Skip to main content

திருட்டு




                
        அழகியசிங்கர்

                
        அலுவலக வளாகத்தில்
        வைத்திருந்த யமஹா
        வண்டி திருட்டுப்போயிற்று.
        திருட்டுக்கொடுத்த சுவடே
        தெரியாமல் இருந்தது இடம்

        விரைப்பாய் காவலர்
        விரைத்தபடி தூங்கிக்கொண்டிருந்தனர்
        எடுத்துச் சென்றவன் சிரித்தபடியே
        போயிருப்பான்

        வண்டி வைத்திருந்தவரை
        காண்டினில் சந்தித்தேன்
        முகத்தில் உற்சாகத்துடன்
        உலா வந்திருந்தார்

        'வேண்டும் மென் தகடுகள்'
        என்றேன்
        எடுத்து வருவதாகச் சொன்னவர்
        முகத்தில்
        அதிகப்படியான சந்தோஷம்

        பின்
        தெரிந்தது
        அவர் வண்டி லபக்கென்று
        போயிற்று
       
        ஏனோ -
        அன்று
        வளாகம் முழுவதும்
        கூட்டமாய் வண்டிகள்
        ஒதுக்குப்புறமாய் வண்டியை
        வைத்திருந்தேன் நானும்

        திருட்டுப் போனதை அறிந்து
        என் வண்டி இருக்கிறதா என்று
        பார்த்தேன் பார்த்தேன்
        பார்த்துக்கொண்டே இருந்தேன்
        வண்டிகள் பலவற்றில்
        என் வண்டியும் இருந்தது
        எப்போதும் அவர் யமஹாவில்
        ஒயிலாக தென்படுவார்ட
        புது வண்டி தோரணையும் சேர்ந்து

        முகத்தில்
        நகைப்பு மறைய
        எதிரில்
        அலுவலக பாதுகாவலர்களுடன் வந்தார்
        அங்குமிங்கும்
        தேடி
        உதட்டைச் சுழித்து
        களைத்துப் போனார்

        மென்தகடுகள் விற்கும் வியாபாரி
        என்றதால்
        'இனி வெளி ஆட்கள்
        வண்டிகள் வரக்கூடாது வளாகத்திற்குள்'
        என்று உத்தரவிட்டது
        அலுவலகக் கட்டிடம்
        இரக்கமின்றி

        பரபரப்பில்லாமல்
        வெறும் செய்தியாய்ப்
        போயிற்று திருட்டு..
       

Comments

அருமை... அந்தளவு பரபர...!