இரு சீன வைத்தியக் கதைகள்
அசோகமித்திரன்
சீனாவின் பாரம்பரிய வைத்தியம் உலகப் புகழ் பெற்றது. நான் ஒரு முறை வைத்தியம் செய்து கொண்டேன். என் வரையில் அவ்வளவு வெற்றிகரமாக முடியவில்லை.
கதைகளில் முதல் கதை நான் பள்ளிச் சிறுவனாக இருந்தபோது சாரணர் ‘காம்ப் ஃபைய’ரில் நிழல் நாடகமாக நட்த்தப்பட்டது. அது இரண்டாம் உலக யுத்த காலம். நாங்கள் நேரடியாக யுத்த களத்துக்கு போவதாகக் கற்பனை செய்து கொள்ளுவோம். எங்கள் ‘காம்ப்’ இரண்டு அல்லது மூன்று தினங்கள் நடக்கும். வெட்ட வெளியில் கூடாரங்கள் போட்டு, நாளெல்லாம் ஓய்ச்சல் ஒழிவில்லாமல் உழைப்போம். பொழுது சாய்ந்ததும் ‘காம்ப் ஃபையர்’ நடக்கும். ஆசிரியர்கள் உரை ஒரு மணி நேரம் இருக்கும். அதன் பிறகு சாரணர்கள் கலை நிகழ்ச்சி. ஒரு பாட்டு, ஒரு சிறு நாடகம் என மாறி மாறி ஒரு மணி நேரம் நடக்கும். அதன் பிறகு இரவு உணவு.
எங்கள் நிகழ்ச்சியில் மூன்று நடிகர்கள். சீன டாக்டர், சீன நர்ஸ், சீன நோயாளி. ஒருவன் ஒரு எலியை விழுங்கிவிடுகிறான். டாக்டர் முதலில் அவன் மண்டையில் ஒரு போடு போட்டு மயங்க வைக்கிறார். டாக்டருக்கும் நர்ஸுக்கும் சண்டை. நர்ஸ் முதலில் ஒரு ரம்பத்தை டாக்டரைப் பார்த்து எறிவாள்.டாக்டர் அதை வைத்து நோயாளியின் வயிறை அறுத்து அதைத் திரும்ப நர்ஸிடம் எறிவார்.அவள் ஒரு டவலை அவரிடம் எறிவாள். அவர் வெட்டின இடத்திலிருந்து ஓர் உளி, மண்வெட்டி,கடப்பாரை எனப் பல இரும்புப் பொருள்கள் எடுத்த பிறகு ஒரு எலியையும் எடுப்பார்.நர்ஸ் கைதட்டிப் பாராட்டுவாள்.அதன் பிறகு எடுத்த பொருள்களை நோயாளி வயிற்றில் திணிப்பார். நர்ஸ் ஒரு கோணி ஊசி எடுத்துத் தருவாள். படுத்துக் கிடக்கும் நோயாளி தலையில் மீண்டும் ஒரு போடு. அவன் விழித்து எழுந்து டாக்டருக்குப் பணம் கொடுத்து வெளியேறுவான். அன்று சீனா பிரிட்டிஷ் தரப்பு. இந்த நாடகத்தைப் பார்த்தால் ஜப்பான் பக்கம் போய் விடக்கூடும். நல்ல வேளை, எங்கள் பள்ளியில் சீன மாணவன் யாரும் கிடையாது.
நிழல் நாடகத்தில் முக பாவத்துக்கு இடம் கிடையாது. ஆனால் நிழல் நாடக வடிவத்தில் அற்புதம் செய்து பார்த்திருக்கிறேன். நடனக் கலைஞர் உதயசங்கர் புத்தர் பற்றி ஒரு முழு நீள நாடகம் சென்னையில் நட்த்தினார்.நிழல் நாடகத்துக்கு இவ்வளவு சாத்தியங்கள் உண்டா என்று ஆச்சரியமாக இருந்தது.
அடுத்த முறை இரண்டாம் கதை..
Comments