உள் நோயாளி
நான் எப்போதும்
உள் நோயாளி தான்
என் காதலை உன்னிடம்
சொல்ல நினைத்ததிலிருந்து.
கிடைத்தது
பல சமயங்களில்
கிடைத்தது என்பதை விட
ஏற்றுக்கொண்டேன்
என்பதே சரியாயிருக்கிறது
பலாச்சுளை
சிறு ஊடலுக்குப்பின்
அளவுக்கதிகமாக
அன்பைத்தெரிந்தே
பொழிவது போல
இந்தப் பலாச்சுளை
ஏகத்திற்கு இன்று தித்திக்கிறது.
எல்லோரும்
கொண்டாடப்படும் இடத்தில்
குழந்தையும் தெய்வமும் மட்டுமல்ல
எல்லோரும் தான்.
பெயர்
நான் வைத்த பெயர்
என் மகளுக்கு
பிடித்திருக்கிறதாம்
நீ வைத்த பெயர்
உன் மகனுக்குப்
பிடித்திருக்கிறதா ?
முதல் பாடல்
காலையில் கேட்ட
முதல் பாடல் போல்
நாள் முழுதும் சுழலும்
உன் ஞாபகங்கள் என்னுள்.
ஒரு பக்கக் காதல்
கடலை மடித்துக்கொடுத்த
காகிதத்தில் இருந்த
பாதிக்கவிதை போலிருக்கிறது
என் காதல்.
- சின்னப்பயல்
Comments
மிகவும் பிடித்தது : கிடைத்தது... பெயர்... (அனுபவம் தான்)