ஞானக்கூத்தன்
வாசன் மகனுக்கென்றால் மட்டும்
அச்சுப் பொறிகள் அடிக்குமோ?
முத்துச்சாமி போன்றவர் சொன்னால்
மாட்டே னென்று மறுக்குமோ?
காசுகள் ரெண்டு கையிலிருந்தால்
எதையும் எங்கும் நிறுத்தலாம்
காசு படைத்தவன் தமிழைக் கொண்டுபோய்
எங்கெல்லாமோ நிறுத்தினான்.
புலவர் பலரும் தமிழை இறுக்கிக்
குகைக்குள் கொண்டு தள்ளினார்.
குறளால் சிலம்பால் புறத்தால் அகத்தால்
கண்ணைக் கண்ணைக் கட்டினார்.
குகையிலிருந்த தமிழைக் கண்டு
குமுதம் கட்டிக் கொண்டதும்
சுப்ரதீபக் கவிஞர்களெல்லாம்
வஜனம் எழுதிக் களிக்கிறார்
தொழில்மய மாகத் திருமணமாகாக்
காளைகள் சுற்றும் நாட்டிலே
அவர்களுக் கென்றே ஏடு நடத்துவோர்
மூட்டைஅவிழ்த்துத் தருகிறார்.
வேற்று நாட்டுச் சரக்குகளோடு
உள்ளூர்ச் சரக்கை ஒப்பிட்டால்
தலையில் தலையில் அடித்துக் கொண்டால்
தேவலாம் போல இருக்குது.
மோச மின்னும் போவதற்குள்ளே
வித்தைக்டகாரர் வரவேண்டும்
வித்ததை தெரிந்த எழுத்துக் கலைஞர்
விலகி நிற்கக் கூடாது.
வித்தை தெரிந்தவர்க் கெல்லாமின்று
வேலை இருக்குது பலவாக.
நம்
கையிலும் ரெண்டு காசுகளுண்டு
இனி
தமிழை எங்கே நிறுத்தலாம்.
(நன்றி :: கசடதபற ஒன்றாவது இதழ் அக்டோபர் 1970)
Comments