Skip to main content

எதையாவது சொல்லட்டுமா..........95

      

அழகியசிங்கர்


    ஒவ்வொருக்கும் அந்தக் கடைசி மாதம் கசப்பாகத்தான் இருக்கும்.  எப்போது இதிலிருந்து விடுதலை ஆகி ஓடிவிட முடியும் என்றுதான் தோன்றும்.  என்னுடைய கடைசி மாதத்தில் நான் அப்படி நினைத்ததில் எந்தத் தவறும் இல்லை.  கடந்த 35 ஆண்டுகளாக ஒரு நிறுவனத்தின் நிழலில் அசையாமல் என் பொழுதை ஓட்டிவிட்டேன்.  ஆனால் இப்போது திரும்பவும் நினைத்துப் பார்த்தால் திகைப்பாகத்தான் இருக்கிறது. 

    ஒவ்வொருமுறை என் அலுவலக நண்பர் என்னிடம் போனில் பேசும்போது, அவருக்கு என் மீது பொறாமையாகக் கூட இருக்கும்.  ''சார் நீங்க தப்பிச்சிட்டீங்க..." என்று.  ஆமாம். உண்மைதான். தொடர்ந்து இனி இருக்க முடியாது. 

    மார்ச்சு மாதம் முதல் தேதி.  மொட்டை மாடிக்குச் சென்று சூரியனைப் பார்த்து கைகூப்பினேன்.  35 வருட அலுவலக வாழ்க்கை முடிந்தது.  இனி அவசரம் அவசரமாக காலை 8.30 மணிக்கே போய் வங்கிக் கதவைத் திறக்க வேண்டாம்.  யாருக்கும் பதில் சொல்ல வேண்டாம்.  நிம்மதி.

    ஒரு மாதமாக பதவி ஓய்வுப் பெற்ற பலரிடம் பேட்டி கண்டேன்.  என் முதல் கேள்வி.  "எப்படி பொழுது போகிறது?" என் அலுவலகத்திலேயே பணிபுரிந்து பதவி மூப்பு பெற்றவர் சொன்னார் : "பொழுதே போக மாட்டேங்கறது...காலையில் எழுந்தவுடன் பூங்கா சென்று விடுவேன்.  அங்கே போய் உட்கார்ந்துவிட்டு வருவேன்.."    என்ன இப்படி சொல்கிறாரே என்று தோன்றியது.  ஏமாற்றமாக இருந்தது.  இன்னொருவர் சொன்னார் : "காலையில் பூஜை செய்ய ஆரம்பித்தால்,  மதியம் வரை ஓடும்.  அதன்பின்தான் சாப்பாடு,"என்று.

    "ஐயோ போர்..  நான் வேலைக்குப் போறேன்.  சம்பளம் குறைச்சல்தான்...ஆனா பொழுது போகிறது.."

    சொன்னவர் அலுவலகத்தில் முக்கியமான பதவியில் இருந்து பதவி மூப்பு அடைந்தவர். 

    நான் கேட்ட யாரும் பதவியை விட்டு வந்தபின் இன்னும் அதில் ஒட்டிக்கொள்ள வேண்டுமென்று துடியாக துடிப்பவர்கள்.  யாருக்கும் தான் பார்த்த பதவியை விட முடியவில்லை. 

    சில மாதங்களுக்கு முன் பதவி மூப்பு அடைந்த என் நண்பனிடமிருந்து போன் வந்தது.  "இன்சூரன்ஸில இருக்கேன்... நீ இன்சூரன்ஸ் போடு," என்றான்.  நான் அவனுக்கு பதிலே சொல்லவில்லை.  திரும்பவும் சில நாட்கள் கழித்து போன் செய்தான்.  பதில் சொல்லவில்லை.  அவனும் விடவில்லை.  ஒருமுறை அவனிடம் சொல்லிவிட்டேன்.  "ஏன் இப்படி இன்சூரன்ஸிலே வேலைப் பாக்கறே.. சும்மா இருக்க முடியாது...நமக்கு கிடைக்கிற பென்சன் பணம் போதுமே.. வீட்டில இருக்கலாமே.." என்றேன்.

    "வீடு போரடிக்கிறது...யார் இருக்கிறது.  முடிஞ்ச வரை வேலை பாக்கறது.." என்றான்.  யாரையும் திருத்த முடியாது என்று தோன்றியது. 

    காலையில் எழுந்தவுடன் நடைபயிற்சி போவதற்கு முன், உவேசாவின் என் சரித்திரம் புத்தகத்தில் ஒரு அத்தியாயம் படிப்பேன்.  பின் ஒரு சிறுகதையைப் படிக்க வேண்டுமென்று கு அழகரிசாமியின் கதை ஒன்றை எடுத்துப் படிப்பேன்.  பின் டைரி எழுதுவேன்.  சரியாக 7 மணிக்கு நடைபயிற்சிக்குக் கிளம்புவேன். நானோ காரை எடுத்துக்கொண்டு போவேன்.  நடைபயிற்சி ஒன்று.  காரை ஓட்டறது இன்னொரு பயிற்சி.  திரும்பி வரும்போது மணி ஒன்பது ஆகிவிடும்.

அன்றைய செய்தித்தாள்களைப் படிப்பேன். பின் நிதானமாக எழுந்து குளித்துவிட்டு சாப்பிட உட்காருவேன்.  நிதானமாக குளிப்பதை எடுத்துக்கொள்ளுங்கள்.  வளசரவாக்கத்தில் இருக்கும்போது இது நடந்ததா?  அவசரம் அவசரமாக ஓடி எட்டரை மணிக்கு வங்கிக் கதவைத் திறக்க வேண்டும்.  ஒரு முறை தாமதமாக வந்தபோது, முதன்மை மேலாளர், "நீங்க சீக்கிரமாக வந்து கதவைத் திறக்க வேண்டும்," என்றார். "சிலசமயம் அது முடியாது சார்...நான் மாம்பலத்திலிருந்து வருகிறேன்," ''அப்படியெல்லாம் சொல்ல முடியாது.  வரத்தான் வரணும்.. நீங்க வரவில்லையென்றால் மத்த ஊழியர்களை ஒன்றும் கேட்க முடியாது," என்றார்.  வேற வழி. எட்டரை மணிக்கு வந்து கதவைத் திறக்க வேண்டும்.  அவசரம் அவசரமாகக் குளித்து, அவசரம் அவசரமாக சாப்பிட்டு, அவசரம் அவசரமாக டூ வீலரில் வளசரவாக்கம் கிறைக்கு ஓட வேண்டும்.

        "என் அப்பாவிற்கு 92 வயதாகிறது....வீடு மாம்பலத்தில் இருக்கிறது.  மாம்பலத்தில் உள்ள கிளையில் என்னை மாற்றினால் நன்றாக இருக்கும்,ýý என்று மேலிடத்தில் கேட்டுப் பார்த்தேன்.  ஒன்றும் நடக்கவில்லை.  இத்தனைக்கும் நான் பதவி மூப்பு அடைய ஒரு வருடம் கூட இல்லை. "

    நான் அலுவலகத்தில் இருக்கும்போது, வீட்டுக் கதவை தாளிட்டு விட்டு வந்து விடுவேன்.  அப்பா தானாகவே குளித்துவிட்டு, தானாகவே சாப்பிட்டுவிட்டு, பேப்பர் படித்துவிட்டு, தூங்குவார் தூங்குவார் அப்படி தூங்குவார்.  யாராவது பெல் அடித்தாலும் போய் திறக்க மாட்டார்.  போன் எதாவது வந்தால் காது கேட்காது. 

    எனக்கு ஞானக்கூத்தன் கவிதை ஒன்று ஞாபகத்திற்கு வருகிறது. 'விடுமுறை தரும் பூதம்' என்பதுதான் கவிதை.

        ஞாயிறு தோறும் தலைமறை வாகும்
        வேலை என்னும் ஒரு பூதம்
        திங்கள் விடிந்தால் காதைத் திருகி
        இழுத்துக் கொண்டு போகிறது

        ஒருநாள் நீங்கள் போகலை என்றால்
        ஆளை அனுப்பிக் கொல்கிறது
        மறுநாள் போனால் தீக்கனலாகக்
        கண்ணை உருட்டிப் பார்க்கிறது

        வயிற்றுப் போக்கு தலைவலி காய்ச்சல்
        வீட்டில் ஒருவல் நலமில்லை
        என்னும் பற்பல காரணம் சொன்னால்
        ஏற்றுக் கொள்ள மறுக்கிறது

        வாரம் முழுதும் பூதத்துடனே
        பழகிப் போன சிலபேர்கள்
        தாமும் குட்டிப் பூதங்களாகிப்
        பயங்கள் காட்டி மகிழ்கின்றார்

        தட்டுப் பொறியின் மந்திரகீதம்
        கேட்டுக் கேட்டு வெறியேறி
        மனிதர் பேச்சை ஒருபொருட் டாக
        மதியாதிந்தப் பெரும்பூதம்

        உறைந்து போன இரத்தம் போன்ற
        அரக்கை ஒட்டி உரை அனுப்பும்
        'வயிற்றில்  உன்னை அடிப்பேனெ' ன்னும்
        இந்தப் பேச்சை அது கேட்டால்

    ஜனவரி மாதம் 25ஆம் தேதி கண்பொறையால் அவதிப்பட்டதால் கண் சரியாகத் தெரியவில்லை.  முழுவதும் அலுவலகம் போகாமல் இருந்து விடலாமாவென்று நினைத்தேன்.  ஏன்என்றால் நான் பிப்பரவரி மாதம் பதவி மூப்பு அடைகிறேன். 

    "கணனியைப் பார்க்க முடியாவிட்டாலும் பரவாயில்லை.  அலுவலகத்திற்கு வாருங்கள்," என்று தொந்தரவு செய்தார்கள் அலுவலகத்தில். டூ வீலரை ஓட்ட முடியவில்லை. அலுவலகம் போவதற்கு பஸ்ஸில்தான் போக முடிந்தது.  கண் தெரியவில்லை. 

    கணினி முன் சும்மா போய் உட்கார்ந்து கொள்வேன்.  ஆனால் வேற விதமான பணியை செய்யும்படி நேரிட்டது.  ஒவ்வொரு பத்திரம் பதிவு செய்யும் அலுவலகத்திற்கெல்லாம் சென்று கண் சரியாக தெரியாவிட்டாலும் கையெழுத்துப் போடும்படி நேரிட்டது.  அலுவலக தொந்தரவு.

    பலருக்கு பதவி மூப்பு அடைவது வருத்தமான விஷயமாக இருக்கும்போது, நானோ எப்போது வெளியே வரப் போகிறேனென்று பரபரப்பில் இருந்தேன்.  ஒரு வழியாக பிப்ரவரி முடிந்து வெளியே நல்லபடியாக வந்துவிட்டேன்.

    ஆரியகவுடர் ரோடில் உள்ள வங்கிக் கிளையில்தான் பென்சன்.  வீட்டிலிருந்து நிதானமாகப் போய் வங்கிக் கிளையில் திரண்டிருக்கும் கூட்டத்தில் நின்று பாஸ்புக்கில் பதிவு செய்கிறேன். பரபரப்பான அந்த ரோடில் எந்தப் பத்தட்டமும் இல்லாமல் நடப்பது எனக்குப் பிடித்திருக்கிறது.   அவசரம் அவசரமாக பலர் அலுவலகம் செல்ல பயணிக்கிறார்கள்.  பள்ளிக்கூடம், கல்லூரி செல்ல மாணவ மாணவிகள் திரண்டு ஓடுகிறார்கள்.  நான் அங்குலம் அங்குலமாக நடந்து செல்கிறேன்.  நானும் அலுவலகத்தில் இருந்தால் இதெல்லாம் நடக்கக் கூடிய விஷயமாக எனக்குத் தோன்றாது. 

    பதவி மூப்பு அடையும் விஷயத்தை ஞானக்கூத்தனிடம் கூறினேன்.  "இனிமேல்தான் சுதந்திரமான உலகத்திற்குள் வருகிறீர்கள்.." என்றார்.

    அவர் சொல்வதில் எல்லா உண்மையும் இருக்கிறது.  ஆனால் தூங்கும்போது, கனவில் அலுவலகத்தில் போய் நிற்பதுபோல் தோன்றுகிறது.  அலுவலகத்தில் உள்ளவர்களுடன் பேசுவதுபோல் தோன்றுகிறது.

    நான் படிக்க வேண்டிய புத்தகங்கள் அடுக்கடுக்காய் என் முன்னால் வீற்றிருக்கின்றன.



       

   
       




   

             

Comments