Skip to main content

அம்மா......



சின்னப்பயல் 


காரணப்பெயர்


எழுதிவைத்த
கவிதைக்குக்கீழ்
போட்டுக்கொண்ட
பெயர் தான்
முதலில் எழுதியது
பின்னர் மேலே மேலே
எழுதியது தான்
இப்போது நீங்கள்
வாசிப்பது.


ஒளிரும்பெயர்


உன் பெயரைத்தேடியெடுத்து
எப்படி ஒளிரவைக்கிறாய்
என் செல்பேசியில் ?!


அதுமட்டுமே


உனைக்காட்டிலும்
எனக்கு இரண்டுவயது
கூடுதல்
அதுமட்டுமே


அம்மா


காய்கறி சாப்பிடவில்லையென்றால்
ஒரு கை மட்டுமே வளரும்
இன்னொரு கை குட்டையாகவே இருந்துவிடும்
பழத்தோடு கொட்டையை சேர்த்துச்சாப்பிட்டால்
வயிற்றில் மரம் முளைத்துவிடும்
இப்படியெல்லாம்
எனக்கு விளையாட்டுக்காட்டி
செல்லமாக பயமுறுத்திய
என் அம்மா இப்போது
உறங்கிக்கொண்டிருக்கிறாள்
எத்தனை கூப்பிட்டும் எழவில்லை
என் சின்னக்கைகள் கொண்டு
அசைத்தும் பார்த்துவிட்டேன்.
எழவேயில்லை.
இதற்கும் ஏதாவது ஒரு காரணம் சொல்லி
என்னை மகிழ்விப்பாள்
காத்திருக்கிறேன்
காலம் கடந்து கொண்டிருக்கிறது
அவளின் கைகள்
ஏன் குளிர்ந்துபோய்விட்டன
என்று மட்டும் தெரியவில்லை.


உடல்மொழி


ஏற்றுக்கொள்ளாமலும்
வெறுக்காமலும் இருக்க நினைக்கிறாய்
இருப்பினும் நட்பில் தொடர விருப்பமெனில்
எனக்கும் ஒரு வாய்ப்பிருக்கிறது
என்ற உன் உடல்மொழியால் ஏன்
என்னைத்தொடர்ந்தும் நிந்திக்கிறாய் ?


வாசல்


வாய்ப்புகள்
கதவில்லாத வாசல் வந்து
நிற்கும்போதும் கூட
வரவேற்கத்தெரியாமல்
நின்றிருக்கிறேன்.

Comments

அனைத்தும் அருமை...

அம்மா - ஏதேதோ சிந்திக்க வைக்கிறது...!