தேனு
ஒரு இளம்பெண்ணின் கோட்டோவிய கீழ்நுனியின்
வண்ணமற்ற இழையைப் பிடித்தபடி
மையம் நோக்கி நடக்கத் துவங்குகிறாள் யாழினி.
விழிகளின் வெளிச்சத்தை மெலிதாய் பரப்பி
நீள்கோடுகளைக் கடைந்தெடுத்து
சொற்களாய் உருக்குகிறாள்.
மேடுகளைச் செதுக்கி அலையலையாய்
முன்னேறும் வேகம் என்றுமே
அவளுக்கு அலாதியானது..
ஒவ்வொரு வளைவிற்குத் தன் சொல்லொன்றையும்,
ஒவ்வொரு முடிச்சிற்குத் தன் புன்னகையொன்றையும்
சிறகடிக்க விடுத்து நகர்கிறாள்.
சொற்களையும் புன்னகைகளையும்
ஒரு சேர கலந்து வெளியிட்டு
வண்ணம் அமைக்க அவளால் மட்டுமே முடிகிறது.
மையம் அடைந்தவள் மெலிதான மௌனமொன்றை
வெளியிட்டபடி சிறகுகளை உள்ளடக்கிச்
சாயவும்,
வண்ணம் பூக்கத் துவங்குகிறது அவளைச் சுற்றி..
காலங்கள் கடந்து வண்ணத்து உயிர் சிற்பமாய்
உருமாறி இருந்தது கோட்டோவியம்,
அருகில் புன்னகைச்சொல்லொன்றை உதிர்த்தபடி துயில்கிறாள்
வண்ணச்சிறகுகளின் இளவரசி யாழினி..
Comments