நிழற்படங்கள் எம் . ரிஷான் ஷெரீப் நான் அப்படிக் கேட்டிருக்கக் கூடாதுதான் . மிகவும் சோகத்துக்குள்ளான அந்த நண்பரது கண்கள் எனது கண்களை நேரே பார்த்தன . பின்னர் தாழ்ந்துகொண்டன . அறையிலிருந்த என் கணவர் ' என்னடா இது ?' என்பது போல முறைப்புமில்லாமல் அதிகளவான திகைப்புமில்லாமல் கேள்வியோடு என்னைப் பார்த்தார் . ' பொண்ணு வீட்டுக்கும் இந்த போட்டோவைத்தான் கொடுத்தீங்களா ?' என்ற எனது கேள்வி , இயங்கிக்கொண்டிருந்த குளிரூட்டியின் சத்தத்தோடு யன்னல்களேதுமற்ற அந்த அறையின் எல்லாப்பக்கங்களிலும் பதில்களற்று உலாவருமென எனக்கு எப்படித்தெரியும் ? நான் விளையாட்டாகத்தான் அதைக் கேட்டேன் . சில நிகழ்வுகளையொட்டிக் கேள்விகள் தானாக உதித்துவிடுகின்றன . எல்லாக் கேள்விகளுக்கும் எல்லோரிடமும் பதில்கள் இருப்பதில்லை . சொல்ல வேண்டிய பதில்களைக் காலம் கொண்டிருக்கும் . அதன் வாய்க்குள் புகுந்து விடைகளை அள்ளிவர எல்லோராலும் இயல்வதில்லை . அவ்வாறு இயலாமல் போனவர்கள் மௌனம் காக்கிறார்கள் . இல்லாவிடில் சிரிக்கிறார்கள் அல்லது அழுக...