்து தன் பையனுக்கு தெரியக் கூடாது என்று நினைக்கிறான்.  லட்சக்கணக்கான யூதர்களைக் கொன்று குவிக்கும் சித்ரவதை முகாமிற்கு செல்கிறார்கள்.  முகாமில் தனியாக பெண்கள் இருக்கிறார்கள்.  கிய்டோவும், ஜோஸ்வாவும் ஆண்கள் முகாமில் இருக்கிறார்கள்.  ஒரு பெரிய அறையில் எல்லோரையும் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள்.  இந்தக் கொடூரமான தன்மை ஒரே அறையில் எல்லோரையும் அடைத்து வைத்திருக்கிற அறைகளில் தெரிகின்றன. எல்லோரும் மூளை குழம்பிப் போனவர்களாக, உடல் வலு இல்லாதவர்களாக, போராட்டத்தை வாய்விட்டுக் கூட தெரிவிக்க விரும்பாதவர்களாகத் தென் படுகிறார்கள்.  அந்த அறையில் அடைக்கப்பட்டவர்கள் ஒருவருக்கு ஒருவர்  பேசுவது கிடையாது.  ஹிட்டலரின் சிப்பாய்கள் முகத்தில் கருணையே இல்லாமல் கொடூரமாக நடந்து கொள்கிறார்கள்.    அவர்களுடைய நோக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அங்கிருப்பவர்களை கொல்வதுதான்.  அதனால் யாவரும் மன வருத்தத்துடன் இருக்கிறார்கள்.  அங்கிருப்பவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக எண்ணிக்கை குறைகிறார்கள். எதுவும் பேசமுடியாமல் எல்லோரும் பைத்திய நிலையில் இருப்பதுபோல காணப்படுகிறார்கள்.  அவர்களுடைய பாத்திர அமைப்பு வித்தியாசமாக இருக்கிறது.  அவர்களை ஒவ்வொரையும் அழிப்பதுகூட அவர்கள் முன் நடக்கவில்லை.  அவர்களை தனியாக அழைத்துப்போய்த்தான் அழிக்கிறார்கள்.

கிய்டோ தன் மகனிடன் எல்லாம் விளையாட்டு என்கிறான்.  இந்த விளையாட்டில் ஜோஸ்வா 1000 புள்ளிகள் எடுத்தால் அவனுக்கு பீரங்கி வண்டி கிடைக்கும் என்று கிய்டோ கூறி அவனை கற்பனையான விளையாட்டில் ஈடுபடுத்துகிறான்.  சோகத்தை மறைத்து எல்லாவற்றையும் பையனுக்காக நகைச்சுவை உணர்வாக மாற்றுகிறான்.  

இந்தப் படத்தின் மூலம் தெரியவருவது.

துக்கத்தை அதன் போக்கிலேயே விட்டு விடுவது என்பது.  அதை நகைச்சுவை உணர்வுடன் எற்றுக்கொள்ளும் தன்மையை கிய்டோ தனக்குள் ஏற்படுத்திக்கொள்கிறான்.  மகன் அதன் கொடூரத்தை புரிந்துகொள்ளாமல் இருக்கப் பார்த்துக்கொள்கிறான்.  

படம் முடிவில் ஜோஸ்வா அவன் அம்மாவிடம் போய் சேர்ந்து விடுகிறான்.  கிய்டோ தன் மனைவியைத் தேடப் போகும்போது தன்னை இழந்து விடுகிறான்.  எந்தக் காட்சியையும் மிகைப் படுத்தாமல் பிரமாதமான முறையில் படம் எடுத்துள்ளார்கள்.  

 

Comments