(PHOTOS TAKEN BY AUDITOR GOVINDARAJAN)
அழகியசிங்கர்
சமீபத்தில் நான் எதிர்கொண்ட மூன்று இலக்கியக் கூட்டங்களைப் பற்றி இங்கே குறிப்பிடலாம் என்று நினைக்கிறேன். ஒரு கூட்டத்தில் நான் பார்வையாளனாக இருந்தேன்.
இன்னொரு கூட்டத்தில் நான் பங்கு கொள்பவனாக மாறி இருந்தேன். மூன்றாவது கூட்டத்தை நானே நடத்துபவனாக இருந்தேன். இந்த மூன்று கூட்டங்களைப் பற்றி இங்கே சொல்வது முக்கியமாக கருதுகிறேன்.
முதல் கூட்டம்: அசோகமித்திரனை வாசித்தல் என்ற கூட்டம். பெருந்தேவி அவருடைய நண்பர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம். அக் கூட்டத்தை இவ்வளவு தூரம் சிறப்பாக ஏற்பாடு செய்வார் என்பதை நானே எதிர்பார்க்கவில்லை. ஒருநாள் முழுவதும் கூட்டத்தை சிறப்பாக நடத்தி விட்டார். இக் கூட்டத்திற்கு நான் மதியம்தான் வர முடிந்தது. அன்று ஏகப்பட்ட வெயில். தாங்க முடியவில்லை. டூ வீலரில் வந்த நான் நடுவில் திரும்பி விடலாமாவென்று நினைத்தேன். ஆனாலும் எப்படியும் கூட்டத்திற்குப் போய்விட வேண்டுமென்ற வைராக்கியத்துடன் சென்றேன். உண்மையில் அக் கூட்டத்தில் கலந்துகொண்ட அத்தனைப் பேர்களும் என் நண்பர்கள்.
மதியம் ஆரம்பமாகும் கூட்டத்திற்குத்தான் நான் வந்தேன். முதலில் ராமானுஜம் என்பவர் அசோகமித்திரனின் 18வது அட்சக்கோடு நாவலை ஒட்டிப் பேசினார். கிட்டத்தட்ட ஒரு கட்டுரையாக எழுதி வாசித்தார். அக் கட்டுரையை அவர் வாசிக்கும்போது என்னால் கட்டுரையை உள்வாங்கிக் கொள்ள முடியவில்லை. ஒரு சமயம் கட்டுரையை அச்சடித்து முன்னதாகவே கொடுத்திருந்தால், அவர் என்ன சொல்ல வருகிறார் என்பதை புரிந்து கொண்டிருக்கலாம்.
அடுத்ததாகப் பேசிய ராஜன் குறை அவர்கள் தற்சமயம் என்று எதோ சொல்லிக்கொண்டு வந்தார். அவரும் கட்டுரையாக வாசித்தார். இதிலும் பிரச்சினை அவர் அசோகமித்திரன் நாவலான இன்று குறித்து என்ன சொல்ல வருகிறார் என்பதுதான். பார்வையாளனாக இருக்கும் எழுதிய கட்டுரையை நிதானமாக வாசிக்க வேண்டியவன், காதால் கேட்கிறேன் என்று தோன்றியது. அசோகமித்திரன் எழுத்து சுலபமானது. எளிதில் பலவற்றை புரியும்படி எடுத்துரைக்கும் தன்மை கொண்டது. ஆனால் அவர் நாவலை வைத்துப் பேசியதுதான் புரியவில்லை.
மூன்றாவதாகப் பேசிய பெருந்தேவி, மானசரோவர் என்ற அவருடைய நாவலை முக்கியமாக எடுத்துப் பேசினார். அவரும் எழுதித்தான் வாசித்தார். அந்தக் கட்டுரையில் வேறு பல ஆங்கில எழுத்தாளர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். திரும்பவும் ஒரு பிரச்சினை என் முன்னால் நின்றது. எழுதப்பட்ட கட்டுரையின் முழுவடிவம் முன்னதாகவே கிடைத்திருக்க வேண்டும் என்பதுதான்.
அசோகமித்திரனின் எழுத்துக்கள் எப்படி? அதை ஒவ்வொருவரும் எப்படி அணுகுகிறோம் என்பது மிக மிக முக்கியம். அவர் நாவல்களில் காணப்படும் எளிமை அவரைப் பற்றி சொல்வதில் இல்லையோ என்றுதான் எனக்குத் தோன்றியது. வீட்டிற்கு நான் வரும்போது ஒன்றே ஒன்றை நான் நினைத்துக்கொண்டேன். திரும்பவும் அசோகமித்திரன் நாவல்களை எடுத்து வாசிக்கலாமென்பதுதான்.
இக் கூட்டத்தை சிறப்பாக நடத்திய பெருந்தேவி முன்னதாகவே என்ன பேசப் போகிறோம் என்பதையும் அச்சடித்துக் கொடுத்திருந்தால், பார்வையாளர்களும் முழு வீச்சில் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள். இது என்னுடைய தாழ்மையான அபிப்பிராயம்.
நான் கலந்துகொண்ட இரண்டாவது கூட்டம். மலாய் கவிஞர்களுடன் தமிழ் கவிஞர்கள் கவிதைகள் வாசித்தல். சென்னை பல்கலைக் கழகம், கலைஞன் பதிப்பகம், மற்றும் மலாய் பல்கலைக் கழகம் சேர்ந்து நடத்திய கூட்டம் இது. 11.06.2014 அன்று நடந்த கூட்டம் இது. கவிதையாய் விரியும் வாழ்வு என்று அக் கூட்டத்திற்கு தலைப்பு. 28 தமிழ்க் கவிஞர்கள், 21 மலாய் கவிஞர்கள் கலந்து கொண்ட நிகழ்ச்சி இது. மலாய் கவிதைகள் எல்லாம் தமிழிலும் ஆங்கிலத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. அதேபோல் தமிழ் கவிதைகள் எல்லாம் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன. இரண்டு நாட்கள் நடந்த இக் கூட்டத்தில் மொத்தம் 49 கவிஞர்கள் கவிதைகள் வாசித்தோம். இந்தியாவில் உள்ள மற்ற மொழியைச் சேர்ந்தவர்களுடன் இது மாதிரியான கூட்டம் நிகழ்ந்ததில்லை. ஆனால் மலேசியாவைச் சேர்ந்தர்களுடன் இப்படியொரு கூட்டம் நிகழ்வது ஆச்சரியமாக இருந்தது.
இக் கூட்டத்திற்கு தனி மனித பொறுப்பை ஏற்றுக்கொண்ட லதா ராமகிருஷ்ணனைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர் ஒருவரே எல்லா தமிழ் கவிதைகளையும் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து நல்ல புத்தகமாகக் கொண்டு வந்துள்ளார்கள். கவிதையைக் குறித்து எஸ் சண்முகமும், சி மோகன் அவர்களும் கட்டுரைகள் வாசித்தார்கள். சண்முகம் கட்டுரை படிக்க வேண்டிய கட்டுரை. கேட்க வேண்டிய கட்டுரை இல்லை. சி மோகன் தெளிவாக தன் எண்ணங்களை கட்டுரை வாயிலாக வாசித்துக் காட்டினார். பல கவிஞர்களைச் சந்தித்த நல்ல அனுபவம் இது.
மூன்றாவது கூட்டத்தைப் பற்றி இப்போது சொல்ல விரும்புகிறேன். ஒவ்வொரு மாதமும் ஒரு கூட்டம் நடத்த வேண்டும் என்ற முயற்சி மே மாதத்திலிருந்து நான் தொடங்கி உள்ளேன். அதன் தொடர்ச்சியாக கவிஞர் பயணியின் கூட்டத்தை ஜøன் மாதம் நடத்தினேன். எனக்கு ஒத்துழைப்பு கொடுப்பவர் ஆடிட்டர் கோவிந்தராஜன் என்ற நண்பர். பயணி அடக்கமானவர். அவர் இது வரையில் இரண்டு கவிதைத் தொகுப்புகள் கொண்டு வந்துள்ளார். என் நிகழ்ச்சிக்கு வழக்கம்போல் குறைவானவர்களே வருவார்கள். ஆனால் கூட்டம் 2 அல்லது 3 மணி நேரம் தொடர்ந்து நடைபெறும். அன்றைய கூட்டமும் சிறப்பாக நடந்தது. இக் கூட்டத்தில் முக்கியமான ஒன்று பார்வையாளர்களும் கலந்து கொள்ளும் கூட்டம் இது. பயணி மட்டும் அன்று பேசவில்லை. பார்வையாளர்களும் சேர்ந்துதான் பேசினார்கள். இதனால் கூட்டம் கேட்க சிறப்பாக இருந்தது. பொதுவான கருத்துகளும், பயணியின் கவிதைகள் பற்றிய கருத்துகளும் கூட்டம் முழுவதும் நிரம்பி வழிந்தன.
Comments