Skip to main content

பிரியத்தின் யதார்த்தமும் எதிர்பார்ப்பும்


 தேனு


மழைச்சாரல் துவங்கிய நாளொன்றில்
நெஞ்சோடு அணைத்து வந்திருந்தாள் யாழினி,
பெயரும் சூட்டியாகிவிட்டதென
இறுமாப்பாய் சிரித்து
இதழ் குவித்து கலைநேசன் என்றாள்.
அன்றிலிருந்து வீட்டில் ஒருவனாய்
வளரத் துவங்கினான்,
முகத்தோடு முகம் வைத்து
புரிதலாய் அவள் மொழியில்
கொஞ்சிக் கொண்டே இருப்பாள்,
உணவு வேளைகளில் எல்லாம்
அவனுக்கும் வைத்துத்
தானும் அருகமர்ந்து உட்கொள்வாள்.
அவன் குளிப்பதற்காகத் தனியாய்
ஒரு தொட்டி வாங்கி
தினம் இரு மணி நேரம் குளிக்க வைத்துச்
சிரிக்க யாழினிக்கு மட்டுமே வந்தது..
இணை பிரியா தோழர்களாகிப்
போயினர் இருவரும்..
கட்டிக் கொண்டே தூங்குவதும்
அவர்கட்கு வழக்கமாகிப் போனது..
இயந்திரமாய் கல்வி ஏற்றும்
பன்னிரெண்டாம் வகுப்பும் வந்தது,
பிரியா விடை கொடுத்து
அழுதழுது அவனுக்கு முத்தம் முத்தமாய் கொடுத்து
விடுதிக்குச் சென்று விட்டாள் யாழினி..
இரு நாட்களாய் இம்மியும் நகராமல்
வாசலையே பார்த்துக் கொண்டிருக்கிறான்
கலைநேசன்..


Comments