Skip to main content

புத்தக விமர்சனம் 1

அழகியசிங்கர்  
 
 
 
 சமீபத்தில் நான் படித்தப் புத்தகம் ஆர் வெங்கடேஷ் எழுதிய இடைவெளி என்ற நாவல்.  நாவலின் மொத்தப் பக்கங்கள் 152தான்.  இன்றைய மெகா நாவல் காலத்தில் ஆர் வெங்கடேஷ் 152 பக்கங்கள் அடங்கும்படி ஒரு நாவல் எழுதி முடித்துவிட்டார். இதைப் பாராட்ட வேண்டும்.  152 பக்கங்களுக்குள் 3 குடும்பத்தின் கதையைக் கொண்டு வந்துள்ளார்.  மாற்றி மாற்றி ஒவ்வொரு குடும்பத்தைப் பற்றி சொல்லுவதே இந் நாவலில் முக்கிய இழையாகப் படுகிறது. 

    வாழ்க்கையில் ஒவ்வொருவரும் எதிர்கொள்ளும் பிரச்சினைகளில், நல்ல சம்பளத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது எதிர்பாராதவிதமாய் வேலையை விட்டு நீக்கி விடுவதுகூட பெரிய பிரச்சினையாகிவிடும்.  அதை எப்படி எதிர்கொள்வது.

    நாட்டின் பொருளாதார வளர்ச்சி குறைந்து போகும்போது, அதன் விளைவாக பலர் துன்பத்தில் ஆளாக நேரிடும்.  வேலையைத் தொலைத்துவிட்டு நிற்கு மூன்று நபர்கள் சம்பந்தப்பட்ட நாவல் இது.  ரஞ்சன், ஆர்த்தி, கல்யாண் மூவருக்கும் எதிர்பாராதவிதமாய் வேலை போய்விட அதை எப்படி எதிர்கொள்கிறார்கள்.

    உண்மையில் அவர்களால் எதிர்கொள்ள முடீயவில்லை.  துவண்டு போய்விடுகிறார்கள்.  கல்யாண் தற்கொலையே செய்து கொண்டு விடுகிறான். 

    இது புத்தகமாக வெளிவந்து படிக்க நேரிட்டாலும், இதைத் தொடர்கதையாகப் படிப்பது ரொம்ப நல்லது. இப்போதெல்லாம் தொடர் கதைகள் மரபு பத்திரிகைகளில் இருப்பதில்லை.  முன்பெல்லாம் போட்டி போட்டுக்கொண்டு பத்திரிகைகளில் தொடர்கதைகள் வெளிவரும்.  இந்த இடத்தை டிவி சீரியல் பிடித்துக்கொண்டு விட்டது.

    பத்திரிகைகள் தொடர்கதைகளை வெளியிட்டால், இன்னும் பலர் எழுத வாய்ப்பு கிட்டும்.  டிவி சீரியல் அப்படி அல்ல.  நாவலில் மூன்று குடும்பங்கள் மூன்றுவிதமானவை.  மாற்றி மாற்றி மூன்று பேர்களை மையமாக வைத்து கதையை ஆர் வெங்கடேஷ் திறமையாக நடத்திச் செல்கிறார். 

    இப்புத்தகத்தைப் பற்றி இன்னும் யோசிக்கும்போது இது துன்பத்தை வெளிப்படுத்தும் புத்தகம் என்று குறிப்பிடலாமாவென்று  தோன்றுகிறது.
    வாழ்க்கையில் எதாவது ஒரு வேலைக்குச் சென்று பணம் சம்பாதிப்பது என்ற குறிக்கோளுடன் பலர் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.    மிகச் சாதாரண வேலையைப் பார்த்துக்கொண்டு மகிழ்ச்சியுடன் காலம் தள்ளுபவர்களை நான் பார்த்திருக்கிறேன். 

    ஆனால் அவர்கள் வாழ்க்கையில் எதாவது ஒரு பிரச்சினை என்று வந்துவிட்டால், அவர்களால் சமாளிக்க முடியாது.  தாக்கு பிடிக்க முடியாது. 

    இடைவெளி நாவலில் அதிகமான வலியை ஏற்படுத்தியவன் கல்யாண் என்ற கதா பாத்திரம்தான்.  வேலை என்ற ஆதாரத்தில் வாழ்த்து வரும் கல்யாண், தொடர்ந்து பல தோல்விகளைச் சந்திக்கிறான்.  அவமானப் படுகிறான்.  ஒரு எல்லைக்கு மேல் அவனால் தாக்குப் பிடிக்க முடியவில்லை.  தற்கொலைதான் ஒரே வழி என்ற நிலைக்குத் தள்ளப்பட்டு தற்கொலையும் செய்து கொண்டு விடுகிறான்.

    கல்யாண் மாதிரி மற்ற இருவரும் பல துன்பங்களைச் சந்திக்கிறார்கள்.  அளவுக்கு அதிகமான சிந்தனை, தேவையில்லாத பிரச்சினைகளையும் ஏற்படுத்தி விடும்.  பக்கம் 80ல்...

    üüஒரு சாலை திருப்பத்தில், மணல் கொட்டியிருப்பது தெரியாமல் திருப்ப, வண்டி சரிந்து விழுந்தது..சில நொடிகள்தான்.  சாலையில் தான் விழுந்துகிடப்பதும், பெரிதாக அடியெங்கும் படிவில்லை என்பதும், ஏதோ யோசித்துக்கொண்டே ஓட்டியது தவறு என்றும் வரிசையாக காரணங்கள்..
 
    ஆர்த்திக்கு ஏற்படுகிற ஒரு நிகழ்ச்சியை நாவல் இப்படி விவரிக்கிறது.  வேலை போய்விட்ட பிறகு அதிகமான சிந்தனை பிரச்சினையை ஏற்படுத்துகிறது.  சாதாரணமாக எதையும் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

     வெங்கடேஷ் நாவலில் சில இடங்களில் உணர்வுகளின் மிகை உணர்ச்சி தென் படுகிறது.  டிவி சீரியலில் கதா பாத்திரங்கள் ஒருவரை ஒருவர் உரையாடும்போது சாதாரணமாகப் பேசுவதில்லை. 

    வாக்கியங்களை எழுதும்போது, வாசகர்களை பெரிதும் வெங்கடேஷ் குழப்புவதில்லை.  சின்ன சின்ன வார்த்தைகளை வைத்து வரிகளை அமைக்கிறார்.  படிப்பவர்களைத் தூண்டும் விதமாக.  அவருடைய இரண்டாவது நாவல். இது  தொடர்ந்து அவர் எழுத வாழ்த்துகள்.

இடைவெளி - நாவல் - ஆர் வெங்கடேஷ் - பக். 152 - விலை ரு.100
தொடர்புக்கு : வேத பிரகாசனம், 142 முதல் மாடி, கீரின்வேஸ் சாலை.
ராஜ அண்ணாமலைபுரம், சென்னை 600 028





   

Comments

படிக்கத்தூண்டும் அருமையான
அளவான விமர்சனம்
இந்த மாதப் பட்டியலில் இந்த நூலைச் சேர்த்துள்ளேன்
பகிர்வுக்கு வாழ்த்துக்கள்