Skip to main content

a story by KRISHNA


மக்கானாபேட்டை வருமான வரி அலுவலக பின்புறத்தில் ஒரு குறுக்குச் சந்து உள்ளது. அது, இரண்டு அடுக்கு மாடி ஒன்றில் சென்று முடியும். அதன் ஒரு பகுதி மேன்ஷனாக இயங்கி வந்த காலத்தில் வினயும், மீரானும் எனக்கு அறிமுகமானார்கள். வினய், அமெரிக்காவை மையமாக வைத்து இயங்கும் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்பவன். மீரானுக்கு, வங்கியில் லோன் வாங்கித் தரும் பணி. பழகியிருந்த குறைவான நாட்களிலேயே இயல்பில் வினயுன், மீரானும் இரண்டு எதிர் நிலை மனிதர்கள் என்பதை தெரிந்துகொண்டேன். ஆனா, நான் அதில் நடுவன். மீரான் எங்களிருவரை விட வயதில் ஒன்றரை மடங்கு மூத்தவந்தான் என்றாலும், "அண்ணன்-னு எல்லாம் சொல்லாதே, பேர் சொல்லியே கூப்பிடு." என்பான். ஆந்திராவிலிருந்து வந்திருந்த வினய், ஊரில் இருக்கும் தனது பெற்றோரிடத்தில் பேசாத நாட்களை எண்ணித்தான் சொல்ல வேண்டியிருக்கும். தினமும் ஒரு ஐந்து நிமிடமாவது பேசினாலொழிய தூங்கமாட்டான். எனக்கும் பெற்றோரிடம் பேசுகின்ற வழக்கம் இருந்தாலும் வாரம் ஒரு முறையோ இரண்டு வாரத்தில் ஒரு தடவையோ மட்டுமே பேசுபவன். அதுவும் சிரத்தையில்லாமல் (எப்போது நீ சிவப்பு பொத்தானை அழுத்துவாய்) ஓரிரு நிமிடங்கள் பேசிவிட்டு வைப்பது வழக்கம். வினய் நெகிழ்வாக பேசுவான். ("ஹௌ இஸ் யுவர் ஹெல்த் மாம்? டோண்ட் சே லைக் திஸ், தென் ஐ வில் பி அப்செட், கம் ஆன், ஐ அம் தேர் ஃபார் யூ. ஹவ் பில்ஸ் ரெகுலர்லி) மீரானுக்கு - புரிகின்ற அளவுக்கு கூட ஆங்கிலம் தெரியாது. எனக்கு கொஞ்சமாக புரியும். வீட்டிலிருந்து வேறொரு ஊருக்கு சென்று தங்கி வேலையிலிருக்கும் மக/மகள்களிடம், பெற்றவர்கள் எதிர்பார்க்கும் ஒன்றை வினய் போன்றவர்களிடமிருந்துதான் கற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது. மகன், நான் பிடித்திருக்கும் கடிவாளத்தோடுதான் இன்னமும் பயணிக்கிறான் என்பதை உறுதிசெய்துகொள்ள இதுபோன்ற செல்போன் விசாரிப்புகள் தேவைப்படுகிறது. வினய் கடிவாளத்தைப் பிடித்தபடி பயணிப்பவன். நான் வேறு வழியில்லாமல் அதை வலுத்துப் பிடித்துக்கொள்பவன். இதன் படி, வினய்க்கு முதல் இடம். இரண்டாவது இடத்திற்கு போகும் முன்பாக வினயைப் பற்றி இன்னும் கொஞ்சம் சொல்ல வேண்டியிருக்கிறது. வினய் ஒரு கிதார் பிரியன். மறந்தும்கூட கெட்ட வார்த்தையை உச்சரிக்காதவன். அதிகாலை 4 மணிக்கு அலுவலகம் சென்றால், மதியம் இரண்டு மணிக்கு வந்து விடுவான். மாலையில் கிதாரை பின்னந்தோளில் போட்டுக்கொண்டு நண்பனின் அறைக்குச் சென்று அங்கேயே சாப்பிட்டுவிட்டு இரவு 9 மணிக்குள் அறைக்குத் திரும்பி வந்து பெற்றோரிடம் பேசியபடி உறங்கிவிடுவான். கண்டிப்பாக, மாதம் ஒரு முறை ஊருக்குச் சென்றுவிடுவான். அதற்காக, முன்பதிவு செய்த ரயில் பயணச்சீட்டு எப்போதுமே அவனுடைய துணிப்பையில் இருக்கும். சுத்தமாக, சீராக தனது பொருட்களை அறையில் அடுக்கி வைத்திருப்பான். எந்த "கூடுதல்" வேலைகளும் செய்யாமல் முறையாக வாழ்பவன் வினய். இவையனைத்தும் எனக்கு ஒத்துப்போகாத ஒன்றாக இருப்பதாலும், செயலளவில் கொண்டுவராத/ முடியாதபடி இருப்பதாலும் வினய் என்னிடமிருந்து விலகிய ஒரு மனிதனாக இருந்தான். இதைத் தவிர, பெண்களிடம் பேசுவதற்கு கூச்சப்படுபவன் நான். மூன்று பேர் சண்டைபோடுவதை ஓரத்தில் நின்று பார்க்கும்போதே நெஞ்சு படபடத்து ஓடுவேன். வார இறுதியில், ஞாயிறு என்றால் சாயங்காலம் வரை தூங்கிவிட்டு பலமுறை அடுத்த நாள் அலுவலகத்தில் அவதிப்பட்டிருக்கிறேன். யார் உதவியாவது எப்போதாவது எனக்கு தேவைப்பட்டுக்கொண்டே இருக்கும். பசி, நல்ல தூக்கம், பெண்ணைப் பார்த்தால் அடி மயக்கம் என்ற கோட்டுக்கு வெளியே எதையுமே நான் உணர்ந்திருக்கவில்லை. தனது நண்பன் பெயர் முருகன். ரோஸ் கலரில் பொசுங்கிய மாதிரி தோல் இருக்குமில்லையா?!. முருகனுடைய மாமா அந்த வியாதியால் பாதிக்கப்பட்டவர். அவர் ஒரு பால்காரர். மாமாவின் வீட்டில் பத்துக்கு ரெண்டு அறை ஒன்று முதல் மாடியில் இருக்கிறது. டயமண்ட் சேப் துளையிடப்பட்ட அந்த அறையின் சுவர் தெருவைப் பார்த்தபடியிருக்கும். அப்போது சிப்பி பீடி எங்களுடைய பக்கம் ஃபேமஸ். அறையின் ஒரு பக்கம் சாயம் விலகிய அரக்கு நிற டிரெங்கு பெட்டியின் மேல் இரண்டு கட்டு பீடி எப்போதும் இருக்கும். நானும், முருகனும் அப்போது ஐந்தாம் வகுப்பில் இருந்தோம். வகுப்பு முடிந்ததும் நேராக முருகனுடைய மாமா வீட்டுக்கு சென்று ஆளுக்கு ஐந்து பீடிகளை ஊதி தள்ளிவிட்ட கையோடு பற்பசையால் வாயைக் கழுவிவிட்டுவிடுவேன். பின்னாள் கடையில் வைத்து என்னுடைய பெரியப்பா பார்த்ததிலிருந்து பப்ளிக்காக பீடி இழுக்க ஆரம்பித்துவிட்டேன். வினயை பொருத்தவரை அசைவுகளை வைத்துக்கொண்டுகூட தமிழ் மொழியைப் புரிந்துகொள்ள தெரியாது. பகலில் ஒரு மதிய வெளிச்சத்தில் வினய் இருக்கும்போது தன்னைப் பற்றி இவ்வாறு அறிமுகம் செய்துகொண்டிருந்தான் மீரான். இதெல்லாம் பட்டியலில் ஒரு பக்கம்தான். பட்டியலுக்கு உட்புறம் இருக்கும் தனது பரிணாமத்தின் வளர்ச்சியை அடுக்கடுக்காக சொல்லிக்கொண்டே இருந்தவன் அசலில் தற்பெருமையை சொல்லிக்கொள்ளும் சாதனையாளனாக மாறியிருந்தான். மீரான் ஏற்கனவே கட்டளையிட்டிருந்தபடி, பேர் சொல்லி அழைத்தாலும், பின்னாள், வா, போ என்று அழைக்கும் தூரத்திற்கு நெருக்கமாகியிருந்தான். காரணம் ஒரே மொழிக்காரன் என்பதை விட இருவருக்குமான குணாதிசய தூரக்குறைவினால்தான் என்று நினைக்கிறேன். தைர்யமாக பொதுவில் செயல்படாதவொன்றின் மீது எப்போதுமே ஒரு கிராக்கி இருப்பதுண்டு. அந்தரங்கமாக அறியவேண்டியதின் புதிர்களை அப்பட்டமாக்கி செயல்படுத்தியதன் விளைவாக ஒரு பிணைப்பு மீரானிடத்தில் எப்போதுமே இருந்தது. ஆனால், வினயிடம் இதே உறவமைப்பை நான் உணர்ந்ததில்லை. அவன் முற்றிலுமாக எங்களிலிருந்து புதிதாக வளர்ந்தவன். இதனால் கூட நான் என்னை இரண்டாவது இடத்தில் நிறுத்திக்கொள்வதுண்டு. இதை மீரானிடம் பகிர்ந்துகொண்டதே கிடையாது. அவனை மூன்றாவது இடத்தில் மட்டுமே வைத்துக்கொள்ள முடியும் என்று நினைக்கிறேன். "இந்தா மீரான், இதைப் பிடி! அவன் நிற்கிறான். நேரா போய். ஏங்க - அங்க கொஞ்சம் பாருங்க-னு வேக வேகமா சொல்லு. பாக்குறானோ இல்லையோ, இதால சாத்திரு. நீ அடிச்ச வேகத்துல நான் ஓடி வந்து மீதிய பாத்துக்குறேன். நைட்டு நேரம், காரியம் முடிஞ்சதும் சுத்தமாக்கணும். நீ என்ன பண்ணு, ஏற்கனவே சொன்ன மாதிரி அல்சூருல ரமேஷ் வீட்டுக்கு போயிரு. ஓசூர்-ல நடந்தத இத்தோட மறந்துரு. வெளங்குதா?" "இது கொலை. இப்பவும் கம்பளத்துக்கு அடியிலேதான் இருக்குது. வெளியில் வராமல் நண்பன் பரந்தாமன் பார்த்துக்கொண்டான். ஒரே காரணம், பரந்தாமனுடைய அக்கா அவளுடைய வயிற்றில் குழந்தையோடு கெரசின் ஊற்றி இறந்தாள். மாமாவின் உயிர் நீத்தல் தான் ஒரே வழி என்று முடிவெடுத்தோம். பரந்தாமா! எனக்கும் இப்போதான் கொஞ்சம் நிம்மதியா இருக்குதடா " மீரான் அந்த சம்பவத்தைப் பற்றி விரிவாக சொல்லிக்கொண்டிருந்தபோது இரவு மணி பதினொன்றைத் தாண்டியிருந்தது. வினய் நல்ல உறக்கத்தில் இருந்தான். அது ஒரு புழுக்கமான அறை. சாதாரண நாட்களில் கூட சட்டையைக் கழற்றிவிட்டுதான் படுக்க முடியும். மீரானின் குரலினால் என்னுடல் ஒரு மெழுகு திரவம் போல உருகிவிடுவதை உணர்ந்தேன். வியர்வை தாரை தாரையாக வெளியேறியது. சட்டையால் வியர்வையைத் துடைத்துக்கொண்டேன். மீரான் தான் கட்டியிருந்த கைக்கடிகாரத்தை ஆழமாக பார்த்துக்கொண்டே தூங்குவதற்கு தயாராகியிருந்தான். பிப்ரவரி 28. வருடத்தின் எல்லா மாதங்களும் எல்லாவற்றிலும் பிந்தும்போது முந்திக்கொள்ளும் ஒரே மாதமாக பிப்ரவரி இருப்பதால் எனக்கு அதன் மேல் ஒரு தனி பிரியம் இருப்பதுண்டு. சம்பளம் கிட்டிவிடும். மூன்று நாள் வேலை மிச்சம். இதுபோக வினய் ஊருக்கு செல்வதால் கழிப்பறை வறண்டு எனக்கே எனக்கானபடி இருக்கும். இதுபோன்ற நாட்களில் மீரானையும் பார்க்க முடியாது. பெரும்பாலும் மாதக் கடைசி வார விடுமுறையாக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி வினய் தன்னுடைய ஊருக்கு சென்றுவிடுவான். இந்த முறை அப்படியிருக்கவில்லை. இருந்தாலும், வினய் ஊருக்கு செல்வதற்கு தயாராகியிருந்தான். நான் அப்பொழுதுதான் அலுவலகம்விட்ட அறைக்கு வந்திருந்தேன். காலுறையை கழற்றியபடியே மீரானிடம் சாதாரணமாகத்தான் சொல்லியிருந்தேன். மீரான், வினய் பாத்தியா? எவ்ளோ நல்லவனா இருக்கான்? சற்றே ஏற்றமான உரத்த குரலில், "நண்பா, நல்லவன்-னு யாருமே கிடையாது. பார்க்கப்போனா நல்லதுங்கிறதே கெட்டது இல்லாம இருக்குறதுதான். சாமி மாதிரி, பேய் மாதிரி, மனசு மாதிரி, "நல்ல" அப்படிங்கிறதுகூட ஒரு நம்பிக்கைதான். என்னைய கேட்டியன்னா.. எல்லாமே கெட்டதுதான். கெட்டதுக்கு மரியாதை பண்ணின காலமெல்லாம் மனுஷனுக்கு பேர் சொல்லியே கூப்பிடாத காலம் நண்பா. எல்லாமே இடத்துக்காகதான். நீ யாரு? உன்னோட இடம் என்ன அப்படிங்கிறதுலதான் இருக்கு எல்லாமே. எல்லாருக்குமே ஒரு இடம் தேவைப்படுது. நம்மல ஊரே பாக்கணும்னு தோணுது. அதுதான் நல்லதுங்கிறாங்க. எதுக்குமே பேரில்லாம இருந்த காலத்தோட தொடர்பு பண்ணாம இருக்குறதுக்கு பேர்தான் நீ சொல்ற நல்லவன், வினய் மாதிரி. யோசி, உள்ளுக்குள்ள இருக்கிறதெல்லாம் நாக்குல வந்துட்டா அப்புறம் நல்லது எங்க இருக்கும். புரியலண்ணா விட்டுரு. அதுதான் நல்லது!!" என்று சொன்னான். கசிந்த நீரின் வேகத்தைப்போல அப்போது மௌனம் மெல்ல பரவ ஆரம்பித்து அறை முழுதும் ஆக்கிரமித்தது. வினய் தன்னுடைய பையை தோளில் போட்டுக் கொண்டு எங்களைப்பார்த்து புன்முறுவலிட்டுக்கொண்டு அறையின் கதவைத் திறந்து படியிறங்கிச் செல்வதை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். அப்போது மீரான் கைக்கடிகாரத்தை உற்று நோக்கி பார்த்தபடியிருந்தான். ஐந்தே நிமிடங்களுக்கு முன் வினய் எப்போதும் போல இருந்ததை நான் கவனித்துக்கொண்டுதான் இருந்தேன். வினய் சென்ற முதல் நாள், மீரான் அறையிலிருந்து எங்கோ வெளியில் சென்றிருந்தான். அவன் எப்போது வருவான், எங்கே செல்கிறான் என்பதே தெரியாது. வாரத்தின் சில நாட்களில் அவனைப் பார்க்கவே முடியாது. சில முறை சீக்கிரமாகவே அறைக்கு திரும்பிவிடுவான். சில நாள் வார இறுதியில் அறைக்கு வந்ததே கிடையாது. அவன் அறையிலிருந்த நாட்களில் நானாக பேச்சு எடுத்தாலொழிய அவனாக பேசியது கிடையாது. அப்படி பேசிய சில நேரங்களில் அவனைப் பற்றிய தகவல்களை இப்படி மறைக்காமல் சொல்லிவிடுவான். அவன் யதார்த்தமாக பொய் சொல்பவன் என்பதே எனக்கு தோன்றுகின்ற கருத்தாக இருக்கிறது. விடுதியின் காப்பாளர், மீரான் தான் அதிகாலையில் வருவான் என்பதை என்னிடம் தெரிவிக்க சொல்லியிருந்ததை சொன்னார். அடுத்த நாள் என்பது ஞாயிற்றுக்கிழமை. காலை ஆறு மணி. கதவு இரண்டு தட்டு விட்டு அடுத்த தட்டுக்கு சிறு இடைவெளியிட்டபடி அதிர்ந்துகொண்டிருந்தது. தூக்கமயக்கத்தோடு எழுந்தபடி தாழினை விலக்கித் திறந்தேன். மீரானோடு இன்னொருவன் நின்றுகொண்டிருந்தான். "இது நம்ம ஃபிரெண்டு, ஆற்காட்டுல இருக்கான். ஒரு வேலையா இங்க வந்துருக்கான் குளிச்சிட்டு கெளம்பிருவான்" என்று மீரான் சொன்னான். நான் லுங்கியை ஏற்றிக்கட்டியபடி அவனிடம் கைகொடுத்து அறிமுகம் செய்துகொண்டேன். அவன் ஆள் நெடிய உருவம். கை விரல்கள் பத்தும் இருபதுக்கு சமம் எனலாம். அடித்தால் மண்டை சுழலும். கைலி அணிந்திருந்தான். சட்டையின் இரண்டாவது பட்டன் தையலகன்று அங்கு ஒரு ஊக்கு போடப்பட்டிருந்தது. தலை மயிர் கம்மியாகவும், மீசை உதடு விளிம்புக்கு மேல் வரை மட்டும் விட்டு குறைத்தபடி சிரிக்காத முகத்தோடு வந்த வேலையை உடனே முடிப்பவன் போல கழிவறைக்குள் புகுந்துகொண்டான். நான் மீண்டும் என்னுடைய ஆழ்ந்த தூக்கத்துக்கு திரும்பியிருந்தேன். வெப்பம். படுக்கை ஒரு அடுப்பாக மாறியிருந்தது. மின்விசிறி "கெரக்கா, கெரக்கா" என்று சுழலும் சத்தம் மட்டுமே கேட்டது. அறை முழுவதும் இருள் பட்டை பட்டையாக நிரம்பியிருந்தது. மாலை மணி ஆறு இருக்கலாம். அப்போது தான் உறைத்தது. வழக்கத்திற்கும் மாறாக தூங்கிவிட்டேனோ! என்று. மீரானும், அவனுடைய நண்பனும் வெகு நேரம் முன்பே சென்றிருக்க வேண்டும். அந்த நினைப்போடு, புட்டத்தை நெருடிக்கொண்டே மெல்ல எழுந்து விளக்கின் பொத்தானைத் தேடிக்கொண்டிருந்தேன். வியர்வை நெடியால் உடல் வீச்சமடித்துக்கொண்டிருந்தது. பின்முதுகிலிருந்து பாய்ந்த வியர்வை நீர் முதுகுப் பள்ளத்தில் இறங்கிய சில்லென்ற உணர்வோடு விளக்குப் பொத்தானை அழுத்தினேன். கண்களைத் திறக்க முடியாதபடி வெளிச்சம் இருட்டைக் கொன்று அறையெங்கும் படர்ந்தது. வினய் பயன்படுத்தும் படுக்கையின் அருகாமையிலிருந்த நீர்க் குவளையிலிருக்கும் தண்ணீரை எடுத்துப் பகிர எழுந்து நின்றேன். ஒரு பருத்த வஸ்து என் கைகளை அரித்தது. அதன் இடுக்குகளில் வியர்வை நுழைந்து இறங்கியதால் அரிப்பு சுவாதீனமாக அதிகரித்தது. அப்போதுதான் மீரானுடைய கைக்கடிகாரம் என்னுடைய கைகளில் கட்டப்பட்டிருந்ததை உணர்ந்தேன். (இது அவனுடைய கையில் அல்லவா இருக்க வேண்டியது?) நான்கு மடக்கு நீரை வேகவேகமாக அருந்திவிட்டு உடை மாற்றிக்கொண்டு மீரானைப் பார்ப்பதற்காக ஓடினேன். மக்கான பேட்டை துணிச்சந்தை போடும் இடத்தில் ஒரு நீண்ட வழி இருக்கிறது. அது நேராக பிரதான சாலையில் கொண்டு போய் முடியும். மெல்லிருட்டில் வேகமாக நடந்துகொண்டிருந்தேன். இதயம் வேகமாக கனைத்தது. ஒவ்வொரு இடமாக தேடினேன். மீரானைப் போல சிலரை சந்திக்கவும் செய்தேன். ஆனால், மீரான் இருக்குமிடத்தை பார்க்க முடியவில்லை. எதேச்சையாக துணிச்சந்தை சந்தின் ஒதுக்குப்புறமான இடத்தில் மீரானின் பின்னந்தலையைப் பார்த்தேன். ஒரு பெண்ணின் தொடைகளுக்கு இடையில் தன்னுடைய இடக்கை நகர்ந்தபடியும், வலக்கை அவளது மார்பகத்தைப் பிடித்தபடியும் மீரான் அவளின் மேற்புறமேனியில் ஊர்ந்துகொண்டிருந்தான். நான், அவன் செய்துகொண்டிருக்கும் எதையுமே கண்டுகொள்ளாமல், "மீரான், இங்க பாருப்பா.... இதைக் கொஞ்சம் எடுத்துக்குறியா?... இது உன்னோட வாட்சு தானே. என் கையில மாட்டியிருந்தது.. இதை வாங்கிக்கோ" என்று சொன்னேன். என்னுடைய குரல் ஒலித்த நேரத்தில் பின்னால் திரும்பிப் பார்த்தவனை, அவள், சட்டைக் காலரைப் பிடித்து தன் பக்கமாக இழுத்தாள். மீரான் அவளிடம் திரும்ப மறுத்தான். "மீரான், இது ரொம்ப நேரமா என்கிட்டயே இருக்கு, இதைக் கொஞ்சம் வாங்க்கிக்கிறியா?" அந்தப் பெண்ணைத் தள்ளி உதறிவிட்டபடி, மீரான் தன்னுடைய குறியை சரியாக கால்சராய்க்குள் விட்டுக்கொள்ளாமல் சந்தின் இருட்டில் ஓட ஆரம்பித்தான். "மீரான், ஓடாதே!! நில்லு. எங்க போற" என்று கத்திக்கொண்டே அவனைத் தொடர்ந்து ஓடினேன் . எனக்கு பின்னால், அந்தப் பெண் என்னைத் துரத்தியபடி ஓடி வந்து கொண்டிருந்தாள். பின்பக்கம் திரும்பி நான் அதைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே நீண்ட சந்தின் இடையில் ஒரு இடத்தில் ஒளிந்துகொண்டிருந்த மீரானின் நண்பன், இன்று காலையில் அறைக்கு வந்தவன் தான், அந்த பெண்ணை மறித்துப் பிடித்து ஒரு விலங்கைப் போல புணர ஆரம்பித்தான். அவள் அடித்தொண்டையிலிருந்து ஒரு விநோதமான ஒலியை எழுப்ப ஆரம்பித்தாள். அது காயடி வாங்கிய நாயின் குரல் போல ஒலித்தது. இதைக் கவனித்துவிட்டு மீரானைத் தொடர்ந்து ஓடியபோது அவன் சந்தின் எல்லைக்கே சென்றிருந்தான். "ஓடாதே!! கொஞ்சம் நில்லு. இதை கொஞ்சம் வாங்கிக்கோ!" என்று அவனை ஒரே ஓட்டமாக நெருங்கியதும், சரியாக அவன் சாலையில் கால் வைத்து வேகமாக இடையில் நுழைந்த சரக்கு வாகனமொன்றை கவனிக்காமல் கனமாக மோதி மூக்கு, கண் சிதைந்து உடல் தூக்கி வீசப்படுவதற்கும் இடையே இரண்டு நொடிகள் மிச்சமிருந்தது. மீரானின் உடலிலிருந்து ரத்தம் பேனாவிலிருந்து தெறிக்கும் மையைப் போல என் மீது குறுக்கு வெட்டாகப் பாய்ந்தது. உடல், வண்டியின் மீது அடிபடும் தொலைவுக்கு மிக அருகில் இருந்தபோது மீரானின் கண்கள் சிதைவதற்கு முன்னால் சுழன்று உருண்டுகொண்டே என்னைப் பார்த்தது. அது கைக் கடிகாரத்தை வாங்க மறுத்ததன் அடையாளமாகவும், வினயின் கைகளில் அவனுக்குத் தெரியாமல் கட்டிவிடும்படி சொன்னதாகவும் இருந்தது. நான் அப்போது பின்பக்கமாக திரும்பி மீரானின் நண்பனை நோக்கி ஓடிக்கொண்டிருந்தேன். சட்டையிலிருந்த மீரானின் இரத்தக் கறையையும், கடிகாரத்தையும், என்னையும் பார்த்தவன் தப்பிக்க ஆரம்பித்தான்.

Comments

Popular posts from this blog