Skip to main content
கூழாங்கற்கள்

மணல் வீட்டைக் கட்டி
மாளிகை எனக் கொண்டாடுகிறது குழந்தை.
ஆர்ப்பரித்துத் தோழர்கள் அளித்த
கூழாங்கற்களால்
அகழியை அலங்கரித்து
அழகு பார்க்கிறது.

பிரபஞ்சத்துக்கு அப்பாலும்
வர்த்தகப் பரிமாற்றம்..
அன்றாடம் நாம் அனுப்பும்
புண்ணிய பாவங்களின் வடிவில்.

செல்வக் குவியலென நினைத்துச்
சேகரிப்பவற்றில்
செய்த நல்லன மட்டும்
கணக்கில் வருகின்றன.

பக்தியும் பவ்யமும்
மயங்க வைத்தக் கைத்தட்டல்களும்
வைர வைடூரியங்களானாலும்,
இருட்டத் தொடங்கியதும்
ஆட்டம் முடிந்ததென
ஆற்றங்கரையோடு குழந்தைகள்
விட்டு வந்து விடும்
கூழாங்கற்களாகிப் போகின்றன.
***

-ராமலக்ஷ்மி

Comments