Skip to main content

ஸ்டெல்லா புரூஸ் சில நினைவுகள்

அழகியசிங்கர்     

                                                                                                
                                                                      






ராம் மோஹன் என்கிற ஸ்டெல்லா புரூஸ்ûஸ எனக்கு 25 ஆண்டுகளுக்கு மேலாகத் தெரியும்.  பழகுவதற்கு இனிமையான மனிதர்.  என்னால் சற்றும் நம்ப முடியாத விஷயம் மார்ச்சு முதல் தேதி அவர் தற்கொலை செய்துகொண்ட விஷயம். ஏன் என் நண்பர்களால் கூட அதை ஜீரணிக்க முடியவில்லை.  நான், வைத்தியநாதன், இராஜகோபால், ஸ்ரீனிவாஸன் முதலிய இலக்கிய நண்பர்கள் கூடும் கூட்டத்தில் ஒவ்வொரு மாத ஞாயிற்றுக்கிழமைதோறும் எங்களைச் சந்திக்க அவர் வருவது வழக்கம். 

நெடு நெடு வென்று நல்ல உயரமாக இருப்பார்.  கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு ஸ்டைலாக தோற்றமளிப்பார்.  தன் மனதில் தோன்றுவதை தெளிவாகப் பேசுவார். முதலில் அவர் கவிதைகள் மூலமாகத்தான் எனக்கு அறிமுகம்.   
ஆரம்பத்தில் அவர் எழுதிய கவிதை ஒன்று :
பொழுது விடிந்து 
தினமும் நான்
வருவேனென்று
கடற்கரை மண்ணெல்லாம் 
குஞ்சு நண்டுகள்
கோலம் வரைந்திருக்கின்றன

எளிமையான வரிகளைக் கொண்ட கவிதைகள்.  அவர் பேசுவதுபோல எழுத்தும் இருக்கும்.  நாட்டு நடப்புகளைப் பற்றியும், இலக்கியத்தைப் பற்றியும் உற்சாகம் குன்றாமல் பேசிக்கொண்டு இருப்பார்.  

ஆத்மாநாம் ஆரம்பித்து வைத்த 'ழ' என்ற சிற்றேட்டில்தான் அவர் கவிதைகள் வெளிவரும்.  வசீகரமான வரிகள் கொண்ட எழுத்து அவருடையது.  நான் சந்தித்தப்போதுதான் அவருடைய நாவல் =ஒருமுறைதான் பூக்கும்+ ஆனந்தவிகடனில் தொடர் கதையாக வந்து கொண்டிருந்தது.  

ஆத்மநாமுடன் எனக்கு அதிகம் பழக்கமில்லை.  ஆனால் ஸ்டெல்லா புரூஸ÷டன் அதிகம் பழக்கம் உண்டு.  இன்னும் கேட்டால், ஸ்டெல்லா புரூஸ÷டன் நான் பேசும்போது ஆத்மாநாம் தற்கொலை செய்துகொண்டுவிட்டார்.  ஆத்மாநாமின் தற்கொலையின் தொடர்ச்சியை ஸ்டெல்லா புரூஸ÷டம்தான் தொடர்கிறேன்.  ஆத்மாநாமிற்கு இரங்கல் கூட்டம்  நடக்கிறது.  ஸ்டெல்லா புரூஸ் அதில் கலந்து கொள்ளவில்லை.  ஏன் அவர் சென்னையில் இல்லை?  ஏனோ அந்த இரங்கல் கூட்டத்தை அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.  

அவர் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர்.  கையில் வைத்திருந்த பணத்தை வங்கியில் போட்டு, அது கொடுக்கும் வட்டியை வைத்துக்கொண்டு  எளிமையான வாழ்க்கையை நடத்தியவர்.  தி நகரில் பூங்கா லாட்ஜில் அவர் அறை எடுத்துத் தங்கியிருந்தார்.  மிகச் சிறிய அறை.   அந்த அறையில் அவரைச்  சந்திப்பது வழக்கம்.  சென்னையில் சில தினங்களும், அவருடைய ஊரான விருதுநகரில் சில தினங்களுமாக இருப்பார்.    புத்தகம் படிப்பது, எழுதுவது இதுதான் அவருடைய அன்றாட வாழ்க்கை.  எந்த சாதாரண விஷயத்தையும் சுவாரசியமாகப் பேசுவார்.  தினமும் அலுவலகம் போய்க் கொண்டு அவதிப் படும் எனக்கு, அவருடைய சுதந்திரம் பொறாமையாக இருக்கும்.  

அவர் தொடர்கதை ஆனந்தவிகடனில் வெளிவரும் சமயத்தில் அவருக்கு ஏகப்பட்ட கடிதங்கள் அவர் தொடர்கதையைப் பாராட்டி வரும்.  சிலர் வாழ்க்கையில் எதிர்ப்படும் பிரச்சினைக்கு அவருடைய அறிவுரையைக் கேட்பார்கள்.  சிலர் அவருக்குப் பரிசும் அளிப்பார்கள்.  இதுமாதிரியான சந்தர்ப்பத்தில்தான் அவர் ஹேமாவைச் சந்தித்ததார். ஹேமா அவருடைய வாசகி.  அவருடைய எழுத்தில் மயங்கி அவரைத் திருமணமும் செய்து கொண்டவர். 

       வழக்கமாக நாங்கள் சந்திக்கும் கடற்கரையில் ஒருநாள், 'ஹேமாதான் என் மனைவி' என்று அங்கு கூடியிருந்த எல்லோரிடமும் அறிமுகப் படுத்தினார் ஸ்டெல்லா புரூஸ். ஹேமாவிற்கும் அவருக்கும் வயது வித்தியாசம் அதிகம்.  எனக்கு அவர் அறிமுகப்படுத்தியதைக் கேட்கும்போது ஆச்சரியமாக இருந்தது.

ஹேமா அவர் வாழ்க்கையில் நுழைந்தபிறகு, அவருடைய அறை வாழ்க்கை ஒழிந்தது.  ஒழுங்கான அமைதியான கட்டுப்பாடான குடும்ப வாழ்க்கைத் தொடங்கியது.  அவர் ஆலந்தூரில் இருந்தபோது, சில தடவைகள் அவரைப் பார்க்கச் சென்றிருக்கிறேன். ஹேமா, ஹேமாவின் தங்கை பிரேமா, ஸ்டெல்லா புரூஸ் மூவரும் குடியிருந்தார்கள்.  ஹேமாவின் தங்கை பிரேமாவிற்கு இருதய நோய். அதன்பின் அவர்கள் அந்த இடத்தைக் காலி செய்துவிட்டு கோடம்பாக்கத்தில் உள்ள டாங்க் தெருவிற்குக் குடி வந்து விட்டார்கள். ஹேமாவின் சகோதரரின் சொந்தமான குடியிருப்பு அது.

யார் அவர்கள் வீட்டிற்குச் சென்றாலும், சிரித்த முகத்துடன் ஹேமாவும், ஸ்டெல்லாபுரூஸ÷ம் வரவேற்காமல் இருக்க மாட்டார்கள்.  எதைப் பற்றி வேண்டுமானாலும் அவர்களுடன் மணிக்கணக்கில் பேசிக்கொண்டிருக்கலாம்.  ஸ்டெல்லா புரூஸ் பற்றி ஹேமா வைத்திருந்த உயர்ந்த அபிப்பிராயத்தை என்னால் மறக்கவே முடியாது.   என் குடும்பத்தில் எதாவது விசேஷம் என்றால், ஹேமாவும் அவரும் தவறாமல் கலந்து கொள்வார்கள்.  அவருக்கு ஆன்மிகத்தைப் பற்றிய பிரமை இருந்தது.  

'உடம்பு 25.10.1988' என்ற கவிதை ஒன்றை அவர் எழுதியிருக்கிறார். 

அதில் : 'வேட்கையும் இச்சையும் பிதுங்கும்
மனிதர்களின் ஊடே
காற்று நிறைந்த வயிறாய்
உடல் தனியே சென்று கொண்டிருந்தது '

என்றெல்லாம் வரும்.  அந்தக் கவிதை முழுக்க முழுக்க அவர் ஆன்மிகம் சம்பந்தப்பட்டது.  ஆன்மிகம் என்ற ஒன்றை அவரே நம்பியது.  அவர் அதைப் பற்றி குறிப்பிடும்போது, என்னால் நம்ப முடியாமல் கேட்பேன்.  

சில ஆண்டுகளுக்கு முன்னால், பிரேமா இதய நோய் தாக்குதலால் இறந்து விட்டார். தங்கையை இழந்தத் துக்கத்துடன், ஹேமா இருந்து வந்ததாகவும், இது குறித்துகூட ஸ்டெல்லா புரூஸிடம் அவர் தெரிவித்ததில்லை என்று ஸ்டெல்லா புரூஸ் ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.

அவர் நவீன விருட்சம் இதழில் 'மரணங்கள்' என்ற கட்டுரையில் இவ்வாறு குறிப்பிடுகிறார்: 'ஹேமாவை அவளுக்கு ஏற்பட்ட சிறு நீரகங்கள் பழுதுபட்ட பிரச்னையில் இருந்து மீட்டு காப்பாற்றி விடலாம் என்ற நம்பிக்கை வலுவாக என்னிடம் இருந்தது.  அதற்கான அரிய சில சக்திகளும் எனக்குள் முனைந்து குவிந்திருந்தன,  கிட்டத்தட்ட மூன்றரை மாத முயற்சியில் அதற்கான பலன்களும் அவளில் ஏற்பட்டிருந்ததை மாதாந்திர மருத்துவ சோதனைகள் டாக்டர்களே ஆச்சரியப்படும்படி எடுத்துக் காட்டிக் கொண்டிருந்தன,' என்று குறிப்பிடுகிறார்.

ஆனால் அவர் எதிர்பார்த்தபடி எதுவும் நடக்கவில்லை.  ஹேமாவிற்கு ஆன்மிக அனுபவம் ஏற்பட்டதாக குறிப்பிடுகிறார்.  அதே கட்டுரையில்,
 'ஹேமாவின் உயிருக்கு எந்த விதத்திலும் ஆபத்து வராது என்ற நம்பிக்கை எங்கள் இருவருக்குள்ளும் வந்தது.  கூடிய விரைவில் மரணத்தை நெருங்கப் போகும் ஒரு மனுஷிக்கு இத்தகைய ஆன்மீக அனுபவங்கள் அதுவும் 'பாசிட்டிவ்' வான செய்திகளையும் உள்ளடக்கிய அனுபவங்கள் ஏற்படுவது சாத்தியமில்லை என்ற எங்கள் நம்பிக்கை ஜøன் மாத மத்தியில் தகர்ந்து போனது.+ என்று குறிப்பிடுகிறார்.  ஸ்டெல்லா புரூஸ÷ற்கு இது ஒரு அடி.  

என்னிடம் அடிக்கடி இதைச் சொல்லி புலம்பிக் கொண்டிருப்பார்.  வியாதியின் தீவிரத்தை உணர்ந்து இது மிஸ்டிக்கல் அனுபவத்தால் சரி செய்ய முடியாது என்று எனக்குத் தோன்றும்.  இதைத் தெளிவாகவே அவரிடமும் எடுத்துச் சொன்னதுண்டு.  அவரும் அதைப் புரிந்துகொண்டாலும் நம்ப மறுத்தார். 

ஹேமா உடல்நிலை சரியில்லாத சமயத்தில், நான் அடிக்கடி பந்தநல்லூரிலிருந்து போனில் விஜாரித்துக் கொண்டிருப்பேன்.  ஸ்டெல்லா புரூஸின் வாழ்க்கையில் இப்படி ஒரு சோதனை ஏற்பட்டு விட்டதே என்ற வருத்தம் எனக்கிருந்தது. ஒரு முறை இரவு நேரத்தில் அவருக்குப் போன் செய்திருந்தேன்.  வெகு நேரம் கழித்து அவர்தான் போனை எடுத்தார்.  ஹேமா அறையில் நோயின் அவதியில் படுத்திருந்தார் என்று நினைக்கிறேன்.  போனில் பேசிக்கொண்டிருந்த ஸ்டெல்லா புரூஸ் யாரோ கூப்பிடுகிறார்களென்று போனை வைத்துவிட்டுப் போய்விட்டார்.  அதன் பின் அவர் போனை எடுக்கவே இல்லை. எனக்கோ அன்று இரவு முழுவதும் திகைப்பாக இருந்தது.  அடுத்தநாள் காலையில் ஹேமாவிற்கு எதாவது ஆகிவிட்டதா என்று விஜாரிக்க நினைத்தேன்.  

ஹேமாவின் மரணம் ஜøலை மாதம் ஹேமா எதிர்பார்த்தபடியே நடந்தது.  'எனக்குச் சாவைப் பத்தி பயம் இல்லை.  ஆனால் இந்த வலியைத் தாங்கிக்கொண்டு எப்படி இருக்கிறது,' என்று ஹேமா என்னிடம் சொன்னது இன்னும் கூட ஞாபகத்திற்கு வருகிறது.  

ஹேமாவிற்குப் பிறகு ஸ்டெல்லா புரூஸ÷ம் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை நான் நம்பவில்லை.  ஹேமா மறைவிற்குப் பிறகு ஸ்டெல்லா புரூûஸ சந்தித்த போதெல்லாம், எனக்கு மிகவும் சங்கடமாக இருக்கும்,  இரண்டு மூன்றுமுறை நண்பர்கள் சிலரையும் அழைத்துக்கொண்டு போவேன்.  ஸ்டெல்லா புரூஸ் ஹேமாவைப் பற்றியே சொல்லிக் கொண்டிருப்பார்.  ஹேமா இல்லாத வாழ்க்கையை அவரால் கற்பனை செய்யமுடியில்லை.  'நான், ஹேமா, பிரேமா மூவரும்தான் இந்த வீட்டிற்கு வந்தோம்.  இப்போ பிரேமா இல்லை, ஹேமா இல்லை.  நான் மட்டும்தான் இருக்கிறேன்,' என்று விரக்தியுடன் குறிப்பிடுவார்.

இந்த வருடம் ஜனவரி மாதம் நான் தற்காலிக மாற்றல் உத்தரவு பெற்று சென்னை வந்துவிட்டேன்.  சென்னைப் புத்தகக் காட்சி ஒட்டி ஒரு தினம் ஸ்டெல்லா புரூûஸப் பார்க்கப் பேயிருந்தேன். 'எனக்கும் சில சமிக்ஞைகள் வர ஆரம்பித்துவிட்டன.  நான் அதிக நாள் இருக்க மாட்டேன்,' என்று அவர் சொன்னதைக் கேட்டு எனக்குத் திகைப்பாக இருந்தது.  அவருக்கு வயது 67 ஆக இருந்தாலும், உடல் நிலை சரியாகவே இருந்தார்.  பயப்படும்படியாக எந்த நோயும் இல்லை.  இரவு நேரத்தில் கண் சரியாகத் தெரியாது என்பதால், வெளியே தனியாகப் போக மாட்டார்.  

ஹேமா இல்லை என்ற நிலையை எண்ணி எண்ணி குழப்பிக் கொள்கிறாரென்று நினைத்தேன்.  அவருக்கு அந்தச் சமயத்தில் ஏதோ ஒரு சினிமாவிற்கு கதை வசனம் எழுத வாய்ப்புக்கூட கிடைத்தது.  அதை அவர் மறுத்தும் விட்டார்.  மேலும் அவர் ஹேமாவைப் பற்றி சொல்லி சொல்லி குழம்பிப் போயிருந்தார்.  அவருடைய பல விஷயங்களை என்னால் நம்ப முடியவில்லை. 

எனக்கு அவர் இருந்த வீட்டைவிட்டு காலி செய்து வந்தால் சரியாக இருக்கும் என்று கூட தோன்றியது.  அதே இடத்தில் இருந்தால், ஹேமாவை மறக்க முடியாமல் அந்த வலி இருந்துகொண்டிருக்கும்.  சமீபத்தில் என் பெரியப்பா பெண்ணின் கணவர் இறந்து விட்டார்.  உடனே என் பெரியப்பாப் பெண், கணவருடன் வாழ்ந்த சொந்த வீட்டை விட்டு வேறு ஒரு வீட்டிற்குக் குடி பெயர்ந்து விட்டார்.  ஸ்டெல்லா புரூஸ÷ம் அவ்வாறு செய்திருக்கலாம்.
  
மனம் குழம்பிப் போயிருந்த ஸ்டெல்லா புரூûஸ டாக்டர் ருத்திரனிடம் அழைத்துப் போகலாமென்று நினைத்தேன்.  டாக்டர் ருத்திரன் கூட, +அவருடன் யாராவது இருப்பது அவசியமென்றும், மனக் குழப்பத்திற்கான மாத்திரிகளைச் சாப்பிட்டால் சரியாகிவிடும்.  என்னிடம் அழைத்து வாருங்கள்,+ என்று குறிப்பிட்டார். 

ஸ்டெல்லா புரூûஸ அப்படியெல்லாம் அழைத்துக் கொண்டு போக முடியாது என்பது எனக்குத் தெரியும்.   மேலும் ருத்திரன் பேச்சை எடுத்தால், ருத்திரனுக்குத் தெரிந்ததைவிட எனக்கு அதிகமாகத் தெரியும் என்றெல்லாம் சொல்வார் என்பதும் எனக்குத் தெரியும்.  அந்தச் சமயத்தில்கூட அவர் தற்கொலை செய்து கொண்டுவிடுவார் என்பதை நான் நம்பவில்லை. ஏன்எனில், தற்கொலை செய்து கொள்பவர்களைப் பற்றியெல்லாம் அடிக்கடி ஸ்டெல்லா புரூஸ் என்னிடம் பேசியிருக்கிறார். அப்படிப்பட்டவர் ஏன் தற்கொலை செய்து கொள்ள துணிந்தார் என்பதை நினைக்கவே வருத்தத்தை அளிக்கிறது.  

அவர் கடைசியாக எழுதிய 'மரணங்கள்' என்ற கட்டுரையில், ஹேமா அவரிடம் சொன்னது போல ஒரு வரி வருகிறது.'எப்போ இறந்தாலும் சரி, இறந்த அப்புறமும் அரூபமா உங்க கூடவேதான் இருப்பேன்,' என்று. அரூபமாக ஹேமா வந்திருந்து ஸ்டெல்லா புரூûஸயும் அழைத்துக் கொண்டு போய் விட்டாரா?  அந்தக் கட்டுரையின் முடிவில், ஸ்டெல்லா புரூஸ் இப்படி எழுதி உள்ளார்: 'ஹேமாவின் துணை இல்லாத வாழ்க்கையின் ஒவ்வொரு நிமிடமும் கண்ணீரோடும் அழுகையோடும் நத்தையாய் நகர்ந்து கொண்டிருக்கின்றன...'

அவர் தற்கொலை செய்து கொண்டு விடுவார் என்பதை என்னால் இன்னும் கூட நம்ப முடியவில்லை. இரண்டு அற்புதமான ஜீவன்களை இழந்து விட்டேன் என்று சொல்வதைத் தவிர  வேறு ஒன்றும் சொல்லத் தோன்றவில்லை. அவருடைய இறுதி யாத்திரையில் உறவினர்கள் சிலரும், நண்பர்கள் சிலர் மட்டும்தான் இருந்தோம்.  



(08 ஆகஸ்ட் ஸ்டெல்லா புரூஸ÷ன் பிறந்த தினம்.  அவர் நினைவாக இக் கட்டுரை வெளிப்படுகிறது)

Comments