Skip to main content

எதையாவது சொல்லட்டுமா....92



அழகியசிங்கர்


    2004ஆம் ஆண்டு என் பெண்ணிற்கு திருமணம் செய்தபோது ஆறு லட்சத்தில் கல்யாணச் செலவு முடிந்துவிட்டது.  பெரிய கடன் எதிலும் மாட்டிக்கொள்ளவில்லை.  அதே திருமணத்தை அதே மாதிரி இப்போது நடத்தினால் முப்பது லட்சம் ஓடிவிடும்.  பெரிய கடனாளியாக மாறி இருப்பேன்.  இன்றைய கல்யாணத்தில் சத்திரம் பல மாதங்களுக்கு முன்பே முன் பதிவு செய்ய வேண்டி உள்ளது.  ஒரு கல்யாணம் நடத்த பல மாதங்கள் பொறுத்துக் கொள்ள வேண்டியுள்ளது.  மணப்பெண்ணும் பையனும் வெளிநாட்டில் இருந்தால் ஆண்டுக் கணக்கில் காத்துக்கொண்டிருக்க வேண்டும். 

    எனக்குத் தெரிந்து கல்யாணத்தை சிக்கனமாக நடத்த வேண்டுமென்று தீர்மானித்து நடத்திய சிலரைத் தெரியும்.  என் அலுவலக நண்பர் ஒருவர், ஒரு பெண்ணுடன் நடந்து வந்து கொண்டிருந்தார்.    நான் அவரையும் அந்தப் பெண்ணையும் பார்த்தேன்.  üüஎன்ன பார்க்கிறீங்க? இவள் என் மனைவி,ýý என்றார்.

            "எப்போது திருமணம் செய்து கொண்டீர்கள்?"என்று கேட்டேன்.

    "நாங்கள் பதிவுத் திருமணம் செய்து கொண்டுவிட்டோம்.  பின் எல்லோருக்கும் தகவல் தெரிவித்து விட்டோம்.  அதற்கு ஆகும் செலவையெல்லாம் வங்கிக் கணக்கில் போட்டு டெபாசிட்டாக மாற்றி விட்டோம்," என்றார்.

    இன்னொரு இலக்கிய நண்பர், ஒரு நாடகத்தை அரங்கேற்றி, அங்கிருந்தவர்களுக்கு, üüஇனி நானும் இந்தப் பெண்ணும் சேர்ந்து வாழப்போகிறோம்,ýý என்று கூறி முடித்துவிட்டார்.  ஜாதி சடஙகுகளில் ஆத்திரம் கொண்ட ஒரு நண்பர், ராகு காலத்தில் தாலி கட்டினார்.

    பின் கல்யாணத்திற்கு கூப்பிடுவது.  என் நெருங்கிய நண்பர் மேற்கு மாம்பலத்திலேயே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார்.  அவர் என்னைக் கூப்பிடவில்லை.  எனக்கே அவர் பெண்ணிற்கு திருமணம் செய்கிறார் என்பதே வேறு ஒரு நண்பர் மூலம்தான் தெரியும்.

    என் விஷயத்திலும் இப்படி தவறு நடந்திருக்கிறது.  என் பெண் திருமணத்திற்குக் கூப்பிட்ட பலரை என் பையன் கல்யாணத்திற்குக் கூப்பிடவில்லை.  

    என் உறவினர் ஒருவர், யாராவது வெறுமனே கல்யாணப் பத்திரிகை அனுப்பினால் போக மாட்டார். திருமணம் நடத்துபவர், உறவினரை போன் மூலமாகவோ நேரிலோ கூப்பிட வேண்டும்.  

    நான் அப்படி ஒரு நிலைப்பாடை எடுத்துக்கொள்வதில்லை.  யாராவது பத்திரிகை அனுப்பினால் அதுவே மரியாதைத் தரக்கூடிய ஒன்றாகக் கருதுவேன்.  போக முடியும் திருமணத்திற்கு நிச்சயமாகப் போவேன்.  கல்யாணம் என்பது மட்டுமல்ல, எந்தக் கூட்டத்திற்கும் அப்படித்தான்.  

    இன்று கூட்டம் நடத்துவது என்பதே பெரிய விஷயமாகத் தோன்றுகிறது.  சில ஆண்டுகளுக்கு முன் ரூ75க்கு நான் ஒரு இலக்கியக் கூட்டத்தை நடத்தி விடுவேன்.  ஐம்பது ரூபாய்க்கு ஒரு இடத்தை ஏற்பாடு செய்வேன்.  பின் இருபத்தைந்து ரூபாய்க்கு கார்டில் எல்லோரையும் கூப்பிடுவேன்.  இன்று அது மாதிரி கூட்டத்திற்கு ஐந்நூறு வரை செலவாகும்.  பின் ஒரு கூட்டத்திற்கு வருவது என்பது அவ்வளவு எளிதானதல்ல.  

    கல்யாணமாக இருந்தாலும் சரி, எந்தக் கூட்டமாக இருந்தாலும் சரி எல்லாம் எந்தத் தகராறும் இல்லாமல் நடக்க வேண்டும்.  அப்படி அமைந்தால் நல்லது.  அப்படி நடக்காவிட்டால் அந்தக்கூட்டம் சரியாக நடக்க முடியாமல் போய்விட்டதே என்ற வருத்தம் ஏற்பட்டுக்கொண்டிருக்கும்.  சண்டையோடு முடிந்த பல கல்யாணங்களைப் பார்த்திருக்கிறேன்.  

    கல்யாணக் கூடங்களில் சண்டை நடந்து நான் பார்த்திருக்கிறேன்.  ஜானவாசக் காரில் போதிய அளவிற்குப் பூ வைக்கவில்லை என்று மாப்பிள்ளை வீட்டார் நடத்திய சண்டையை நான் பார்த்திருக்கிறேன்.

    ஒரு கல்யாணத்திற்கு எங்கள் குடும்பம் முழுவதும் சுவாமி மலைக்குச் சென்றோம்.  பையன் வீட்டுக் கல்யாணம்.  பெண்ணின் தந்தை கோபக்காரர்.  எல்லாம் திட்டமிட்டபடி நடக்க வேண்டும் என்று நினைப்பவர்.  அந்தக் கல்யாணத்தின் மூன்றாவது நாளன்று சத்திரத்தை விட்டுக் கிளம்பும்போது, டிபனுக்குப் பதில் சாப்பாடு போடலாம் என்று பையன் வீட்டு உறவினர் ஒருவர் கூற, அவரைக் கண்டபடி திட்ட ஆரம்பித்துவிட்டார் பெண்ணின் அப்பா.  அதேபோல் பையன் வீட்டு உறவினர் இன்னொருவர் அவரிடம் மாட்டிக் கொண்டார்.அவர் எல்லோரையும் திரும்பவும் சென்னைக்கு அழைத்துப் போக ஒரு வண்டியை ஏற்பாடு செய்திருந்தார். அந்த வண்டி தஞ்சாவூரிலிருந்து வரும்போது பஞ்சர் ஆகிவிட்டது.  தேவையில்லாத தாமதம்.  குறிப்பிட்ட நேரத்தில் கிளம்ப முடியவில்லை. பெண்ணின் திட்டு திட்டென்று திட்ட ஆரம்பித்துவிட்டார்.  பையன் வீட்டாரும் சும்மா விடவில்லை. ஒரு நல்ல நிகழ்ச்சி, இப்படி ஒன்றுமில்லாத விஷயத்தில் சண்டையில் போய் நின்றது.  அந்தத் திருமணத்திற்குச் சென்று விட்டு, தப்பித்தால் போதும் என்ற கதியில் நாங்கள் வீடு வந்து சேர்ந்தோம்.

    ஒரு நிகழ்ச்சி என்றால், அதைக் குலைப்பதும் நிகழ்ச்சியில் முக்கியப் பங்கு வகிப்பதாக நினைக்கிறேன். ஒரு கிரிக்கெட் போட்டிக்காக எல்லோரும் காத்துக்கொண்டிருப்பார்கள்.  அதை மழை வந்து குலைத்துவிடும.

    ஒருமுறை எங்கள் அலுவலகத்தில் தங்கக் காசுகள் விற்கும் விழா ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார்கள்.  வங்கிக் கிளையே பரபரப்பாக இருந்தது.  பெரிய அதிகாரிகள் வர இருப்பதால் அவர்களுடைய கவனத்தைக் கவர்வதற்காக வங்கிக் கிளையின் தோற்றத்தில் பல மாற்றங்களைச் செய்து கொண்டிருந்தோம்.  அன்று காலையில் ஒரு வாடிக்கையாளர் வந்திருந்தார்.  அவரை உள்ளே அழைத்துப் போய் லாக்கரைத் திறக்க ஏற்பாடு செய்திருந்தேன்.  அந்தச் சமயத்தில் மின்சாரம் நின்று போய்விட்டது.  அந்த வாடிக்கையாளர் இருட்டில் போய்க் கொண்டிருக்கும்போது, லாக்கரைத் திறக்க உதவும் இரும்புப் படிக்கட்டின் முனை நெற்றியில் பட்டு ஒரே ரத்தம்.  விழா சிறிது நேரத்தில் துவங்குவதற்கு முன் இப்படி நடந்து விட்டது.  அன்று எதிர் பார்த்தபடி விழாவும் சிறப்பாக நடைபெறவில்லை.  சிறப்பாக நடைபெற வேண்டிய ஒரு நிகழ்ச்சியைக் குலைப்பதற்கான இன்னொரு நிகழ்ச்சி அரங்கேறி விட்டது.  

    இதுமாதிரியான சம்பவங்கள் அரசியல் கூட்டங்களில் அதிகமாக நடைபெறும்.  சோ பேசும் கூட்டம் ஒன்று தி நகரில் ஏற்பாடாகி இருந்தது. 
அந்தக் கூட்டத்தின் முடிவில் பெரிய சலசலப்பு.  ஏனென்றால் மாடுகள் கூட்டத்தில் புகுந்து ரகளை ஆகிவிட்டது.  கூட்டத்தில்ü கலந்துகொண்ட நான் எப்படி கூட்டத்தில் நசுங்காமல் தப்பிப்பது என்ற தோன்றிவிட்டது.கூட்டத்தைக் குலைக்கும் நிகழ்ச்சிக்கும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்பதை நான் அப்போது புரிந்துகொள்ளவில்லை.

    க.நா.சு இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டுமென்று விருப்பப் படுவார்.  ஆனால் அவர் இருந்தபோது அதுமாதிரியான கூட்டம் நடத்தமுடியாமல் இருந்தது.  காரணம் கூட்டம் நடத்தும் அனுபவம் இல்லை.
 
    நான் கிட்டத்தட்ட நாற்பது ஐம்பது இலக்கியக் கூட்டங்கள் நடத்தியிருப்பேன்.  எனக்கு இலக்கியக் கூட்டம் நடத்த காரணமாக இருந்தவர் காயின் என்கிற பெயரில் பாத்திரங்களைத் துலக்கும் பவுடரை நடத்திக்கொண்டு வந்தவர்.  அவர் விளம்பரத்திற்காக என்னை மாதம் ஒரு இலக்கியக் கூட்டம் நடத்தும்படி தூண்டினார்.  ஆனால் மூன்று கூட்டங்களுக்குப் பிறகு அவர் கூட்டத்திற்கு ஆகும் செலவைப் பகிர்ந்துகொள்ளவில்லை.  நான்தான் ரூ75 செலவில் கூட்டத்தை நடத்த ஆரம்பித்தேன்.  வந்து பேசுபவர்களுக்கு பயணச் செலவு கூட நான் தந்ததில்லை.    ஆனால் எல்லோரும் சொன்னவுடன் வந்தார்கள்.  சிலசமயம் ஓட்டலில் டீ காப்பி வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.அந்தத் தருணத்தில் இலக்கியக் கூட்டத்திற்கு ஒரு தேவை இருந்தது.  இன்னும்கூட ஞாபகம் இருக்கிறது.  வல்லிக்கண்ணன் பேசும்போது மூச்சு விடாமல் அவர் படித்த அத்தனை நாவல்களைபற்றி முன்கதைச் சுருக்கம் போல் பேசிக்கொண்டே போனார். சிட்டி, காசியபன். ந. முத்துசாமி, சுஜாதா என்று பலர் பேசியிருக்கிறார்கள்.  கூட்டத்திற்கு வருபவர்கள் கிட்டத்தட்ட 35 அல்லது 40 பேர்கள்தான் இருப்பார்கள். கூட்டத்திற்கு பெரும்பாலும் இளைஞர்கள் வர மாட்டார்கள்.  பெண்கள் வரவே மாட்டார்கள்.  எல்லாம் நடுத்தர வயதுக்காரர்கள் அல்லது வயதானவர்கள்தான்.திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில் பக்கத்தில் உள்ள லேடீஸ் ஹாஸ்டல் மாடி அறையில்தான் கூட்டம் நடக்கும்.  அதேபோல் சில படைப்பாளிகளின் இரங்கல் கூட்டங்களையும் நடத்தியிருக்கிறேன்.  கரிச்சான் குஞ்சு, ஷண்முக சுப்பையா. சி சு செல்லப்பா என்று.  

    பிரமிளை வைத்து ஒரு கூட்டம் நடத்த வேண்டுமென்று நினைத்தேன்.  அவரை கூட்டத்திற்கும் அழைத்தேன்.   கூட்டத்திற்கு வரவும் இல்லை.  பேசவும் வரவில்லை.  ஆனால் எனக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார்.  üநீங்கள் இப்படி கூட்டம் நடத்துவது ஆபத்தானது,ýஎன்று.  ஏன் அவர் அப்படி எழுதினார் என்று எனக்கு இன்னும்கூட புரியவில்லை.  எந்தக் கூட்டத்தையும் குலைக்கும் நிகழ்ச்சியை அவர் புரிந்துகொண்டு அப்படி சொல்லியிருக்கலாம்.

    இப்போதெல்லாம் கூட்டம் நடத்தினாலும் கூட்டத்திற்கு வருபவர்கள் போக்குவரத்தால் பாதிக்கப்படுகிறார்கள். கூட்டத்தைக் குலைக்கும் சதியாக போக்குவரத்தும் மாறிவிட்டது. 
   
    (APPEARED IN AMIRTHA MAGAZINE JANUARY 2014 ISSUE)





   

Comments